முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒருமித்து எல்லோரும் நினைவுகூற வேண்டும்!

தமிழ் மக்களின் ஆயுத ரீதியிலான 30 ஆண்டுகால போர் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்டும் பத்தாண்டுகள் பூர்த்தியாகின்றது. அத்தகைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இவ் வருடமும் எல்லோரும் ஒருமித்து முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகூற வேண்டும்.
ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு இடங்களில் ஒரே நினைவேந்தலினை பிரிந்து நின்று அனுஷ்டிக்காது எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்றாக முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுகூறலை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் பிரிந்து நின்று நினைவுகூறலை அனுஷ்டித்த தரப்புக்களை ஒன்றினைத்து ஒரே நினைவுகூறலாக முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த வருடம் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட போது ஒரிரு கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. அவ்வாறான கசப்பான சம்பவங்கள் ஏற்படாத வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை ஒழுங்கமைக்கவென ஒரு குழுவை அமைக்க வேண்டும். அக்குழுவே எதிர் காலத்திலும் தொடர்ச்சியாக நினைவேந்தல் நிகழ்வுகளினை முன்னெடுத்துச் செல்லும்.
அதன் பொருட்டு முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள், பொது அமைப்புகள் மற்றும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு மே-18 நினைவேந்தல் குழு ஒன்று நியமிக்க வேண்டிய தேவை உள்ளது.
பொதுச் சுடர் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவரே ஏற்ற வேண்டும் எனும் நோக்கிலே கடந்த வருடம் பொதுச்சுடர் கைமாற்றப்படாது. இம்முறை எந்தவொரு அரசியல்வாதிகளும் முன்னிலைப்படுத்தப்படமாட்டார்கள். அமைக்கப்படும் மே-18 நினைவேந்தல் குழுவிற்கு தமிழ்த் தேசியத்தினை நேசிக்கும் அரசியல் கட்சிகள் வெளியே இருந்து ஒத்துழைப்பு வழங்க முடியும்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கான சர்வதேச நீதி விசாரணை தேவை என்பதை வலியுறுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை மீண்டும் ஒரு தடவை வலியுறுத்துவோம்.
வெகுவிரைவில் முள்ளிவாய்க்கால் மக்களுடனும், பொது அமைப்புகளுடனும் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கலந்துரையாடலை மேற்கொண்டு மே-18 நினைவேந்தல் குழு நியமிக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.