புதிய தலைமையை உருவாக்குவோம்: சி.வி.க்கு ஆனந்தசங்கரி அழைப்பு

தமிழ் மக்களின் வாழ்க்கையை சிறந்த முறையில் அமைப்பதற்கு புதிய தலைமையை உருவாக்குவோம். இதற்காக தமிழர் விடுதலை
கூட்டணிக்கு, முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் தலைமை தாங்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர் விடுதலை கூட்டணி, அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடவே தீர்மானித்துள்ளது. இதற்கான காரணத்தை அனைத்து தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் நன்கு அறிவார்கள்
ஆகவே, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைமையை ஏற்கும்போது அவருடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம்.
1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது, ஒன்றாக இணைந்து கட்சிகளுடன் செயற்பட்டோமே ஒழிய பங்காளிகளாக இருக்கவில்லை.
ஆகையால் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று அனைவரும் ஒரே கட்சியாக தமிழர் விடுதலை கூட்டணியை ஏற்று, புதிய நிர்வாகத்தையும் ஏற்படுத்தி தந்தை செல்வாவின் கனவை நனவாக்குவோம்.
அந்தவகையில் என்னைப் பொறுத்தவரையில், தமிழ் மக்களின் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட வேண்டுமே ஒழிய, பதவி ஆசை ஏதும் எனக்கு கிடையாது.
இதேவேளை சுயநலன் கருதி சிலர் செயற்பட்டமையாலேயே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. ஆகையால் தனிப்பட்ட காரணங்களை மறந்து மக்களுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம்” என அவ்வறிக்கையில் ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.