திரு.வைகோவின் மணலாற்று பயணமும் இன்றய நிலையும்!
தமிழக முதல்வர் திரு. MGR மறைவுக்கு பின், ஜெயலலிதா புலியெதிர்ப்பை கையில் எடுத்ததால், தமிழகத்தில் புலிகளுக்கான அரசியல் பலம் ஒரு மந்த நிலைக்கு சென்றிருந்தது.
திரு. கருணாநிதி அவர்களும் டெலோ மீது கரிசனை கொண்டிருந்தமையால் அதன் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் மரணத்துக்கு, புலிகளை பழிவாங்கும் மனநிலையே, இறுதிவரை உள்ளூர அவரிடம் இருந்தது.
இதே நேரம் இந்திய இராணுவத்துடனான போரினால், தமிழகத்திலும் புலிகள் மீதான ஆதரவில் ஒருவித தளம்பல் நிலை ஏற்பட்டிருந்தது.
சமகாலத்தில் இந்திய இராணுவத்துடன் போர் நடந்து கொண்டிருந்த நேரமே, இன்னொரு முனையில் சிங்கள இராணுவத்துடன் போர் நிறுத்தம் ஒன்றை, பிரேமதாசா அரசாங்கத்தின் ஊடாக மேற்கொண்ட புலிகள், இந்திய இராணுவத்தை தாயகத்தை விட்டு வெளியேற்றும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் காரணமாக வைகோ வரும் நேரம், இந்திய இராணுவம் மூட்டை முடிச்சை கட்ட ஆயத்தமாகியிருந்தது.
அடுத்த கட்ட நகர்வுக்கு ஆயத்தமான தலைவர் தனது காய் நகர்த்தலையும் விரிவுபடுத்த ஆரம்பித்தார்.
அன்றைய நேரம் வைகோ அவர்கள் திமுக வில் பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தார். வைகோ எப்போதும் புலிகளின் அனுதாபியாகவே தன்னைக்காட்டிக் கொண்டார்.
அவரது ஆதரவும் புலிகளுக்கு நேரடியாக கிடைத்தது. அந்த நேரத்தில் அவர் தன்னால் முடிந்த சில உதவிகளை (அவரது குடும்பம் உட்பட ) புலிகளுக்கு செய்து கொண்டிருந்தார்.
திரு. வைகோ அவர்களின் வளர்ச்சி கருணாநிதி அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
ஸ்டாலினை முன்னிறுத்தும் நோக்கத்தில் வைகோவை திமுகா விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு கருணாநிதி ஓரங்கட்டினர்.
அந்த நேரத்தில் வைகோ அவர்கள் தனது தொண்டர்களுடன் சேர்த்து, புலி ஆதரவு கொண்ட தமிழக மக்களையும் தன் பக்கம் இழுக்கும் உத்தியை மறைமுகமாக கையில் எடுத்தார்.
தனது எண்ணத்திற்கு புலிகளின் நேரடி ஆதரவு தேவை என்பதை உணர்ந்தார் வைகோ.
அன்றைய நேரம் புலிகள் மூலம் கிடைக்கும் விளம்பரமும் அவருக்கு தேவைப்பட்டது.
அதனால் தான் கருணாநிதிக்கு தெரியாமல் தமிழீழம் சென்று தலைவரை சந்திக்கும் கோரிக்கை வைக்கோவால் அண்ணைக்கு விடப்பட்டது. கருணாநிதிக்கு தெரிவிக்காமல் இந்தப் பயணம் மேற்கொண்டால் என்ன நடக்கும் என்று வைகோவுக்கு தெரியும். தனிக்கட்சி தொடங்கும் முடிவை வைகோ எடுத்த பின் தான் இந்த பயணமும் ஆரம்பமானது.
மீண்டும் 2ம் கட்டஈழப்போர் சிங்களத்துடன் ஏற்பட்டால், தமிழகத்தின் ஒட்டுமொத்த ஆதரவும் எமது பக்கம் இருக்க வேண்டிய தேவை தலைவருக்கு இருந்தது.
தமிழகத்தின் செல்வாக்கான தலைவர்கள் இருவரும் (ஜெயலலிதா, கருணாநிதி) என்றைக்கும் புலிகளுக்கு உளப்பூர்வமாக ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என்பதை கருத்தில் கொண்ட தலைவர், வைகோ ஊடாக தமிழக ஆதரவுத்தளத்தை உருவாக்கும் முடிவை எடுத்து, அவரை சந்திக்க ஒரு வாரத்தின் பின் வைகோவிற்கு அனுமதி வழங்கினார்.
அந்த நேரத்தில் போரில் ஈடுபட்டிருந்த இந்திய இராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி, வைகோவை பத்திரமாக தாயகம் கொண்டுவந்து, மீண்டும் பத்திரமாக தமிழகத்திற்கு கொண்டு சென்று விடவேண்டிய பாரிய பொறுப்பு புலிகளுக்கு இருந்தது.
அதற்கான நடவடிக்கை கட்டம் கட்டமாக நிறைவேற்ற போராளிகளை தெரிவு செய்து கட்டளைகளும் அண்ணையால் பிறப்பிக்கப்பட்டது.
திட்டத்தின்படி லெப். கேணல் டேவிட் அண்ணை தலைமையில் மேஜர் ஜேம்ஸ் அண்ணை, டானியல் அண்ணை போன்றோர் தமிழகம் சென்று வைகோவை விரைவுப்படகில் வல்வெட்டித்துறையில் உள்ள பொலிகண்டிக்கு 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பத்தில் கொண்டு வந்தனர்.
அன்று எந்தவித கடற்படை தொல்லையும் இல்லாமல் இருந்ததால் அவர்களின் பயணத்தில் சிக்கல் எதுவும் இருக்கவில்லை.
அங்கு அந்த நேரம் வடமராட்சிக்கு பொறுப்பாக இருந்த சூசை அண்ணை வைகோவிற்கு பாதுகாப்பு வழங்கினார். (டேவிட் அண்ணையின் சொந்த இடம் பொலிகண்டி) அடுத்த நாள் இரவு உலர் உணவு மூட்டைகளுடன் சாதாரண மீன்பிடிப்படகில் அண்ணையை சந்திக்க வைகோ புறப்பட்டனர்.
அங்கிருந்து சுண்டிக்குளத்துக்கு கொண்டுவந்து, மீண்டும் அங்கிருந்து படகு மூலம் அலம்பிலில் உள்ள தூண்டாய் (முல்லைத்தீவு சண்டையின் போது சிங்கள ஆமி தரை இறங்கிய இடம்) எண்ட இடத்திற்கு கொண்டு வந்தனர்
.
அங்கு சொர்ணம் அண்ணை தலைமையில் கிட்டத்தட்ட நாட்பது பேர் கொண்ட அணி தயாரக நின்று, வைகோவை பொறுப்பெடுத்தனர்.
இதில் முல்லைத்தீவு மாவட்ட போராளிகள் தேவண்ணை (செட் தேவண்ணை) தலைமையில் ஒரு அணி வழிகாட்டியாகவும், பாதுகாப்பாகவும் வந்தனர்.
பால்றாஜ் அண்ணையின் (லீமா வரேல்லை) அணியை சேர்ந்த தாஸ் அண்ணை அணியினர், சத்தியராஜ் அண்ணையின் அணியினர்,கிள்ளி அண்ணை, நெடுமாரண்ணை, குஞ்சண்ணை, ரகு அண்ணை என ஒரு தடிக்குடுத்து ஓட்டம் போல ஒவ்வொரு இடத்திலையும் ஒவ்வொரு டீம் இருந்து பொறுப்பெடுத்தே காடு நோக்கி நகர்ந்தனர்.
அங்கிருந்து நாலாம் கட்டை, முறிப்பு ஊடாக குமுழமுனை, தங்கபுரம் ஊடாக சுற்றுப்பாதையால் மணலாற்றுக்கு வைகோவை கொண்டு சென்றனர்.
வைகோ வரும்போது தலைவருக்கு அன்பளிப்பாக சாண்டில்யனின் வரலாற்று நாவல்களான கடல்புறா, யவனராணி போன்ற பல புத்தகங்களையும் கொண்டுவந்தார். அந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக் குதல்களும் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தது.
இந்திய இராணுவத்தினர், தாங்கள் நாட்டை விட்டு செல்வதற்கு முன்னர், எப்பிடியாவது தலைவரைக்கொல்லும் எண்ணத்தில் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அதற்கான முயற்சியை இந்திய உளவுத்துறை ரோ செய்துகொண்டிருந்தது. எந்த வழியிலும் முயற்சிப்பார்கள் என்று இயக்கத்திற்கு நன்கு தெரியும்.
அதனால் அண்ணையின் பாதுகாப்பு கருதி, அண்ணை இருக்கும் இடத்திற்கு செல்லும் சரியான பாதை வைகோவிற்கு தெரியக்கூடாது என்பதால், வைகோவை சுற்று பாதையிலேயே அண்ணையிடம் கொண்டு சென்றனர் புலிகள்.
வைகோ காடு வந்து சரியாக "இரண்டரை மாதத்தில்" 1990 தை மாதம் 12ம் திகதி இந்திய இராணுவத்தின் கடைசி சிப்பாயும் எம் மண்ணை விட்டு இந்தியா திரும்பியிருந்தது.
இந்திய இராணுவம் வித்ரோ பண்ணும் காரணத்தால் "இந்திய இராணுவத்தின் செக்மேட் இராணுவ நடவடிக்கையும்" அன்றைய நேரம் நிறுத்தப் பட்டிருந்தது. ( இந்திய இராணுவத்தால் பதுங்கித்தாக்குதல்கள் மட்டும் நடந்துகொண்டிருந்தது)
அதனால் எந்தப்புலிக்கும் வைகோ அவர்களின் "வீர ஆவேச பேச்சுக்களை வோக்மனில் போட்டு ரத்தம் சூடேற" போராடவேண்டிய தேவை எழவில்லை.
அன்றைய நேரம் வைகோ அவர்களுக்கு பெரும் முக்கியத்துவம் அண்ணையால் கொடுக்கப்பட்டிருந்தது.
இவரை சந்திக்க வைப்பதற்காக வவுனியா பண்டிக்கெய்த குளத்தில் இருந்த மாத்தையா அண்ணை தொடங்கி, மன்னாரில் பொறுப்பாக நிண்ட பாணு அண்ணை வரைக்கும், எல்லா மாவட்ட தளபதிகளும் ஒருவார நடை பயணத்தில் மணலாற்றுக்கு கூப்பிட்டு வைகோவை சந்திக்க வைத்தார்.
அண்ணையின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு உளவியல் காரணம் இருந்தது. வைகோவிற்கு புலிகளின் பலம் குறித்தும், எதிர்கால வளர்ச்சி குறித்தும் ஒரு நம்பிக்கை குடுப்பதே அண்ணையின் நோக்கம்.
இதில் அண்ணைக்கு எங்களின் நாட்டு நலனும், வைக்கோவிற்கு கட்சி நலனுமே இருந்தது. இந்தக் காரணங்களே அன்று இருவரையும் ஒரு நேர் கோட்டில் இணைத்தது.
அங்கு தலைவரை சந்தித்து, புலிகளின் முதலாவது மாவீரர் தினத்தையும் வைகோ அனுசரித்தார்.
இவரை தமிழகம் கொண்டு செல்வதற்கு காட்டுக்கு வந்திருந்த டேவிட் அண்ணை, ஜேம்ஸ் அண்ணை கிள்ளி அண்ணை ஆகியோருடன் அதே அணி மீண்டும் அதே பாதையால் கொண்டு சென்று தமிழகம் அனுப்பி வைத்தனர்.
அங்கு சென்றதும் கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் வைகோ தனிக்கட்சி ஆரம்பித்து புலிகளுக்கு சார்பாக உதவிக்கொண்டிருந்தார்.
1991ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பினால் ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்
தமிழகத்தின் புலிகளுக்கான ஆதரவு அதல பாதாளத்துக்கு சென்றது.
அதில் இருந்து கடைசிவரை வைகோவால் தமிழகத்தை புலிகள் பக்கம் திருப்ப முடியவில்லை.
ஏன் யாராலும் முடியவில்லை.
ராஜீவின் மரணத்தின் பின் வைகோ அவர்கள் புலிகளுடனான தொடர்பை துண்டிப்பதாகவும் தனது கட்சியினர் யாரும் எந்த உறவையும் புலிகளுடன் பேணக்கூடாதெண்டும் உத்தரவு போட்டு சில வருடங்கள் அதை கடைப்பிடித்தார்.
இந்த அறிவுப்பு புலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
அதன் பின் தான் வைகோவை புலிகள் வைக்க வேண்டிய இடத்தில் வைத்தனர்.
இதனால் புதிய தலைமையை புலிகளுக்கு உருவாக்க வேண்டிய தேவையும் எழுந்தது.
புலிகளின் முடிவுக்கு சர்வதேசம் எப்படி இராணுவ, புலனாய்வு ரீதியா உதவியதோ அதே போல அரசியல் ரீதியாகவும் உதவியது. உதாரணத்திற்கு புலம்பெயர் தேசத்தில் எமது மக்கள் வீதிகளில் போராடிய போது அந்த செய்திகள் மீடியாவில் வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
அது போலவே தான் தமிழகத்திலும் மத்திய அரசின் துணையுடன் புலிகளின் நண்பர்களைக் கொண்டே, தமிழக எழுச்சி திமுக வாள் அடக்கப்பட்டது. அதற்கு இயக்குனர் ராம் எழுதிய முத்துக்குமாரின் இறுதி நிகழ்வே சாட்சி.
இறுதி யுத்தத்தின் போது பல உதவிகள் புலிகளால் வைகோவிடம் முன் வைக்கப்பட்டது.
அதில் எதுவுமே அவர் செய்யவில்லை ஏனெனில் அவருக்கு புலிகளின் முடிவு பற்றி மத்திய அரசால் சொல்லப்பட்டிருந்தது.
அவர் போலவே இயக்கத்தின் நண்பர்கள் எனக் காட்டிக்கொண்ட பலர், அன்று கள்ள மொளனம் சாதிச்சனர்.
இதனால் அவர் மீதான நம்பிக்கை இறுதி நேரத்தில் முற்றாக அண்ணைக்கு தகர்ந்திருந்தது.
இறுதியில் வைகோ செய்தவை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதற்கு சாட்சியாக வைகோவை கையாண்ட புலிகள் இன்றும் உயிருடன் வாழ்கிறார்கள்.
அன்று மறைமுகமாக இருந்த வைகோவின் சந்தர்ப்பவாத அரசியல் இன்று வெளித் தெரிய தாராளமாக நடக்கின்றது.
எங்கள் அழிவை வேடிக்கை பார்த்து உதவி செய்த திமுகா விற்கு கைப்பிள்ளையாகி விட்டார்.
வைகோ இயக்கத்துக்கு செய்த உதவிகளை நாங்கள் மதிக்கிறோம். அதற்கு நன்றிக்கடனும் பட்டுள்ளோம்.
ஆனால் தலைவரின் எண்ணத்தை அவர் நிறைவேற்ற தவறிவிட்டார்.
இன்று தமிழக அரசியலில் கேலிப்பொருளாக மாறியிருக்கும் வைகோவை,
ஸ்டாலின் திரு. சீமானை எதிர்ப்பதற்காகவே பயன்படுத்துகிறார். அதற்கு அவர் புலிகளுடனான தனது பழைய உறவை புதுப்பித்து பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.
வர இருக்கும் தேர்தலில் சீமானை எதிர்க்க மட்டுமே வைகோ பயன்படுத்தப்படுவார். இதை விட வைகோவால் ஸ்டாலினுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை.
அந்த வரிசையில் தான், மணியண்ணை குழுவினரும் ஸ்டாலினால் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதை அவர்கள் தெரிந்தே செய்கிறனர். காரணம் உங்களுக்கும் தெரியும்.!
முச்சந்தி முரளி...
கருத்துகள் இல்லை