கொடிய வாா்த்தைகளைக் கொட்டியவா் இன்று கிழக்கின் ஆளுநர்.


மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது என வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என கடந்த காலங்களில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இவ்வாறு கருத்துத் தெரிவித்த ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சீ.வி.கே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த செயற்பாடு இன குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்க்கப்படும். எனவே, ஐக்கியத்திற்கு வித்தான ஒருவரை ஆளுநராக நியமிப்பதே சிறந்தது. அதனை ஜனாதிபதி கருத்திற்கொண்டு ஒருவரை நியமிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் சிங்கள மொழி பேசும் ஆளுநரே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்போது, தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது.

ஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம்.

இன குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது.

மற்றொரு விதத்தில் பார்த்தால், இன குரோதத்தை வளர்க்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவரை ஐக்கியத்திற்கு வித்தான ஒருவராக பார்க்க முடியாது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணத்தில் அதிகாரங்களை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதற்கு எதிராகவே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மாற்றங்கள் நிகழ வேண்டும். அந்த மாற்றம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேல் மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். முஸ்லிம் என்ற வகையில் அது வரவேற்கத்தக்கது.

கிழக்கில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் பார்த்தால், வடக்கிலும் ஒரு தமிழரை நியமிப்பதும் சிறந்தது. வடக்கிலும் தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும்.

அதேவேளை, வட மாகாணத்திற்கென நியமிக்கும் ஆளுநரை, மாகாணத்தின் நிர்வாகம் தொடர்பாக தெரிந்து கொண்டவராகவும், தமிழ் மக்களோடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஒத்துழைத்து செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.

கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களையோ, கடந்துசென்ற மாகாண சபை உறுப்பினர்களையோ கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒத்துப் போகக்கூடிய அறிவாற்றல் நிறைந்ததுடன், சட்டம் சம்பிரதாயம் மற்றும் நிர்வாகம் தெரிந்த ஒருவரை தேர்ந்தெடுப்பது பெரிய பிரச்சினை அல்ல.

விசேடமாக வடமாகாணத்திற்கு நியமிக்கப்படுபவர் தமிழ் மக்கள் அதிகாரப் பகிர்வை நோக்கிய அரசியல் நகர்விற்குள் கூட்டமைப்பு இருக்கின்றதென்பதை உணர்ந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். அது சிங்களவராக இருந்தாலும் கூட அவ்வாறான ஒருவரை நியமிப்பதே சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.