நேசப்பறவைகள்!! சிறுகதை

மாலைப் பொழுது மெல்ல மயங்கிக்கொண்டிருந்தது.
பறவைகள் கூடடைவது போல அந்தப் பெரிய வீட்டில் நுழைந்துகொண்டிருந்தனர் பிள்ளைகள் நால்வரும். தனியார் கல்விநிலையத்திலிருந்து இருவரும் விளையாட்டுத் திடலில் இருந்து இருவருமாய். தாயின் மென்மையான கோபப்பார்வையில் எதுவும் பேசாது உள்ளே சென்றனர். முதல் மூன்றும் ஆண் சிங்கங்கள், அந்த வீட்டின் கடைக்குட்டிதான் பதஞ்சலி.

“அண்ணா, அப்பா இன்னும் வரலைடா” கிசுகிசுப்பாய் அண்ணன் ஆத்மீகனிடம் மொழிந்தாள்.
தங்கையின் வாய்ப்பேச்சும் அதற்கேற்ற விழிப்பேச்சும் அவனுக்குள் பாசத்தை பிரசவிக்க “ ம்—ம், வரலைதான், வா, உள்ள போயிடுவம்” கைபற்றி இழுத்துக்கொண்டு உள்ளே விரைந்தான். விளையாட்டுத்திடலில் கும்மாளம் போட்டவர்கள் இவர்கள் இருவரும் தான். அதுமட்டும் இல்லாது, வேறொரு வம்பையும் வாங்கிக்கொண்டே வந்திருந்தனர். அதனாலேயே சத்தமில்லாது வந்து புகுந்தனா்.

அந்த வீட்டில் அண்ணன்கள் மூவருக்கும் பதஞ்சலி செல்லத்தங்கை என்றாலும் கடைசி அண்ணன் ஆத்மீகனுக்கு அவள் என்றால் உயிர். அவளுக்கும் அதேதான். மற்றய அண்ணன்களில் பாசம் என்றால், அவனில் மட்டும் அவளுக்கு உயிர் வரையான உறவு.
குண்டூசி விழுந்துவிடும் ஒலிகூட கேட்கும் அளவிற்கு வீடு அமைதி காத்தது. அந்த அமைதி அப்பாவின் வருகையை கட்டியம் கூறிவிட்டது. வந்ததும் வராததுமாய் “டேய், ஆத்மன், வாடா இஞ்ச” என்றார் உறுமலோடு.

நடுக்கத்திலும் பதற்றத்திலும் மெல்ல எழுந்தவனை இறுகபற்றியபடி தானும் தொடர்ந்தாள் பதஞ்சலி.
“அவளை விடடா” அப்பாவின் உறுமலில் தங்கையின் கையை விடுவிக்க அவன் போராட, அவளோ, இன்னும் இறுக்கமாய் பற்றிக்கொண்டாள் அண்ணனின் கரத்தை.
“முன்வீட்டுப் பெடியனுக்கு ஏன்ரா, கல்லால அடிச்சனி” கேட்டபடி எழுந்தவரிடம், “அது---அவன் ----தங்கச்சிக்கு அடிச்சுப்போட்டான்” அப்போதும் குறையாத கோபத்தோடு அவனது வார்த்தைகள்.

‘ அவரது செல்ல மகளுக்கு அடித்தான்” என்ற வார்த்தை அவருக்குள்ளும் கோபத்தை உண்டாக்கியதென்னவோ உண்மைதான், ஆனாலும் மகனிடம் காட்டிவிடக்கூடாது என்னும் வைராக்கியத்தோடும் கண்டிப்பான வாத்தியார் என்ற கர்வத்தோடும், பொறுமையாய்,

“அதுக்கு, நீ கல்லால அடிப்பியோ?” உக்கிரம் சற்றே தணிந்திருந்தது வார்த்தையில்.
சட்டென்று தலைகவிழ்ந்திருந்த மற்ற இருவரும் தலையை நிமிர்த்தினர். “அவன் தங்கச்சிக்கு அடிச்சா நாங்கள் பேசாம இருக்கோணுமோ?” மூத்தவன் சீராளன் கேள்விக்கணையை வீசிவிட்டு அமைதியானான்.
மூத்த மகனை நிமிர்ந்து பார்த்த சிற்றம்பலத்தார், எதுவும் பேசாமல், இரண்டாவது மகனிடம், “அந்த கம்பியில கொழுவிக்கிடக்கிற பிரம்பைக்கொண்டுவாடா, பகலவன்” என்றார்.
அவன் எழுந்துசென்று பயத்துடனே பிரம்பை எடுத்துவந்தான். அவனை முறைத்தபடி பார்த்த மனைவி அன்னபூரணியை முறைத்தவர், “நீ என்ன உன்ர குழப்படிக்காற மகனுக்கு, வக்காலத்தோ” என்றார்.

பிரம்பை தந்தையிடம் நீட்டியபடியே, “அப்பா, அடிக்காதேங்கோ” தழுதழுத்தான் பகலவன்.
இது எதையும் கணக்கிலும் எடுக்காது ‘எனக்கென்னபோச்சு’ என்பதுபோல நின்றுகொண்டிருந்தான் ஆத்மீகன்.
மகனின் குற்றத்தை இன்று தண்டிக்காதுவிட்டால் அவன் தொடர்ந்து இதே தவறைச் செய்யலாம் என எண்ணிய தந்தையார் தடியை ஓங்கியதுதான் தாமதம், அண்ணனின் கையின் மீது தன் கையை வைத்துவிட்டாள் பதஞ்சலி, அவசரமாய் ஓங்கிய கையை நிறுத்தமுடியாதுபோக, தடி அவளது பிஞ்சுக்கரத்தை பதம் பார்த்தது.
“அண்ணா----“ சுருண்டபடியே அண்ணனைக் கட்டிக்கொண்டாள்.

அனைவரும் கூடிவிட்டனர் என்றாலும் தந்தையை முறைத்தபடியே பார்த்தான் ஆத்மீகன். அவனது பார்வையின் உக்கிரத்தில் தலை கவிழ்ந்துகொண்டார் சிற்றம்பலத்தார். அந்தப்பார்வையில் தான் அவன் தங்கை மீது கொண்டிருந்த பாசமும் புரிந்தது, பக்கத்து வீட்டுப் பையன் கல்லெறிபட்ட காரணமும் தெளிவாகத் தெரிந்தது.
தந்தையார் அப்படியே கதிரையில் சாய்ந்துவிட்டார் யோசனையோடு.

வீடே கூடிநின்று பதஞ்சலிக்கு உபச்சாரம் செய்துகொண்டிருந்தது. அவளது கரத்தைப் பற்றிக்கொண்டிருந்த ஆத்மீகனின் விழிகளில் மட்டும் அருவியாக வழிந்துகொண்டிருந்தது கண்ணீர்.
அதே கண்ணீர் இதயத்தில் வழிந்துகொண்டிருந்தது சிற்றம்பலத்தாருக்கு.

முற்றும்.

கோபிகை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.