எடப்பாடி Vs ஐ.ஏ.எஸ் - நிஜப் பின்னணி!

“அதிமுக அமைச்சர்களும், எம்.பிக்களும் திடீரென சுகாதாரத் துறை செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணணுக்கு எதிராக போர்க்கொடி தூக்க... ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் களமிறங்கியிருக்கிறது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்துக்கு தலைவராக இருப்பவர் சோமநாதன். செயலாளராக இருப்பவர் எம்.எஸ்.சண்முகம். ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதுமே, எம்.எஸ்.சண்முகம், ஐ.ஏ.எஸ்.தான் ராதாகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘இதுக்கு நீங்க தனிப்பட்ட முறையில் எதுவும் விளக்கம் கொடுக்க வேண்டாம். சங்கத்தின் மூலமாகவே நாங்க விளக்கம் கொடுக்கிறோம். நீங்க அமைதியாக வேடிக்கை பாருங்க...’ என்று சொல்லியிருக்கிறார்.
அதன் பிறகு கோயம்பேடு அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள மீட்டிங் ஹாலில்தான் திடீர் கூட்டம் நடத்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய சண்முகம், ‘ இது ராதாகிருஷ்ணனுக்கு வந்த பிரச்சினையாக நினைச்சுட்டு நாம விட்டுட்டுப் போயிட முடியாது. இன்னைக்கு அவருக்கு வந்தது நாளை நமக்கும் வரலாம். அதிகாரிகள் என்பவர்கள் டம்மியானவர்கள்னும் அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாதுனும் நாம ஆட்டி வெச்சா ஆடுற பொம்மைகள் அவர்கள் என்ற நினைப்பிலும் ஆட்சியாளர்கள் இருக்காங்க. எவ்வளவு அடிச்சாலும் அமைதியா இருப்பாங்க. திருப்பி பேச மாட்டாங்கன்னு நினைக்கிறாங்க. நாம அப்படி இல்லை என்பதை காட்ட வேண்டிய நேரம் இது.
சுகாதாரத்துறைச் செயலாளருக்கு எதிராக அமைச்சர் பொதுவெளியில் பேசியிருப்பது அரசு அமைத்த ஆறுமுகசாமி விசாரணையை பாதிக்கவே வாய்ப்பிருக்கு. இதெல்லாம் அவங்களுக்கு தெரியுமா? ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி தேவையான விளக்கத்தை அளித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அளித்த மருத்துவத்துக்கு ராதாகிருஷ்ணன் எப்படி பொறுப்பாக முடியும்? அந்தம்மாவுக்கு என்ன சிகிச்சை கொடுத்தாங்க என்பதை கூட இருந்து கவனிக்கிறது அவரோட வேலை இல்லை. ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக முடிவு செய்தது மருத்துவர்கள் தானே தவிரச் சுகாதாரத்துறைச் செயலாளருக்கு அதில் பங்கு இல்லை.
மேலும், அதிகாரிகள் அமைச்சர்களுக்கும் சட்டத்துக்கு உட்பட்டுத் தான் செயல்படுகின்றனர். பொதுவெளியில் அமைச்சர் இப்படிப் பேசுவது சட்ட நடைமுறையைப் பாதிக்கும் என்பதை நாம ஆணித்தரமாக எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். இதை நாம வெளிப்படையாக பேசினால் அரசுக்கு எதிராக செயல்படுறோம் என்று கூட சொல்லுவாங்க. அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை... சொல்லித்தான் ஆகணும்..’ என்று பேசியிருக்கிறார்.
சண்முகம் சொன்ன கருத்தை எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமே வரவேற்றிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கூட்டத்துக்கு ராதாகிருஷ்ணன் வரவில்லையாம். அதன் பிறகு இந்த விஷயங்களை எல்லாம் தீர்மானமாக நிறைவேற்றியதுடன், அதை தமிழக அரசின் தலைமை செயலாளரிடமும் கொடுத்திருக்கிறார்கள்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் போட்ட தீர்மானத்தை தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனிடமும் கொடுத்தபோது, ‘இது ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட பிரச்னையாக பார்க்காதீங்க. நம்மில் ஒருத்தருக்கு ஏற்பட்ட பிரச்னையாக பாருங்க. இவ்வளவு நாளாக தலைமேல தூக்கி வெச்சு கொண்டாடியவரைத்தான் இப்போது தூக்கிப் போட்டு மிதிக்கிறாங்க. இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம். அதனால் இதை எதிர்த்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் நாம இருக்கோம்’ என்று சங்கத்தின் சார்பில் தலைமைச் செயலாளரிடம் சொன்னார்களாம்.
‘இதை நான் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போறேன்...’ என கிரிஜா வைத்தியநாதன் சொல்ல... ‘நாங்க அவரோட கவனத்துக்குப் போகணும்னு உங்களைப் பார்க்க வரலை. உங்க கவனத்துக்கு வரணும்னுதான் உங்ககிட்ட கொடுக்கிறோம். நீங்களும் கவனமாக இருங்க...’ என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள்.
இதெல்லாம் எடப்பாடி பழனிசாமி கவனத்துக்கும் போயிருக்கிறது. இதுபற்றி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசியிருக்கிறார் முதல்வர். ‘ஏற்கனவே குட்கா பிரச்னை வந்தபோதும் உங்களைத்தான் எதிர்க்கட்சிகள் எல்லாம் ராஜிநாமா செய்யச் சொன்னாங்க. நீங்க அப்பவும் பண்ணல. இப்ப அம்மா மரணம் தொடர்பான சர்ச்சையிலயும் உங்க அமைச்சகம்தான் அடிபடுது’ என சொல்லியிருக்கிறார். உடனே விஜயபாஸ்கர், ‘அதுக்காக என்னை ராஜினாமா பண்ணச் சொல்றீங்களா? அப்படின்னா நம்ம கேபினட்ல இன்னும் சில அமைச்சர்களும் சர்ச்சையில சிக்கியிருக்காங்க. அவங்களையும் ராஜினாமா பண்ணச் சொல்லுங்க’ என்று பதில் சொல்லியிருக்கிறாராம்.
முதல்வரோ, ‘ஹெல்த் செக்ரட்டரி ரொம்ப வருஷமா இதே பதவியிலதான் இருக்காரு. இந்த சர்ச்சை நேரத்துலயாவது அவரை சுகாதாரத் துறையிலேர்ந்து மாத்திடுவோம். என்ன சொல்றீங்க?’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கும் விஜயபாஸ்கர் மறுத்துவிட்டார். இதற்கெல்லாம் பிறகுதான் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லோரும் அணி சேர்வதை அறிந்த முதல்வர், இதுபற்றி வைத்திலிங்கத்திடம் பேசியிருக்கிறார். உடனே வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களான கடலூர் எம்.பி. அருண்மொழித் தேவன், அரக்கோணம் எம்.பி. ஹரி, காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. முருகுமாறன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்திருக்கிறார். 
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.