விஸ்வாசம்: குடும்பங்கள் கொண்டாடும்!

அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்துடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ள இந்தப் படம் குறித்து இதன் படத்தொகுப்பாளர் ரூபன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.


படத்தின் உருவாக்கத்தில் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் பணியாற்றினாலும் அதன் இறுதிவடிவத்தை படத்தொகுப்பாளர் மட்டுமே அறியமுடியும். அந்தவகையில் ரூபன் விஸ்வாசம் படம் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் படங்களுக்கு அவரது ரசிகர்களைக் கடந்து குழந்தைகள், பெண்கள் கூட்டம் எப்போதும் உண்டு. அஜித் படங்களில் ஆக்‌ஷன், மாஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் விஸ்வாசம் படத்தில் மாஸ் காட்சிகளோடு குடும்பங்கள் கொண்டாடும் வகையிலும் உருவாகியுள்ளதாக ரூபன் தெரிவித்துள்ளார். “பண்டிகை நாள்களில் வெளியாகும் விஸ்வாசம் படத்தில் ஒவ்வொருவரும் ரசித்துப் பார்க்கும் நிறைய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதை ஆக்‌ஷன் காட்சிகளும், உணர்வுப்பூர்வமான காட்சிகளும் கலந்து உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.

விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகிப் பல சாதனைகளைப் படைத்துள்ள நிலையில் அதை உருவாக்கிய அனுபவம் பற்றி ரூபன் கூறியுள்ளார். “பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவோ குறைவாகவோ இருந்துவிடாமல் சமநிலையில் இருக்க வேண்டும் என்று நினைத்து டிரெய்லர் கட் செய்தது மிகவும் சவாலாக இருந்தது. தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோரின் ஆலோசனைகளை ஏற்று பல வெர்சன்களை உருவாக்கினேன். பார்வையாளர்களின் ரசனைக்கேற்ப டிரெய்லரை உருவாக்கியிருப்பது இப்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் தனக்கு மிகவும் பிடித்த காட்சியாக மழையில் நனைந்தபடி அஜித் நடித்த சண்டைக் காட்சியை ரூபன் குறிப்பிட்டுள்ளார். “ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதுடன் குடும்பங்களை கவரும் விதத்தில் படம் உருவாகி ஒட்டுமொத்தமாக நல்ல சினிமா அனுபவத்தைத் தரும்” என்று கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.