அன்பும் , தியானமும் இறைவனை அடையும் வழி!
பாசத்தில் இட்டது அருள் அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தில்
கூசற்ற முக்தி அருள் அந்தக் கூட்டத்தின்
நேசத்துத் தோன்றா நிலை அருளாமே..
(திருமந்திரம் பாடல் எண் 1802)
பொருள்:- பந்த பாச மயக்கத்தில் இருக்கச் செய்தது திருவருளே, அந்தப் பாசத் தளைகளை விட்டு வெளியேறச் செய்ததும் திருவருளே, இப்பேற்பட்ட பிணைப்புக்களை விட்டொழித்த நிலையில் தளர்வில்லா பேரின்பப் பேறு கிட்டச் செய்ததும் திருவருளே, இப்பேரின்ப தொடர்பால், உண்டான பற்றால் உணர்வால் சீவனோடு சிவனும் பிரிப்பின்றி ஒன்றாகத் தோன்றிடும் நிலையும் திருவருள் சித்தமே ஆகும்.
உலகில் எடுத்தது சக்தி முதலா
உலகில் எடுத்தது சக்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய்
உலகம் எடுத்த சதாசிவன் தானே..
(திருமந்திரம் பாடல் எண் 1713)
பொருள்:- உலகை தோற்றுவிக்க எண்ணிய பரம்பொருள் தன்னில் ஒரு கூறாக இடங்கொண்டிருக்கின்ற சக்தியின் துணையுடன் உலகை தோற்றுவித்தார். அப்படி படைக்கப்பட்ட உலகு சக்தி வடிவானது. சக்தியின் தன்மை கொண்டது.
அமுதமதாக அழகிய மேனி
படிகமதாக பரந்தெழும் உள்ளே
குமுதமதாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதமதாகிய கேடிலி தானே..
(திருமந்திரம் பாடல் எண் 1408)
பொருள்:- அமுதமே வடிவான பராசக்தி அன்புடன் வணங்கித் தொழுபவர்கள் நெற்றியில் அமுதமாக படிகமணியாகிய வெண்பளிங்குபோல் திருமேனி விளங்கி அருள்வாள். குளிர்ச்சியான மலர்மாலையும் முத்தும் பொருந்த அணிந்த ஆதி பராசக்தி அழிவற்றவள், எங்கும் நிறைந்த மகா சக்தியாவாள்.
கொள்ளினும் நல்ல குருவினை கொள்ளுக
உள்ள பொருள் உடல் ஆவி உடன் ஈக
எள்ளத் தனையும் இடை விடாதே நின்று
தெள்ளி அறியச் சிவபதம் தானே..
(திருமந்திரம் பாடல் எண் 1693)
பொருள் :- உபதேசம் பெற , உய்யும் வழி அறிய நல்லதொரு குருவை இனம் கண்டு குருவாகக் கொள்ளுங்கள். அப்படி அடைந்த குருவை பூரண சரணாகதி அடையுங்கள். சிறிதளவும் தடைப்பட்டு போகாது முழுமையாக அறிந்து தெளிவு பெறுக. இப்படியான முறையே இலகுவில் சிவப்பேறு கிட்ட உதவும்.
மு.ஹரினி
கருத்துகள் இல்லை