தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட லெப். கேணல் விநாயகம்!



இரண்டு தசாப்தகாலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் வெற்றிநடைபோட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம்.

நிலையுடன் பெயர்: லெப். கேணல் விநாயகம்.

சொந்தப்பெயர்: தங்கவேலு சுதரதன்.


சொந்த முகவரி: மருதங்கேணி வடக்கு தாளையடி. (யாழ் மாவட்டம்)

வீரச்சாவுத்திகதி: 04.02.2009

வீரச்சாவுச் சம்பவம்: சுண்டிக்குளம், பேப்பாரைப்பிட்டிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட வழிமறிப்புத் தாக்குதலில்.

விநாயகம் அண்ண வீரச்சாவு என்ற செய்தி எனது காதுகளை எட்டியபோது ஒருமுறை எனது இதயம் உறைந்து போனது. விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் ஒன்றும் புதியவை அல்ல. இழப்புக்கள் இன்றி விடுதலை கிடைக்கவாய்ப்பில்லை என என்னைத் தேற்றிக் கொண்டேன். விநாயகம் அண்ண எமைவிட்டுப் பிரிந்து பத்தாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அந்த உத்தம வீரனின் ஆற்றல் மிகுந்த தளபதியின் நினைவுகள் எம்மனங்களில் அலை மோதுகின்றன.

யாழ் குடாநாட்டின் வளம்மிகுந்த வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் கடலலைகள் தழுவுகின்ற மருதங்கேணி எனும் அழகிய கிராமத்தில் தங்கவேலு காந்திமலர் தம்பதியினருக்கு 1973ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இரண்டாவது மகனாகப்பிறந்தவர்தான் சுதரதன் எனும் இயற் பெயரைக் கொண்ட லெப் கேணல் விநாயகம் அவர்கள். இவரை வீட்டில் ஏல்லோரும் சுதன் என்றே அழைத்தனர். சுதன் தனது இளமைக் காலக் கல்வியை உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தொடர்ந்தார். சுதன் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கியதோடு கலைத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார். இந்து சமயத்தவர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றான காத்தவராயன கூத்து மருதங்கேணியில் அரங்கேற்றப்பட்டபோது அதில் சுதனும் நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இவ்வாறு அவரது இளமைக்காலம் இனிதாக நகர்ந்து கொண்டிருந்த வேளையில் அமைதி என்ற போர்வையில் எமது தாயக மண்ணில் அகலக்கால் பதித்த இந்தியப் படையினர் அதற்கு முற்றிலும்மாறாக ஆக்கிரமிப்புப்போரையும் தமிழ்மக்கள் மீதான அடாவடித் தனங்களையும் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். இவ்வாறு இந்தியப்படையினர் தாயகத்தில் பல நூற்றுக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைப் பலிகொண்டதுவும் இந்தியப் படையினர் நாளாந்தம் தமிழ்மக்கள் மீது தொடரும் கெடுபிடிகளும் அதன் விளைவாக தமிழ்மக்கள் அனுபவித்துவரும் அவல வாழ்க்கையும் 1989ம் ஆண்டு காலப்பகுதியில் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்றுக்கொண்டிருந்த சுதனின் மனதை மிகவும் ஆழமாகப்பாதித்தது. அது விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களின் ஆதரவுடன் தலைமறைவு வாழ்க்கையைமேற்கொண்டு விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருந்த காலம். லெப். கேணல் மறவன் மாஸ்ரரின் உதவியுடன் சுதனும் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் பல இளைஞர்களும் தம்மை முழுமையாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டார்கள். அமைப்பில் இணைந்து கொண்ட சுதனும் மற்றய இளைஞர்களும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம் ஊடாக மணலாற்றுக் காட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

மணலாற்றுக் காட்டிற்குச் சென்ற சுதன் அங்குதான் இயக்கப் பெயராக விநாயகம் எனும் பெயரைப் பெறுகின்றார். அங்கு வியட்னாம் பயிற்சிப் பாசறையில் இரண்டாவது பயிற்சி அணியில் விநாயகமும் இணைக்கப்பட்டு ஒரு போர்வீரன் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்து படைத்துறைப் பயிற்சிகளிலும் கொமாண்டஸ் பயிற்சிகளிலும் மிகச்சிறப்பாகத் தேர்ச்சிபெற்று சிறந்த போராளியாக பயிற்சிப் பாசறையிலிருந்து விநாயகம் அவர்கள் வெளிவருகின்றார். தொடர்ந்து இந்தியப் படையினருக்கெதிரான தாக்குதல்கள் தேசவிரோதக் கும்பல்களுக்கெதிரான தாக்குதல்கள் என அவரின் போர்ப் பயணம் தொடர்ந்தது. 1990ம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியப்படையினர் தாயகத்திலிருந்து முழுமையாக வெளியேறியதையடுத்து அந்த ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மீண்டும் போர் வெடித்தது. அந்தக் காலப்பகுதியில் யாழ். கோட்டை படைமுகாம்மீது விடுதலைப்புலிகள் முற்றுகைப்போரை மேற்கொண்டிருந்தபோது விநாயகம்அவர்களும் அந்த தாக்குதல்அணியில் பங்கெடுத்து அந்தச்சமரில் தனது போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து அவ்வவ்போது குடாநாட்டில் தான் சந்தித்த களமுனைகளிலும் களப்பணிச் செயற்பாடுகளிலும் தனது நேர்மைத்திறனையும் அர்ப்பணிப்பான உழைப்பையும் வெளிக்காட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெற்றிருந்தார். இதேகாலப்பகுதியில் அப்போதய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவரும் மக்கள் முன்னணித் தலைவருமாகிய மாத்தையா அவர்களின் அணியில் விநாயகம் அவர்களும் இணைக்கப்பட்டு அவரது மெய்ப்பாதுகாப்பு அணியில் விநாயகம்அவர்களின் பணி தொடர்ந்தது. 1991ம் ஆண்டு ஆனையிறவு ஆகாயக்கடல்வெளிச்சமரிலும் விநாயகம் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.

1993ம் ஆண்டின் நடுப்பகுதியில் மாத்தையாவின் அணி கலைக்கப்பட்டபோது அதில் குறிப்பிட்ட போராளிகள் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்படபோது விநாயகம்அவர்களும் கடற்புலிகள் படையணியில் உள்வாங்கப்பட்டிருந்தார். 1993ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூநகரி நாகதேவன்துறை படைத்தளம்மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தவளை நடவடிக்கையின்போது கடற்புலிகளின் தாக்குதலணியில் விநாயகமும் அங்கம் வகித்திருந்தார். வரலாற்று முக்கியத்துவம்பெற்ற அந்தச் சமரில் அபாரமான துணிச்சலுடன் களமாடிய விநாயகம் அவர்கள் நாகதேவன்துறைப் படைத்தளத்தின் வெற்றிக்கு முன்நின்று உழைத்ததோடு அந்த வெற்றிச்சமரில் வீரவடு ஏந்தியதன் விளைவாக ஒரு கண்பார்வையை இழந்திருந்தார்.

1994ம் ஆண்டு காலப்பகுதியில் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளராக விநாயகம்அவர்கள் பொறுப்பு வகித்திருந்தார். இவர் மன்னார் மாவட்டத்தில் அரசியல்த்துறைப் பொறுப்பை பொறுப்பேற்றுக்கொண்ட காலத்திலிருந்து விடுதலைப் போராட்டப் பங்களிப்பில் மக்கள் மத்தியில் புதிய உத்வேகம் பிறந்தது. பொதுமக்களின் வழிகாட்டிகளாகத் திகழ்வதும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதுமான நிர்வாகக்கட்டமைப்புக்களுக்கு புத்துயிரூட்டி புதுப்பொலிவுடன் அவை செயற்பட வழிசமைத்ததுடன் அவைகளுக்கு ஊடாக கடற்புலிகளின் படைக்க ட்டமைப்பை மன்னார் மாவட்டத்தில் விரிவாக்கம் செய்வதற்கு முதன்மையாக உழைத்தவர். இதன் பிற்பாடு குடாநாட்டில் அரசியல்ப்பணியும் குறிப்பிட்டகாலம் புலனாய்வுக் கல்வியையும் கற்றுத் தேர்ச்சிபெற்று அதுசார்ந்த பணிகளும் தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் படைத்துறை ரீதியான செயற்பாடுகளுமென விநாயகம் அவர்களின் போராட்டப்பயணம் தொடர்ந்தது.

1996ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் யாழ். குடாநாடு முழுமையாக அரசபடையினரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டபோது ஐந்து லட்சம் மக்களுடன் விடுதலைப்புலிகளின் அனைத்து படைக் கட்டமைப்புக்களும் நிர்வாகக் கட்டமைப்புக்களும் வன்னிப் பெரு நிலப்பரப்பிற்கு நகர்த்தப்பட்டு வன்னியை தளமாகக்கொண்டு செயற்பட்டபோது விநாயகம் அவர்களின் போரியல் செயற்பாடுகள் வன்னியில் தொடர்ந்தது. இந்தக் காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்களின் பிரரதான மெய்ப் பாதுகாவலராகவும் சில காலம் விநாயகம் அவர்கள் கடமையாற்றியிருந்தார். அத்துடன் சூசை அவர்களின் மெய்ப் பாதுகாப்பு அணிக்கு தேர்வு செய்யப்படுகின்ற போராளிகளுக்கு பாதுகாப்புப்பயிற்சி வழங்குகின்ற பயிற்சி ஆசிரியராகவும் விநாயகம் அவர்கள் செயற்பட்டிருந்தார். 1996ம் ஆண்டு யூலை மாதம் முல்லைத்தீவு படைத்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் 01 வெற்றிச் சமரிலும் விநாயகம்அவர்கள் பங்கெடுத்து தீரமுடன் களமாடி முல்லைத்தீவு படைத்தளத்தின் வெற்றிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்ததோடு அந்த வெற்றிச் சமரில் தலைப்பகுதியில் விழுப்புண்ணடைந்தார். மருத்துவச் சிகிச்சைகளுக்கு ஊடாக விழுப்புண் தேறிய நிலையில் விநாயகத்தின் போர்ப்பணி மீண்டும் தொடர்ந்தது. ஆனாலும் தலைப்பகுதியில் புதைந்திருந்த சன்னம் இறுதிக்காலம் வரையிலும் அவரை உபாதைக்கு உட்படுத்தியிருந்தது. தொடர்ந்து செம்மலையில் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் கிழக்கு மாகாண விநியோக அணியில் விநாயகம்அவர்களும் இடம்பெற்றிருந்தார். கடற்புலிகளின் சண்டைப்படகில் இரண்டாம் நிலை கட்டளைஅதிகாரியாக செயற்பட்டு பல சவால்களுக்கு மத்தியில் கிழக்குமாகாண விநியோக நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம் பெறுவதற்கு அயராது உழைத்தார். அத்துடன் செம்மலையில் அமையப் பெற்றிருந்த கிழக்குமாகாண விநியோக அணிக்கான முகாம் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து போராளிகளின் உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தி குறித்த முகாம் செயற்பாடுகள் திறம்படசெயற்படுமளவிற்கு மிக நேர்த்தியாக தனது கடமையினை ஆற்றியிருந்தார்.

1999ம் ஆண்டு காலப் பகுதியில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் விநாயகம் அவர்களை கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறிப்பிட்ட காலமாக மந்தகதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறையின் செயற்பாடுகள் விநாயகம் அவர்களின் அரசியல் பிரவேசத்துடன் புதுப்பொலிவுடன் முழுவீச்சுப்பெற்றன. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சமாசம் அவற்றின் ஆளுகைக்குட்பட்டிருந்த கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அத்துடன் வர்த்தகர் சங்கங்கள் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் விளையாட்டுக் கழகங்கள் போரெழுச்சிக் குழுக்கள் என சமூகக் கட்டமைப்புக்களை தொடராக சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு மக்களின் இன்றியமையாத பங்களிப்பை வலியுறுத்தி கருத்துக்களை எடுத்துக்குறி அதற்கு ஊடாக மக்களை போராட்டத்தின்பால் அணிதிரட்டி எல்லைக் காப்புப் படையணிகள் கிராமியப் படையணிகள் ஆகிய கட்டமைப்புக்களை விரிவாக்கம் செய்து 1999ம் ஆண்டின் பிற்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின்போது கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி படைத்தளங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியதுடன் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் மேலும் சிலபகுதிகளை மீட்டெடுத்தவாறு விடுதலைப்புலிகளின் படையணிகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது முல்லை மாவட்டத்தில் மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் உருவாக்கப்பட்டிருந்த எல்லைக் காப்புப்படையணிகளை விநாயகம் அவர்களே தலைமையேற்று கூட்டிச்சென்று களமுனையின் பின் களப் பணிகளையும் மீட்கப்பட்ட பகுதிகளில் எல்லைக் காப்புப் படையணிகளை பாதுகாப்பு நிலைகளில் நிலைப் படுத்துவதையும் மிக நேர்த்தியாக நெறிப்படுத்தியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பெரும்பாலானமக்கள் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்கிளிலிருந்து இடம்பெயர்ந்து வந்து மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் வசித்துவந்தார்கள். இந்த மக்களுக்கும் விநாயகம் அவர்களுக்கும் அரசியல் ரீதியாகவும் அதற்கு அப்பாலும் நெருக்கமான உறவுப்பிணைப்பு இருந்து வந்தது. இந்த உறவுப்பாலம் தான் அவர் எல்லைக்காப்புப் படையணிக் கட்டமைப்புக்களை நேர்த்தியாக நெறிப்படுத்துவதற்கு உந்துசக்தியாக விளங்கியது. இவ்வாறாக கடற்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பை மிகவும் சீரிய முறையில் நெறிப்படுத்திவந்த விநாயகம் அவர்கள் 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையில் இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்குவந்த காலப்பகுதியில் குறிப்பாக யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு நகரத்தின் அபிவிருத்திக்காக அயராது உழைத்தார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முள்ளியவளை புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் கரைத்துறைப்பற்று பிரதேசசபை உள்ளிட்ட அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் மீளவும் முல்லை நகரத்தில் செயற்படுவதற்கு முதன் நிலைக் காரணகர்த்தாவாகவும் விளங்கினார். அரச நிர்வாகக் கட்டமைப்புக்களை துரிதகதியில் முல்லைத்தீவுக்கு நகர்த்தியதற்கு ஊடாகவே இடம்பெயர்ந்திருந்த முல்லைத்தீவு மக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏதுநிலையாக அமைந்திருந்தது. இந்த முயற்சிகளில் விநாயகம் அவர்கள் முழுமூச்சாக நின்று உழைத்ததன் பயனாகவே குறுகியகாலத்தில் முல்லைத்தீவு நகரம் புதுப்பொலிவுடன் மிளிர்ந்தது.

2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் விநாயகம் அவர்களின் திருமணத்திற்கு சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் அனுமதி வழங்கியதையடுத்து அதற்கான ஏறபாடுகள் நடைபெறறன. தனது நீண்டநாள் காதலியான இதயாவை 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் நாளன்று விநாயகம் அவர்கள் தனது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்துக்கொண்டார். இல்லறம் எனும் நல்லற வாழ்க்கையில் அலைக்குமரன் ஐங்கரன் ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்ததொரு அப்பாவாகவும் திகழ்ந்தார். இவ்வாறாக அவரின் இல்லறவாழ்க்கையும் போரியல் வாழ்வும் ஒரே பாதையான தமிழீழ தேசத்தின் விடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

சமாதான காலப்பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கரையோரப் பிரதேசங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதவியுடன் மீள்கட்டுமானம் செய்யும் நோக்குடனும் அந்தப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் விநாயகம் அவர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கான இணைப்பாளராக நியமித்திருந்தார். அத்துடன் மற்றுமொரு பொறுப்பையும் சூசைஅவர்கள் விநாயகத்திடம் ஒப்படைத்திருந்தார். அதாவது கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு நிலையங்கள் அனைத்திற்குமான மேலாளராகவும் நியமித்திருந்தார். குறித்த இந்த இரண்டு பொறுப்புக்களையும் விசுவாசமாகவும் பொறுப்புணர்வுடனும் செயலாற்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் மத்தியிலும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதியின் மத்தியிலும் நனமதிப்பைப் பெற்றிருந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு சிறந்த அரசியல்ப் பேச்சாளர். அவரது பேச்சாற்றலையும் அரசியல் சாணக்கியத்தையும் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்த சூசைஅவர்கள் தேசியத்தலைவர் அவர்களின் ஏற்பாட்டில் ஐரோப்பிய நாடுகளில் தமிழ்த்தேசியத்தின் அரசியல் கொள்கைப் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட குழுவில் விநாயகம்அவர்களையும் சிபார்சு செய்திருந்தார். விநாயகம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய அந்த அரசியல் பரப்புரைக் குழுவை தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் சந்தித்து அரசியல்ப் பரப்புரைகள் தொடர்பாக விளக்கமளித்து ஆசிகூறி வழியனுப்பி வைத்திருந்தார். 2004ம் ஆண்டு ஒக்டோபர்மாதம் தாயகத்திலிருந்து புறப்பட்ட விநாயகம் உள்ளிட்ட குழுவினர் நோர்வே சுவிச்சர்லாந்து உள்ளிட்ட இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் தமது கொள்கைப் பரப்புரைகளை வெற்றிகரமாக முன்னெடுத்தனர். குறிப்பாக விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டம தொடர்பாகவும் அதற்கு புலம்பெயர்ந்த தேசங்களில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஆற்றவேண்டிய பங்களிப்புக்கள் தொடர்பாகவும் எடுத்துக் கூறிய கருத்துக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்மக்களை பெரிதும் கவர்ந்தன. விநாயகம்அ வர்கள் வெளிநாட்டில் நின்ற நாட்களிலேயே சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் இலங்கை உள்ளிட்ட இன்னும் சில நாடுகளையும் தாக்கியது. யுத்த காலத்தில் பாரிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த வடக்கு கிழக்கு தாயகத்து மக்கள் மீண்டும் இயற்கையின் சீற்றத்தினால் குறுகிய நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள் காவுகொள்ளப்பட்டு பல கோடி பெறுமதியான சொத்தழிவுகளைச் சந்தித்து பாரிய மனிதப் பேரவலத்தைச் சந்தித்தபோது எமது தாயக விடுதலைப் போராட்டத்தில் தோளோடு தோள்நின்று உழைத்த மக்கள் ஆழிப் பேரலையினால் அடித்துச் செல்லப்பட்ட அவலத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் மத்தியில் மிகவும் உருக்கமாக எடுத்துக் கூறினார். விநாயகம் அவர்களின் சாணக்கியமான அரசியல்ப் பேச்சுக்களால் கவரப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் எமது விடுதலைப்போராட்டத்தை வீச்சாக்குவதற்கும் வடக்கு கிழக்கு தாயகத்தை மீள்கட்டுமானம் செய்வதற்குமாக பெருந் தொகையான நிதியை மனமுவந்து தந்தனர். மூன்று மாத காலமாக தமது ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு 2005ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் விநாயகம்அவர்களும் மற்றயவர்களும் தாயகம் திரும்பியிருந்தனர். தாயகம் வந்த விநாயகம்அவர்கள் சிறப்புத் தளபதி சூசைஅவர்களால் பணிக்கப்படுகின்ற பிரத்தியேகமான பணிகளை முன்னெடுத்ததுடன் வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மக்கள் படைக் கட்டுமானத்திலும் அயராது உழைத்தார். அத்துடன் மக்கள் படைக் கட்டுமானத்தைக்கொண்டு முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களின் கரையோரமாக உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்பு நிலைகளுக்கான பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கைத்துப்பாக்கி ஒன்றும் வாகனம் ஒன்றும் இவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். 2006ம் ஆண்டு மற்றும் 2007ம் ஆண்டின் முற்பகுதிகளில் போராட்டத்திற்கு புதிதாக இணைகின்ற புதிய போராளிகளில் கடற்புலிகளுக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்து கடற்புலிகளுக்கு உள்வாங்குகின்ற பொறுப்பையும் சிறப்புத் தளபதி அவர்கள் விநாயகத்திடமே ஒப்படைத்திருந்தார். அந்தப்பணியை சிரமேற்கொண்டு கடற்புலிகளுக்கென பிரத்தியேகமாக செயற்பட்டுக் கொண்டிருந்த அடிப்படை படயப்பயிற்சிக்க ல்லூரியின் பண்டிதர் றஞ்சன் லாலா அப்பையா லிங்கம் ஆகிய பயிற்சி அணிகளுக்கு ஆற்றல் மிகுந்த திடகாத்திரமான இளைஞர்களைத் தேர்வுசெய்து குறித்த பயிற்சி அணிகள் சிறப்பாக தமது பயிற்சிகளை நிறைவு செய்து பின்நாளில் அவர்கள் சிறந்த போராளிகளாகவும் அணித் தலைவர்களாகவும் கடற்புலிகள் படையணியை அலங்கரித்திருந்தார்கள். இந்த செயற்திட்டத்தில் விநாயகம் அவர்களின் உழைப்பு மிகவும் அளப்பரியது. அத்துடன் குறிப்பிட்ட காலம் கடற்புலிகளின் படைய அரசியல்ப் பொறுப்பாளராகவும் பொறுப்புவகித்து ராஜன் கல்விப்பிரிவினருடன் இணைந்து போராளிகளுக்கான கல்விச்செயற்பாடுகளிலும் போராளிகளுக்கான அரசியல் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல் முதலான சிறப்புத் தளபதி சூசை அவர்கள் பணிக்கின்ற அரசியல் மற்றும் புலனாய்வுச் செயற்பாடுகளையும் சிறப்புத் தளபதியின் எண்ணத்திறகு ஏற்றவாறு செயல்வடிவம் கொடுத்திருந்தார்.

2007ம் ஆண்டு யூலை மாதம் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் படகு விபத்திற்குள்ளாகி தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தபோது அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்ற பலதரப்பினரதும் அபிப்பிராயக் கருத்துக்களுக்கு அமைவாக விநாயகம் அவர்கள் சூசை அவர்களின் பிரதான மெய்ப்பாதுகாப்பு அணிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் அந்தப் பொறுப்பையேற்று இரவு பகல் பாராது கண்துஞ்சாது பாதுகாப்புக் கடமையை மிகவும் செவ்வனே செய்திருந்தார். 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் விநாயகம் அவர்கள் கடற்புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். துணைத் தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட விநாயகம் அவர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்ட கடற்புலிகளின் நிர்வாகச்செயலகம் மருத்துவப்பகுதி அரசியல்த்துறை புலனாய்வுத்துறை ஆகிய கட்டமைப்புக்கள் புதுப்பொலிவுடன் செயற்பட சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்ததுடன் கடற்புலிகளில் அங்கம் வகித்த போராளிகள் அனைவரின் நலன்களிலும் கூடியகவனம் செலுத்தி அவர்கள் முகம்கொடுக்கின்ற தனிப்பட்டதும் பொதுவானதுமான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வினைப் பெற்றுக்கொடுத்து அவர்களும் தங்களது கடமைகளை நேர்த்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.

2008ம் ஆண்டு பிற்பகுதியில் மணலாற்றுக்கள முனையில் தாக்குதல்கள் தீவிரம் பெற்றதையடுத்து முல்லைத்தீவில் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய மக்கள்படைக் கட்டமைப்பை உருவாக்கி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி நாளாந்தம் நூறு பேர்வரையில் மணலாற்றுக் களமுனைக்கு அனுப்புகின்ற செயற்திட்டத்தை சிறப்புத் தளபதியின் ஆலோசனைக்கு அமைவாக தானே பொறுப்பேற்று மணலாற்றுக் களமுனையை அண்டியதான அளம்பிலை தளமாக வைத்துக்கொண்டு மிநேர்த்தியாக நெறிப்படுத்தினார். இவரால் அனுப்பப்பட்ட மக்கள்படை களமுனையில் போராளிகளுக்கு தோள் கொடுத்ததுடன் துணிகரத் தாக்குதல்களையும் நிகழ்த்தியிருந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முற்பகுதியில் நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டு வடமராட்சிக் கிழக்கின் எல்லைப் பகுதியான சுண்டிக்குளம், நல்லதண்ணீர்த் தொடுவாயவரையிலும் ஆக்கிரமித்திருந்தனர். ஆகவே யாழ். மாவட்டத்தின் கரையோரத்தினதும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரத்தினதும் மையத்தில் அமையப்பெற்ற பேப்பாரைப்பிட்டி எனும் பகுதியில் பலமான காவல் நிலைகளை விடுதலைப்புலிகள் அமைத்திருந்தார்கள். அதாவது பேப்பாரைப்பிட்டியை அடுத்துள்ள சாலைப்பகுதியையும் கடந்தால் அடுத்துவருவது மாத்தளன் ஆகும் அப்போது மாத்தளன் மற்றும் பொக்கணையில் இடம்பெயர்ந்து வந்திருந்த பல ஆயிரக்கணக்கான மக்கள குடியிருந்தார்கள். எனவே பேப்பாரைப்பிட்டி காவல்நிலைகளை அரசபடையினர் கைப்பற்ற விடுவதில்லை என்ற மனவுறுதியுடனேயே விடுதலைப்புலிகளின் படையணிகள் நிலைகொண்டிருந்தன. அதில் விநாயகம்அவர்கள் பகுதிப் பொறுப்பாளராக பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார்.

2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் நாளன்று நல்லதண்ணீர்த் தொடுவாயில் நிலைகொண்டிருந்த படையினர் பேப்பாரைப்பிட்டியை நோக்கியதாக யுத்த டாங்கிகள் பல்குழல் எறிகணைகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த முன்னேற்றநடவடிக்கையை எதிர்த்து விடுதலைப்புலிகள் வளிமறிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர். எதிரியின் முன்னேற்றத்தை துணிகரமாக எதிர்த்து களமாடிய கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் அந்த வழிமறிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அவருடன் கடற்புலிகளின் கட்டளைத் தளபதிகளான லெப். கேணல் குகன் (காதர்) லெப். கேணல் பகலவன் உட்பட மேலும் பல போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இரண்டு தசாப்த காலமாக தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் தளராத உறுதியுடன் வீறுநடை போட்ட உத்தமத் தளபதி லெப். கேணல் விநாயகம் அவர்கள் பேப்பாரைப்பிட்டி மண்ணை முத்தமிட்டு தமிழீழ விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார். அவரது இழப்பு எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தியிருந்தாலும் அவரது வித்துடலை எமது தோளகளில் சுமந்து விதைகுழிக்கு ஒருபிடி மண் எடுத்துப் போட்டிருந்தாலும் ஓரளவுக்கேனும் மனம் ஆறியிருப்போம். ஆனாலும் அதற்குக்கூட அவரது வித்துடல் எமக்கு கிடைக்கவில்லை. எனவே கடற்புலிகளில் தனக்கென தனித்துவமான அத்தியாயத்தை பதிவாக்கிவிட்டு விழிமூடிக்கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தில் அவரையும் அவருடன் வீரச்சாடைந்த மாவீரர்களையும் எமது இதயத்தில் பூசித்து தமிழீழ விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோடுவோமாக………

“கடலிலே காவியம் படைப்போம்”

நினைவுப்பகிர்வு:- செங்கோ

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.