பிரதமரின் சொத்துக்கள் பிரகடனத்தை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் தடை

2015 மற்றும் 2016ம் ஆண்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கெதிராக ஜனாதிபதி செயலகம் மேன்முறையீடு செய்யும் தீர்மானம் தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷல் ஸ்ரீ லங்கா நிறுவனம் அதிருப்தியடைகின்றது.
ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக ஒபேசேகர கூறுகையில் “ஜனாதிபதியின் புதிய வருடத்தின் வாக்குறுதிக்கிணங்க ஊழலுக்கெதிராக போராடுவதற்கு உறுதியளித்துள்ளதுடன் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி செயலகத்தால் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் விபரங்களை பொதுமக்களின் பார்வைக்கு பிரகடனப்படுத்தப்படுவதைத் தடுக்க முயற்சி செய்வது ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. சமகாலத்தில் தாமாக தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிடுவது ஊழலுக்கெதிராக செயற்படுவதில் முக்கியமாக இருப்பினும் நடைமுறையில் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்துக்கள் பிரகடனத்தை வெளியிடுமாறு கோரி முதலாது விண்ணப்பத்தை 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் விண்ணப்பித்திருந்த போது அந்த விண்ணப்பம் ஜனாதிபதி அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டமானது பொதுச்சொத்துக்களை தமது தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கும், ஊழலை தடுப்பதற்குமான பலமானதொரு கருவியாக செயற்படுகின்றது என்பதை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவை வெளியிட்டதன் பின்னர், அவ்வுத்தரவுக்கு எதிராக ஜனாதிபதி அலுவலகத்தின் மேன்முறையீடு செய்வதற்கான உரிமையை ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
அதேவேளை, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கு சவால் விடுப்பதானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு உட்பட சொத்துக்கள் பிரகடனத்தை பொதுமக்களின் கைகளில் கிடைக்கப்பெறுவதற்கு வழங்கப்பட்ட உத்தரவாதத்திற்கும் சவால் விடுப்பதாக அமைந்துள்ளது.
ஒபேசேகர கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தாமாகவே வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தமது சுய விருப்பத்துடன் சொத்துக்கள் தொடர்பான பிரகடனத்தை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் அழைப்பு விடுக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.