வன்னி மண்ணில் கண்ணீரில் நனைந்த உறவுகளில் பரிதாப நிலை!

யுத்தம் நிறைவடைந்து இந்த ஆண்டுடன் பத்தாண்டுகளைக் கடக்கின்ற நிலையில், வடக்கிலும் கிழக்கிலும்வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.


உறவுகளை இழந்து, அவர்கள் எங்கே? என்ன ஆனார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலையில் கண்ணீரில் வாடும் மக்களுக்கு யுத்தத்தின் பின்னரான எந்தவொரு அரசும் சரியான பதில் சொல்லவில்லை.

யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய துணைக்குழுக்களும் இன்றுவரை கண்முன்னே இருக்கின்றார்கள். ஆனால் மக்கள் சுட்டிக்காட்டும் அவர்களிடம் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த எந்தவொரு விசாரணையினையும் அரசாங்கம் இதுவரை மேற்கொண்டதாக தகவல் இல்லை.

வருடாந்தம் ஒவ்வொரு சாக்குப் போக்குச் சொல்லி ஐ. நா மனித உரிமைப் பேரவையில் தனக்கான கால அவகாசத்தைக் கோரி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம், பிரச்சினையினை நீர்த்துப்போகச் செய்வதற்கான கைங்கரியத்திலேயே முழுமையாக ஈடுபடுகின்றது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது.

மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதில் கூறப்பட சில முக்கியமான விடயங்களை அரசாங்கம் அமுல்ப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்ற விடயங்களில் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை.

கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆட்சி மாற்றத்தின்பின்னர் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக சர்வதேசம் கடைப்பிடித்த மெத்தெனப்போக்கு இன்றுவரை தொடர்கின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கமோ அதுதொடர்பில் உரிய கரிசனை கொள்ளவில்லை என்பதையே அண்மைய செயற்பாடுகள் காட்டுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.