விகடன் விருது பெறும் ஈழப்பெண்.

எழுத்தாளுமை என்பது வாசகர்களின் மனதை வசீகரித்து அழைத்துச்செல்லும்
ஆளுமை மிக்க கலை. மனித உணர்வுகளை,

சூழ்நிலைகளின் தன்மைகளை உணர்த்தி உணர வைத்து அழைத்துச்செல்லும் கைங்கரியம் உள்ளவர்களாலேயே எழுத்தாற்றலில் மேம்பட்டு ஒளிர முடியும்.
அந்த எழுத்தாளுமையும் ஆற்றலும் நிரம்பப் பெற்றவர்களில் ஒருவராக ஈழத்தைச்சேர்ந்த
மூத்த பெண் படைப்பாளர் தமிழ்நதி ( கலைவாணி)  அவர்கள் இருப்பது தமிழிற்கு கிடைத்த பெரும்பேறு ஆகும்.
                ஈழத்தில் ஏற்பட்ட காலப்பிறழ்வு, போர்க்குழப்பங்கள், அரசியல் குழப்பங்கள் காரணமாக அகதியாக புலம்பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் தஞ்சமடைந்த மூளைசாலிகள் யாவரும் தோன்றித்துலங்க வாழ்ந்த வரலாறில்லை. புலம்பெயர் தேசத்தின் நெருக்கடிகள், வாழ்வியல் மாற்றங்களோடு போராடி,  தேசத்தையும் தேசத்து மீதான பற்றுதலையும் தம்மால் முடிந்தவரை பல்வேறு வகையில் வெளிப்படுத்தும் ஆயிரமாயிரம் உறவுகளில்
தமிழ்மொழியைப் பற்றிப்பிடித்து மொழியோடு கைகோர்த்து,  மொழியையும் மொழிக்குரியோரின் வாழ்வியலையும்,  புலம்பெயர் தேசத்தில் அவர்கள் பெற்றுக்கொண்ட புதிய பழக்கவழக்கங்களில் மூழ்கிப்போய் வழிதவறும் நடத்தைக்கோலங்களையும்,
 அழகான தெளிந்த வசன நடையோடு வாசகர்களை அழைத்துச்செல்வதில் படைப்பாளர் வெற்றி கண்டுள்ளார்.

 " மாயக்குதிரை " சிறுகதைத்தொகுப்புக்குள்
1.தாழம்பூ
2.நித்திலாவின் புத்தகங்கள்.
3.மாயக்குதிரை
4.மனக்கோலம்.
5.மலைகள் இடம் பெயர்ந்து செல்வதில்லை.
6.கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி
7.காத்திருப்பு
8.கடன்
9.தோற்றப்பிழை
10.மெத்தப்பெரிய உபகாரம்
       போன்ற பத்துக்கதைகள் உள்ளடக்கமாக உள்ளன. ஒவ்வொரு கதையிலும் மனித மனங்களுக்குள் ஒளிந்திருக்கும் பிரதிபலிக்காத கபட எண்ணங்களையும் எழுத்தாளர் தொட்டுக்காட்டாமல் விடவில்லை. இதற்கு " நித்திலாவின் புத்தகங்கள் " சிறுகதை நல்லதொரு உதாரணம். பெற்ற தாயின் இறப்பின் போது யாரோ ஒருவரின் தோளில் சாய்ந்திருந்து அழும் நித்திலா அவ்வளவு துயருக்கு இடையிலும்  வேலைக்குப்போகத்தேவையில்லை என மனதுக்குள் நினைக்கிறாள். சந்தோசம் அடைகிறாள்.
     "மாயக்குதிரை "என்ற கதை சூதாட்டத்திற்கு அடிமையான ஒரு பெண்ணின் மனநிலையோட்டத்தையும் செயல்களையும் வெளிப்படுத்தி நகரும் கதை.
   "கறுப்பன் என்றொரு பூனைக்குட்டி "என்ற கதை மூடநம்பிக்கைகள் பற்றியதாக நகர்கிறது.
"மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை" என்ற கதையில் ஈழத்தின் நிலப்பறிப்பையும் மாற்றங்களையும் சிதம்பரம் என்ற ஆளுமை கொண்ட ஆச்சியின் நினைவுகளோடு வாழ்ந்த நிலத்தின்  வாசனையைத்தேடி நகரும் புலம்பெயர்ந்த பெண்ணின் நிலம்பெயரா நினைவுகளைச் சுமந்த  இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த கதை.
     " சிதம்பரம் ஆச்சி எப்பிடிச் செத்தவா? அந்தக்கேள்வியை பரமேஸ் அன்ரியிடம்  கடைசிவரை நான் கேட்கவில்லை. ஆச்சி கடைசிவரை வாழ்ந்து மூப்படைந்து இறந்து போனார் என நம்புவது தான் எனக்கு நல்லது"
           என கதையை முடித்து,  சிதம்பரம் ஆச்சியின் இறப்பை தேட வைப்பதில் வெற்றியடைந்துள்ளார்.
            வாசகர்களுக்காகவே  இவற்றை வாசகர்களின் தூண்டுதலுக்காக பதச்சோறாக எடுத்துக்காட்டிட்டியுள்ளேன்.
          ஈழத்தவர்களால் எழுதப்படும் எழுத்துக்களில் போரும் அதனால் ஏற்பட்ட துயரங்களும் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. காலத்தின் பிரதிபலிப்புகளே இலக்கியங்கள். அந்தவகையில் ஈழப்போரும், புலம்பெயர் தேசத்தின் இயல்புகளும் தமிழ்நதி அவர்களின் கதைகளிலே பிரதிபலிப்பதை தவிர்த்திட முடியாது.
          அரசியல் சார்ந்தும் சமூக நடத்தைகள் சார்ந்தும் அவரது படைப்புகள் கலைத்துவம் குறையாமல் எழுதப்படுவது பெரும் வரமாகும். ஈழத்து பெண் தமிழ்நதி அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் விருது கிடைப்பதையிட்டு மகிழ்வடைகிறோம்.
           இது 2018 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட சிறுகதைத்தொகுப்புகளில் சிறந்த தொகுப்புக்கான விருது பெறும் சிறுகதைத்தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. படைப்பாளர்  இன்னும் பல விருதுகள் இவ்வாண்டில் பெற வாசகர் சார்பில் பாராட்டி வாழ்த்துவதில் மகிழ்வடைகிறேன்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.