ராதாகிருஷ்ணன் பின்னால் தினகரன்: அதிமுக எம்.பி.க்கள்!

சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்புலத்தில் தினகரன் இருப்பதாக அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


ஜெயலலிதா மரணம் மர்மம் தொடர்பாக பேசிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் ஆகியோரை விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தீர்மானம் இயற்றிய ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், அமைச்சர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு சி.வி.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக எம்.பி.க்கள் அருண்மொழித் தேவன், கோ.அரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காட்டுமன்னார் கோயில் முருகுமாறன், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் இன்று (ஜனவரி 7) தலைமைச் செயலகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய அருண்மொழி தேவன், “ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தை கூட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கட்டுப்படுத்த வேண்டுமென தீர்மானம் இயற்றியிருப்பது எவ்வகையில் நியாயம்? ராதாகிருஷ்ணனின் பின்புலம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார். சேத்தியாதோப்பில் தினகரன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ராதாகிருஷ்ணனை உயர்வாக, அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். எனவே அந்த பின்புலம் தற்போது வெளிப்பட்டுள்ளது” என்று சந்தேகம் தெரிவித்தார்.

தொடர்ந்து அரி பேசுகையில், “ஜெயலலிதா நலம்பெற வேண்டுமென நாங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த நிலையில், இந்தியாவில் நல்ல மருத்துவர்கள் உள்ளனர், இந்த சிகிச்சையே போதும் என்ற நிலைப்பாட்டை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எடுத்ததற்கு பின்னணியில் இருந்தது யார்? இந்த கேள்வி மக்களிடத்தில் செல்ல வேண்டும். இது அதிமுக தொண்டர்களுடைய கருத்து” என்று தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசு எந்திரத்தின் இதயம் போன்றவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் என தினகரன் கூறியதாகக் குறிப்பிட்ட காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன், இதயத்தில் நோய் ஏற்படும்போது சிகிச்சை செய்வதில்லையா என கேள்வி எழுப்பினார்.

ராதாகிருஷ்ணனை குறிப்பிட்டு பேசும்போது அனைவரும் ‘கால்நடை மருத்துவர் ராதாகிருஷ்ணன்’ என்றே கூறினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.