மாமல்லபுரம் சிற்பங்களைக் கண்டு இரசித்த மாற்றுத்திறனாளிகள்!

20 ஆண்டுகளுக்கும் மேலாக நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்த மாற்றுத்திறனாளிகளான மனநோயாளிகள் 90 பேரை, தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் ஏராளமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே பாரமாக கருதுவதால், பலபேர் ஆண்டு கணக்கில் காப்பகத்திலேயே இருக்கின்றனர்.

இதில் சிலர், வயது முதிர்வின் காரணமாக வெளி உலகைக் காணாமலேயே இறந்து விடுவதும் உண்டு. இந்நிலையில், மனநோயாளிகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, வெளி உலகை பார்த்து ரசிக்கும் வகையில் அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்தது.

இதையடுத்து காப்பக நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று, 20 ஆண்டுகளுக்கும் மேலாக காப்பகத்தில் உள்ள 90 பேரை இந்தச் சுற்றுலாவுக்கு தேர்வு செய்தது.

இதையடுத்து, சீருடையில் இருந்த அவர்களுக்கு சாதாரண உடை அணிவிக்கப்பட்டு, சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் பாதுகாப்புக்காக, காப்பக செவிலியர்கள் மற்றும் பாதுகாவலர்களும் உடன் சென்றிருந்தனர்.

மாமல்லபுரம் சென்ற அவர்கள், கடற்கரைக் கோயில், ஐந்து ரதம் மற்றும் கடற்கரை பகுதிகளை குதூகலத்துடன் பார்த்து இரசித்தனர். அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் இவர்களை உற்சாகப்படுத்தினர். பலர், இவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த 20 ஆண்டுகளாக வெளி உலகையே பார்க்காமல் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்த நிலையில், இந்த சுற்றுலா அவர்களிடம் ஒருவித பூரிப்பையும், குதூகலத்தையும் ஏற்படுத்தியதை காண முடிந்ததாக காப்பக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.