வர்த்தக பேச்சுவார்த்தைக்காக டிரம்ப், ஜின்பிங் வியட்நாமில் சந்திப்பு

உலகின் முன்னணி பொருளாதார நாடுகளாக திகழும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த ஆண்டில் வர்த்தகப்போர் மூண்டது. இது தொடர்பாக கடந்த மாதம் அர்ஜென்டினாவில் நடந்த ‘ஜி 20’ உச்சி மாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். அப்போது இரு தரப்பு வர்த்தக போரை மார்ச் 1-ந்தேதி வரை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது.


இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சீனாவுக்கு சென்று வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தினர். அதே போல் சீனாவின் பிரதிநிதிகளும் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இரு தரப்பு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்த போதும் முக்கிய உடன்பாடு எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட முடிவை எடுப்பதற்காக சந்தித்து பேச டிரம்ப், ஜின்பிங் ஆகிய இருவரும் பரஸ்பர விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களும் வியட் நாமில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அந்நாட்டின் துறைமுக நகரான டா நாங்கில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரப்படுத்தி வருகின்றனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.