தை மாதம் - கனடிய தமிழரின் மரபுரிமை மாதமாக அறிவிக்கப்பட்டதன்பின்னணி:

பல இனங்களையும் தன்னகத்தே கொண்டு அவற்றின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றுக்கு மதிப்பளித்து சகல உரிமைகளோடும் வாழ அனுமதிப்பது கனடா நாட்டின் சிறப்பாகும்.


இந்த கனடிய தேசத்தில் 1950-களில் இருந்தே தமிழர் குடியேற தொடங்கி, இன்று 3 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர். தமிழர் செறிந்து வாழும் Ontario மாகாணத்தில் அதன் வளர்ச்சிக்கு தமிழரின் பங்கு இருந்து வருகிறது. தமிழரின் பங்களிப்பை பிரதேச, மாகாண, சமஷ்டி அரசுகளுக்கு உணர்த்தும் விதமாகவும் அவற்றை அங்கீகரிக்கச் செய்யும் விதமாகவும் தமிழர் செயற்பாடுகளும் அமைந்து வருகின்றன.

தமிழரின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் தை மாதத்தில் வருகிறது. இந்த நாள் - உழவர் திருநாள், திருவள்ளுவர் திருநாள், தை முதல் நாள், நன்றி தெரிவிக்கும் நன்னாள் என்று பலவாறாக சிறப்பிக்கப்படுகிறது. தமிழின் பெருமையாம் திருவள்ளுவத்தை தந்த திருவள்ளுவர் பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளை சிறப்பிப்பது தமிழை சிறப்பிப்பதற்கு ஈடாகும். ஆக, தமிழ் மொழியை சிறப்பிக்கவும், தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு மற்றும் காலங்காலமாக நாம் கடைப்பிடித்து வரும் மரபுசார் விடயங்கள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து அவற்றை மற்றோரும், எமது அடுத்த சந்ததியினரும் அறிந்து கொள்ளவும் தெரிவு செய்யப்பட்ட மாதம், தை மாதம் - தமிழர் மரபுரிமை மாதம்.

இந்த தமிழர் மரபுரிமை மாதம் கடைபிடிக்கப்பட Markham தமிழர் அமைப்பு உட்பட 20க்கு மேற்பட்ட தமிழர் அமைப்புக்களைக் கொண்ட தமிழர் மரபுரிமை மாத ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ், பலரது அயராத முயற்சி இருந்திருக்கிறது.

இதன் கால அட்டவணை பின்வருமாறு:

Dec 2009 - முதற்படியாக நீதன் சாண் அவர்கள் யோர்க் பிராந்திய பாடசாலை சபையின் அறங்காவலராக இருந்த காலப்பகுதியில், பல அமைப்புகளும் முதன் முதலில் கூட்டப்பட்டன.

Jan 2010 - தமிழர் மரபுரிமை மாதம் முதன்முதலில் கடைப்பிடிக்கப்பட்டது.

Jan 2011 – Markham, Toronto, Ajax, Pickering நகரங்கள் - தை மரபுரிமை மாதம் அறிவிப்பு

Dec 13, 2012 – York பிரதேச சபை அனுமதி

Jan 31, 2013 - ராதிகா சிற்சபேசன் அவர்களினால் தனி நபர் மசோதா (Bill C-471) ஒன்று சமஷ்டி நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

Mar 25, 2014 - Ontario மாகாணம் அங்கீகரிப்பதாக (Bill - 156) சட்டம் இயற்றப்பட்டது (Tamil Heritage Month Act 2014)

Dec 8, 2014 – Durham பிரதேச சபை அனுமதி

Oct 28, 2015 – Toronto மாவட்ட பாடசாலை சபை அனுமதி

2016 - கரி ஆனந்தசங்கரி அவர்களினால் தனி நபர் பிரேரணை ஒன்று (M-24) சமஷ்டி நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

May, 20 & Sep 29, 2016 அது தொடர்பான வாதங்கள் இடம்பெற்றன

Oct 05, 2016 - சமஷ்டி அரசால் தை மரபுரிமை மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் நகர, பிரதேச, மாகாண, சமஷ்டி அனைத்து மட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தை மாதம் தமிழர் மரபுரிமை மாதமாக சிறப்பாக கடைபிடிக்கப்பட வழியேற்பட்டுள்ளது.

கனடிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பெரு விழாவாக தை மரபுரிமை மாதம் சிறப்பிக்கப்பட உறுதுணையாக விளங்கிய திரு. நீதன் ஷான், திரு. லோகன் கணபதி, செல்வி. ராதிகா சிற்சபேசன், திரு. கரி ஆனந்தசங்கரி உட்பட தமிழர் மரபுரிமை மாத ஒருங்கிணைப்புக் குழுவின் கீழ் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது எமது கடமையாகும்.

No comments

Powered by Blogger.