இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு (பகுதி- 1)

(-பாலா-)
இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” என்னும் நூலை நான் எழுதி வெளியிட்டது யாவரும் அறிந்த விடயமே.

இந்நூலை நான் வெளியிட்டபோது யாழ் இந்திய தூதராக இருந்த நடராஜன் என்பவர் “ பாலன் ஏன் எமக்கு எதிராக எழுதிக் கொண்டிருக்கிறார்?” என்று எனது ஊரைச் சேர்ந்தவரிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு எனது ஊரவர் “ நீங்கள் அவரை எட்டு வருடம் சிறையில் அடைத்து வைத்ததால் அந்த கோபத்தில் எழுதுகிறார்” என்று கூறியிருக்கிறார்
நான் ஏதோ என்னை சிறையில் அடைத்த கோபத்தில்தான் இந்தியாவுக்கு எதிராக எழுதுவதாக காட்ட முனைகிறார்கள். இது தவறு.
உண்மை என்னவென்றால் அந்த ஊரவர் முன்பு பளட் இயக்கத்தில் செயற்பட்டவர். (இப்போது இந்திய உளவு நிறுவனங்களுடன் உறவு வைத்து உதவி வருகிறார்)
1980ம் ஆண்டு எமது இயக்கம் ஆரம்பித்தபோதே “இந்தியா எமது நம்பிக்கை நட்சத்திரம் இல்லை” என்றும் “ இரவல் படையில் புரட்சி எதற்கு?” என்றும் கேட்டு நெல்லியடி மத்திய சந்தை சுவரில் போஸ்டர் ஒட்டியிருக்கிறோம்.
அப்போது புளட் இயக்கத்தில் செயற்பட்ட இந்த ஊரவரே அவ் போஸ்டரைக் கிழித்தது மட்டுமன்றி “ ஜக்கிய இலங்கை கோருவோர் சமூகவிரோதிகள்” என்றும் “இவர்கள் ஜே.ஆரின் கைக்கூலிகள்” என்றும் எமக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்.
எனவே எனது இந்திய எதிர்ப்பு என்பது 1980 முதல் இருக்கிறது என்று நன்கு தெரிந்தும் அந்த ஊரவர் வேண்டுமென்றே சிறையில் அடைத்த கோபத்தில் எழுதுவதாக காட்ட முனைகின்றார்.
சரி. பரவாயில்லை. அதன்பின்பு அவர் என்னுடன் தொடர்பு கொண்டு “ ஏன் நீங்கள் இலங்கை மீதான சீன ஆக்கிரமிப்பு பற்றி எழுதுவதில்லை?” என்று கேட்டார்.
இதிலும்கூட அவர் கேட்ட தொனியானது நான் ஏதோ சீன ஆக்கிரமிப்பை ஆதரிப்பதாக அல்லது அதை எழுதாமல் மறைப்பதாக அர்த்தப்படுத்தியது.
இவர் மட்டுமல்ல இன்னும் பலர் சீன ஆக்கிரமிப்பை கூறி இந்திய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த முனைகிறார்கள்.
அதுமட்டுமல்ல இன்னும் ஒருபடி மேலே போய் சீன ஆக்கிரமிப்பு காரணமாக இந்தியா தமிழீழத்தை பெற்று தரும் என்று கூறுவோரும் உண்டு.
அவ்வாறு கூறுவோரை “அரசியல்ஞானிகள்” என்று கொண்டாடும் முட்டாள்களும் எம் மத்தியில் இருக்கிறார்கள்.
சரி இனி விடயத்திற்கு வருவோம். அண்மையில் சீன அக்கிரமிப்பு என்று கூறப்பட்ட மாத்தளன் விமான நிலையத்தின் 70 வீதமான பங்குகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ஏற்கனவே தமிழர் பகுதியில் உள்ள பலாலி விமான நிலையம் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது சிங்கள பகுதியில் உள்ள விமான நிலையம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மகிந்த ராஜபக்சா சீனா ஆதரவாளர் என்று இவர்கள் கூறுகிறார்கள். அவரது ஊர் விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது குறித்து அவர்கூட இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை இந்திய உளவுப்படை கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு கடந்த மாதங்களில் சுமத்தப்பட்டது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் இப்போது அந்த ஜனாதிபதியின் ஆட்சியில்தான் இந்தியாவுக்கு விமான நிலையம் வழங்கப்பட்டிருக்கிறது. இது ஆச்சரியமாக இல்லையா?
இது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமுர்த்தியிடம் “ மாத்தளன் விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” என கேட்கப்பட்டபோது “ இலங்கையில் சீனாவின் செல்வாக்கைவிட இந்தியாவின் செல்வாக்கு அதிகம் என்பதை இது காட்டுகிறது” என்று பதில் கூறியுள்ளார். ( ஆதாரம் - துக்ளக் 20.02.2019 இதழ் பக்கம்-9)
இங்கு அவர் ஆக்கிரமிப்பையே செல்வாக்கு என்று கூறியுள்ளார். அதாவது இலங்கையில் இந்திய அக்கிரமிப்பே அதிகம் என்பதை இந்திய ஆக்கிரமிப்பாளரே ஒத்துக்கொள்கிறார்.
சரி. சீன அக்கிரமிப்பைவிட இந்திய ஆக்கிரமிப்பு அதிகம் என்றாலும் சீன ஆக்கிரமிப்பும் இருக்கிறதுதானே. அது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என நீங்கள் கேட்க தோன்றலாம். அது பற்றி அடுத்த பதிவில் பதில் தருகிறேன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.