வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது உலகத்தமிழரின் கடமை!

கடந்த இரண்டு வருடங்களாக தமிழர் தாயகமான வடகிழக்கில் சிறீலங்கா இனவழிப்பு அரசால் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், தமது உறவுகளைத்தேடி இடைவிடாத தொடர் அமைதிவழிப் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆரம்பத்தில் சிறீலங்கா அரசை நோக்கிய அவர்களது கோரிக்கைகள், போராட்டங்களிற்கு எவ்வித தீர்வும் வழங்கப்படாததுமன்றி, இவ் அமைதி வழிப் போராட்டாங்களை வழி நடத்தும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், இவ் இனவழிப்பு அரசினால் தொடர்ச்சியாக பல வழிகளிலும் அச்சுறுத்தப்பட்டதுடன், இப் போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே அவர்களின் உறவுகளைத்தேடிய இந் நியாயமான போராட்டங்கள் சர்வதேச சமூகத்தை நோக்கி விரிவடைந்தது.
இவ்வாறாக வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் தமது உரிமைக்காகப் போராடும் மக்களை அச்சுறுத்தல், அவர்கள் குரல்களை ஒடுக்கும் செயற்பாடுகள் யாவும் தமிழின அழிப்பினதும், தொடரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பினதும் பல்வேறு வடிவங்களாகும்.
தாயகத்தில் நிலவும் இப் பேரவலமான சூழ்நிலையில்,ஐ.நா மனித உரிமைகள் சபையினால் 34/1 தீர்மானத்திற்கு அமைய சிறீலங்கா அரசிற்கு வழங்கப்பட்ட கால நீடிப்பு எவ்வித முன்னேற்றமுமின்றி முடிவடையும் தருணத்தில், எதிர்வரும் 25ம் திகதி மாசி மாதம் இடம்பெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 40 வது கூட்டத்தொடரில், தமிழீழ மக்கள் தமது எதிர்காலம் பற்றிய தீர்க்கமான முடிவொன்றை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ் முக்கியமான காலகட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரை தேடியலையும் தமிழீழத்தின் அனைத்து மாவட்ட மக்களும் இணைந்து, எதிர்வரும் 25.02.2019 அன்று கிளிநொச்சியில் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளனர்.
அவர்களின் இம் மாபெரும் அறவழியிலான பெருமுயற்சிக்கு அனைத்து உலகத் தமிழர்கள், உலகத் தமிழ் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், கல்விமான்கள், இளையோர்கள் என அனைவரும் கலந்துகொள்வதுடன், அவரவர் தளங்களில் இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு தமிழர் இயக்கம் அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கின்றது.
அத்துடன் ஐ. நா மனித உரிமைகள் சபையிலும், ஐரோப்பிய பாரளுமன்றம் மற்றும் பன்னாட்டு பாராளுமன்றங்கள் மத்தியில் பல ஆண்டு காலமாக தமிழீழம் நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் தமிழர் இயக்கம் பன்னாடுகள் மத்தியிலும், பன்னாட்டு சமூகங்கள் மத்தியிலும் இவ்விடையத்தை எடுத்துச் செல்வதற்கு எமது உறவுகளுடன் இறுகக்கரம்பற்றி நிற்போம் என்பதை தெரிவித்து நிற்கின்றோம்.
நன்றி
தமிழர் இயக்கம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.