ஸ்டெர்லைட்: அரசைத் தொடர்ந்து வைகோ மேல்முறையீடு!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று மேல்முறையீடு செய்திருக்கிறார்.


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். அனைவரையும் உலுக்கிய இந்த சம்பவத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியபோதும், தமிழக அரசு அதை செவிசாய்க்கவில்லை. ஐ.நாவு க்கே சென்றாலும் ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில் அரசின் நடவடிக்கையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டுமென்று, அனுமதி வழங்கி உத்தரவிட்டது பசுமைத் தீர்ப்பாயம். அதோடு ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தது.

இந்தப் பின்னணியில் இன்று (ஜனவரி 7) மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

இதுகுறித்து இன்று மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையினால் காற்று, நீர், நிலம் மாசுபடும் என்றும், அதனால் அப்பகுதி மக்களின் உடல்நலனுக்கு பெருங் கேடு விளையும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் கடந்த 22 ஆண்டுகளாக பொதுமக்கள் நலனுக்காக போராடி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15.12.2018 அன்று டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து இன்று 07.01.2019 உச்சநீதிமன்றத்தில் வைகோ மேல் முறையீடு செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo#Vaiko

No comments

Powered by Blogger.