பாடுநிலாவே ----பாகம் 14


காங்கேசனின் பெற்றோர், இசையாளனின் பெற்றோர், சகோதரிகளின் குடும்பம் என அனைவரும் மகிழ்வோடு புறப்பட்டனர்.
காங்கேசன் சாதனாவின் அருகில் நில்லாதபோதும் அவள் சென்ற இடமெல்லாம் அவன் கண்கள் சென்றது. அந்நந்த இடங்களில் அவள் அருகில் வந்து அந்த இடத்தின் வனப்பை, ரசனை சொட்ட விபரித்தான். தானே தன் கண்களினால் காண்பது போல ஆனந்தப்பட்டாள் சாதனா. ஆயுள் வரை இப்படியே தொடரக்கூடாதா என ஏங்கிய மனதின் எண்ணங்களை நினைத்த போது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அந்த நொடியில் தன் இலட்சியங்கள், தன் கடமைகள் என எல்லாமே மறந்துபோனது அவளுக்கு. காங்கேசனின் அன்பும் கரிசனையும் மட்டுமே தெரிந்தது அவளுக்கு.
பூத்துக்குலுங்கிய மலர்களின் அழகை தொட்டுப்பார்த்து ரசிக்கச்சொன்னான். அவ்வாறே செய்த சாதனாவும் குழந்தையாகி குதூகலித்தாள்.

போர் என்ற கோர தாண்டவத்தின் பின்னர் சிரிப்பு என்பதையே மறந்துவிட்டிருந்த தான், காங்கேசனின் வரவிற்குப்பின்னர் அதிகமாக எப்போதுமே சிரிப்பதை உணர்ந்தாள். இந்த உலகத்தின் காங்கேசனைப்போல தன்னை யாரும் நேசிக்கவில்லை என்பது, அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவன் தருகின்ற மகிழ்ச்சியை யாராலும் தந்துவிடமுடியாது என மனம் அடித்துச் சொன்னது. அதற்குமேல் சிந்திக்கவே பயமாக இருந்தது சாதனாவிற்கு. வேறிடம் செல்லலாம் என எண்ணியபடி திரும்பியவள், கல் ஒன்று தடுக்க தடுமாறி விழப்பார்த்தாள். அருகில் நின்ற, காங்கேசன், “அகல், சாதனா” என மெல்லக் கூறியது சாதனாவின் செவிகளிலும் விழுந்தது. உடனே திரும்பிய அகல்நிலா சாதனாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

பெரிதான ஒரு அவமானம் நிகழ்ந்துவிட்டது போல கூனிக்குறுகிய சாதனா மௌனமாக அமர்ந்துகொண்டாள். அவளது மௌனம் காங்கேசனின் மனதில் பெரும் சுமையை ஏற்றியது. அவளோடு பேசவும் முடியவில்லை, விலகிநிற்கவும் முடியவில்லை. அகலிடம் சாதனாவை கூடவே இருந்து பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு தாயாரிடமும் சாதனாவின் அருகில் இருக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.

மௌனமாக இருந்த சாதனாவின் மனதில் குற்றஉணர்வு குறுகுறுக்கத் தொடங்கியது. தன்னுடைய மௌனம் எல்லோருடைய மகிழ்ச்சியையும் பாதிக்கின்றது என்பதை எண்ணியதும் தன் மீது கோபமாக வந்தது. சுற்றி நிற்கும் அனைவரும் தன்மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்கள். அதிலும் காங்கேசனை சொல்லவே வேண்டாம். அவளது அன்பையும் நலனையும் மட்டும் தான் சிந்திப்பான்.

இவை எல்லாவற்றையும் யோசிக்காமல் தான் இவ்வாறு நடந்துகொள்வது முட்டாள்தனம் என எண்ணியவள், “அகல், காங்கேசன் எங்கே?” என்றாள்.
“அதோ அண்ணாவோட”, என்றவளிடம் “வரச்சொல்லேன்” என்றாள்.
சற்றுநேரத்தில் அவளருகில் வந்த காங்கேசன், மௌனமாக நின்றான். நிமிர்ந்து பார்த்த சாதனா, “என்னடா இப்பிடி உற்றுப்பார்க்கிறாய்?” என்றாள்.
அதிர்ச்சியில் உறைந்து போன காங்கேசன்,
“சாது நீ என்ன சொல்றாய்?” என்றான்.
“ஏன்டா உற்றுப்பாக்கிறாய் என்று கேட்டன், அதுக்கென்ன?” என்றாள்.
“உனக்கு எப்பிடி?”
“டேய் எங்கட நட்பு என்ன சாதாரணமானதா? ரொம்ப பலமானது” என்றாள் சிரித்தபடி.
கண்கலங்கிவிட சிரித்த காங்கேசனை அணைத்துக்கொண்ட இசையாளன், நண்பனின் காதில் இரகசியமாய் எதையோ கூறிவிட்டு நிமிர்ந்தான்.
“என்னடா சொல்றார் உன்ர நண்பன்?” என்றவளிடம்,
“அவன் சும்மா ---தமாஷ்” என்றான்.
மெல்லிய சிரிப்பலை அவளிடம்.

காங்கேசனின் பெற்றோர் பூரிப்புடன் பார்த்தனர். எப்போதுமே சாதனாவிடம் ஒருவகை அமைதி மட்டுமே குடியிருக்கும். படிக்கும் காலத்தில் அவளது மௌனம் மட்டுமே அவர்களுக்குத் தெரியும். ஒருவித இறுக்கம் நிறைந்த பெண்ணாகவே சாதனாவை எல்லோருக்கும் தெரியும். அவள் சிரிப்பது அபூர்வமானது, இப்போதெல்லாம் அவள் அடிக்கடி சிரிக்கிறாள் என எண்ணியதும் காங்கேசனுக்கு இதயம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

அவள் மீது ஏன் இவ்வளவு அன்பு என்பது அவனுக்கே புரிவதில்லை. அதிலும் சாதனா ஒருவிதமான சுபாவம் கொண்ட பெண். நெருக்கத்தை விரும்பாத தனிமை விரும்பி. அவன் மட்டும்தான் அவள் மனதில் இடம்பிடித்திருக்கிறான். அதனால் தானோ என்னவோ அவளது நெருக்கத்தை அதிகம் வேண்டுகிறது அவனது மனம். உள்ளம் தெளிவாகச் சொன்னது,

சாதனாவோடுதான் அவனுடைய வாழ்வு, “கணவனாக இல்லாவிட்டாலும் காவலனாகவேனும்.” அவளை நன்றாகப்பார்த்தவன், மறுபுறம் திரும்பிக்கொண்டான். இந்த மகிழ்ச்சியும் இந்த மனநிலையும் என்றும் நிலைக்கவேண்டும் என மனதுருகி பிரார்த்தித்துக் கொண்டான்.

தொடரும்

Powered by Blogger.