எஞ்சியிருக்கும் கனவின் தேடலாய்...!

தேசக்கனவு சுமந்து
ஈரமூறிய பதுங்குகுழிக்குள்
சேற்றிலும் நுளம்புக்கடியிலும்
தேகத்தைச் சிதைத்த உன்
தியாகம் வீணாய்ப்போனதாக
விம்மி வெடித்து
வேற்றுநாடொன்றில்

அடைக்கலம் புகுந்த உன்னிடம்
எஞ்சியிருக்கும் கனவின் தேடலாய்
தாய்நாட்டின் தலைவிதியை கேட்கிறாயே...
எப்படிச் சொல்லுவேன் இங்கு
எருக்கலைகளும் நெருஞ்சிகளும்
பூத்துச்சொரியும் வரலாற்றை?

பாசை தெரியாத
பனிபொழியும் நாடொன்றில்
தேகத்துக்குள் தேம்பிக்கிடக்கும்
ஆசைக்கனவுகளில்
மிதக்கும் உன்னிடம்
எப்படிச் சொல்லுவேன் ?-இங்கு
பள்ளி மாணவரும் களவாய்
கஞ்சாவுக்கும்  கசிப்புக்கும்
அடிமையானார் என்பதை.

தார் வீதிகளும் கட்டிடச் செம்மையிலும்
ஆர்வம் காட்டும் அபிவிருத்தி, அரசியல்
எதிர்காலச் சந்ததியின்
சரித்திரம் தலைகீழாதல் கண்டும்
நோகாமல் "மென்வலு" எனக்கூறி
கையூட்டுப்பெற்று கல்நெஞ்சராகி
பாதாளத்தில் தள்ளும் அவலத்தை
உன்னிடம் எப்படிச் சொல்வேன் ?

போதையும் பேதமையும் கூடிய வெறித்தனத்தில்
காட்டுமிராண்டியராய்
கிழவியோடு குமரிகளும்
பாலியல்  வதை பொருளாய்
வேதனை சுமக்கும் ஒரு
அவலச்சமூகம் பிறந்த கதையை
உன்னிடம் எப்படிச் சொல்வேன்?

வாய் ஓயாது கனவுரைக்கும் காவலனே!
உன் கனவை நெஞ்சோடு அணைத்து
அடைக்கலம் புகுந்த நாட்டிலேயே
இறுதி மூச்சை அடங்கி விடு.
வந்திடாதே!
நீ சுமந்த தேசம் இங்கில்லை.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaiya.

.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.