மக்களின் நண்பன்.. ஏகாதிபத்தியத்தின் எதிரி..! ஹியூகோ சாவேஸ் நினைவுதினப் பகிர்வு


``அந்தச் சாத்தான், இந்த இடத்துக்கு நேற்று வந்திருந்தது; இதே இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தது. அது வந்து சென்றதன் அடையாளமாக, இங்கே இன்னமும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது..."
என்று பேசிக்கொண்டிருந்தார் அவர். சுற்றி இருந்த அனைத்து உலகத் தலைவர்களும் ஒரு நிமிடம் திடுக்கிட்டனர். பதிவு செய்துகொண்டிருந்த கேமராக்கள் சில நொடி அதிர்ச்சியில் முடங்கின. ``என்ன... இப்படியெல்லாம் பேசுகிறார்!"  எனச் சுற்றி இருந்தவர்கள் பதற்றத்தில் முணுமுணுத்தனர். காரணம், பேசிக்கொண்டிருந்த இடமோ உலக நாடுகள் கூட்டமைப்பின் தலைமையகமான ஐ.நா சபை. அவர் கூறிய அந்தச் சாத்தான், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். அப்படியிருக்க, இந்தத் துணிவும் அசாத்திய ஆற்றலும்கொண்ட வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர், அப்போதைய வெனிசுலா அதிபர் ஹுயூகோ சாவேஸ்.

உலகிலேயே பலம்பொருந்திய அதிபரை ஐ.நா-விலேயே `சாத்தான்' என்றும், வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் குடிகாரன், நோயாளி, கழுதை, தீயசக்தி என்றும் கூறியவர் சாவேஸ். உலக நாடுகளே உறவாடும் அமெரிக்காவின் மீது, சாவேஸுக்கு என்ன கோபம்? தீவிரவாதத்துக்கு எதிராகச் சூளுரைத்து, அனைத்து நாடுகளையும் உடன் அழைத்து அமைதியை நிலைநாட்ட விரும்பினார் புஷ். சாவேஸோ, எப்போதும் கலவரம் சூழ்ந்து கிடக்கும்  லத்தீன் அமெரிக்க நாடுகள் ஒன்றின் அதிபர். நில அமைப்பின் அடிப்படையில்கூட அமெரிக்கா மேல் இருக்க, வெனிசுலா கீழ்தான் உள்ளது. அப்படிப்பட்ட சாவேஸ், அமெரிக்க அதிபரைப் பகைத்துக்கொள்வது நியாயமா? ஒருபுறம் காஸ்ட்ரோவுடன் டூயட் பாடுகிறார். மறுபுறம் புஷ்ஷை கண்டபடி திட்டுகிறார். `யார் அந்த சாவேஸ்?' என்று புலம்பிக்கொண்டிருந்தது உலகம்.

வெனிசுலாவின் பாரினாஸ் மாகாணத்தில் உள்ள சபனேட்டா என்ற ஊரில் பிறந்தார் (ஜூலை 28, 1954) சாவேஸ். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். ஓலைகளால் வேயப்பட்ட மேற்கூரை, மெழுகப்படாத குண்டும் குழியுமான தரைதான் சாவேஸ் வீடு. ஆரம்பத்தில், சாவேஸை பாதிரியார் ஆக்கத்தான் தாய் முடிவுசெய்தார். அந்த முயற்சி பாதியிலேயே கைவிட, பாட்டி வீட்டுக்கு அனுப்பிப் படிக்கவைக்கப்பட்டார்.

விளையாட்டும் ஊர் சுற்றுவதுமாக பொழுதைப் போக்கிய சாவேஸ், திடீரென ராணுவத்தில் சேரப்போவதாக தந்தையிடம் கூறினார். ஏதோ சின்னப்பையன் சொல்கிறான் என்று தந்தை அலட்சியப்படுத்த, சாவேஸ் தன் முடிவில் உறுதியாக இருந்தார். காரகாஸில் இருந்த `Venezuelan Academy of Military Sciences' என்ற ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். வரலாறு, தத்துவம், அரசியல் என, புத்தகங்கள் மீது சாவேஸுக்கு ஆர்வம் எழுந்தது. மாவோ, சாவேஸின் ஆதர்ச நாயகன் ஆனார். மேலும், பொலிவர், டோரிஜோஸ், அலண்டே போன்ற லத்தீன் அமெரிக்கத் தலைவர்களைத் தேடித் தேடிக் கற்றார்.

1975-ம் ஆண்டு ராணுவப் படிப்பு முடிந்து, துணை லெஃப்டினென்டாகப் பொறுப்பேற்கிறார். பிறகு, மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றுகிறார். கம்யூனிச எதிர்ப்பு, போராட்டக்காரர்களுக்கு எதிராக அராஜக நடவடிக்கை போன்ற போக்குகளைக் கையாண்டது ராணுவம். இதனால், அதிருப்தியடைந்த சாவேஸ், தன்னைப்போன்ற எண்ணம்கொண்டவர்களை ஒன்றிணைத்து `பொலிவர் புரட்சி ராணுவம்' என்ற ரகசிய அமைப்பை உருவாக்குகிறார். 1983-ம் ஆண்டு பொலிவர் 200-வது பிறந்த நாளன்று `பொலிவர் புரட்சி ராணுவம் 200' (Bolivar Revolutionary Army 200) என்று பெயர் மாற்றப்படுகிறது.

அப்போது வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் துயரில் வாடிக்கொண்டிருக்க, சிலர் மட்டும் அரசின் உதவியோடு உல்லாசத்தில் வாழ்ந்தனர். அனைத்துக்கும் காரணம், அதிபர் பேரெஸ் (Carlos Andres Perez). அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு அவர் வாங்கிய கடன்கள் ஒருபுறம், மறுபுறம் மக்கள் மீது அலட்சியம்... இதை எதிர்த்து 1989-ம் ஆண்டு பிப்ரவரியில், மக்கள் போராட்டத்தில் இறங்கினர். எச்சரிக்காமல் பலரையும் சுட்டுக்கொன்றது ராணுவம். கோபமான சாவேஸ், பதிலடி கொடுக்க முடிவெடுத்தார். தம்மைப் போன்ற இயக்கங்களை இணைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக ரகசிய ஆயுதப் போராட்டத்துக்குத் திட்டமிட்டார். Causa R - போன்ற அமைப்புகள், கடைசி நேரத்தில் வராமல் காலை வாரின. அதனால், புரட்சி தோல்வியடைந்து சாவேஸும் இயக்கத்தாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சாவேஸ், நாடு முழுவதும் பிரபலமானார்.


1994-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் Causa R அமைப்பு போட்டியிட்டது. ``இந்த மோசமான ஆட்சியை வீழ்த்த, சாவேஸ் ஆதரவுடைய எங்களுக்கு வாக்களியுங்கள்'' என்று அந்த அமைப்பின் தலைவர் கால்டேரா பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றிபெற்று அதிபரும் ஆனார். கடைசி நேரத்தில் வராமல் துரோகம் செய்தவர்கள் தன் பெயரைப் பயன்படுத்தியது சாவேஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சிறையில் பல்வேறு விஷயங்களைக் கற்கவும் சிந்திக்கவும் தொடங்கினார்.

`லெனின், மாவோ, காஸ்ட்ரோ அனைவரும் மக்களைச் சேர்த்துதானே போராடினார்கள். தான் ஏன் மக்களை அழைக்கவில்லை. `ஆயுதமல்ல ராணுவம், மக்கள்தான் ராணுவம்' என்று மாவோ சொன்னதை எப்படி மறந்தேன்?' எனச் சிந்தித்த  சாவேஸ், ஒரு முடிவுக்கு வந்தார். `மக்களிடம் போகிறேன், அவர்களிடம் பேசுகிறேன், மக்கள், உண்மையை உணர்வார்கள், மக்களே எப்படித் தவறாகச் சிந்திப்பார்கள்?' என ஊர் ஊராக மக்களைச் சந்தித்துப் பேசினார். மக்கள், சாவேஸை ஆதரித்தனர். 1998 டிசம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999 பிப்ரவரி 2 அன்று, அதிபராகப் பொறுப்பேற்கிறார் சாவேஸ்.


சாவேஸ் பொறுப்பேற்கும்போது வெனிசுலாவின் பொருளாதாரம் பூஜ்ஜியம். கஜானா காற்று வாங்கியது. அரசு அலுவல்கள் முடங்கிக்கிடந்தன. மாற்றத்தை, தனக்கு விருப்பமான ராணுவத்திலிருந்தே ஆரம்பித்தார். ``காலாட்படையா, மக்கள் ரொம்பக் கஷ்டப்படுகிறார்கள். போய் ரோடு போடுங்கள், தண்ணீர் குழாய் அமையுங்கள், அவர்களுக்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் செய்துகொடுங்கள். விமானப்படையா, இது சும்மா நிற்பதற்கா, மக்களை வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். கப்பல் படையா, மீனவர்கள் ரொம்பச் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்" என்று ராணுவம் முழுவதையும் மக்கள் சேவைக்கானதாக மாற்றினார்.

அடுத்து நிலம். இது எப்போதும் பிரச்னைதான். சொற்ப நபர்களிடம் நாட்டின் 75% நிலம் இருப்பது நியாயமில்லைதானே. ஆதலால், அவை இனி அரசாங்கத்துக்குச் சொந்தம் என்று அறிவித்தார். அலறினார்கள் பண்ணையார்கள். உச்ச நீதிமன்றம் வரை சென்றும், சாவேஸ் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. கல்வி, மருத்துவம் என அனைத்திலும் புதிய திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டன.

அடுத்து சாவேஸ் கை வைத்தது பெட்ரோல். `பெட்ரோலிய உற்பத்தியில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் நாடு வெனிசுலா. ஆனால், இன்னும் நாம் ஏன் மற்ற நாடுகளைப்போல முன்னேறாமல் உள்ளோம்?' எனச் சிந்தித்தார். காரணம், மிகக் குறைந்த விலைக்கே ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய். உலகத் தலைவர்களைச் சந்தித்து OPEC கூட்டமைப்பில் புதிய செயல்முறைகளைப் பரிந்துரைத்தார். கச்சா எண்ணெய் ஏற்றுமதி விலையை அதிகமாக்கினார். குறிப்பாக, பெட்ரோலியத்தை நாட்டுடைமையாக்கினார். மேலும், தனியார் துறைகளுக்கு வரம்புகளை விதிப்பது, உற்பத்தியில் அரசு தலையிடுவது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டார். `எது... இன்னொரு கஸ்ட்ரோவா!' என்று அமெரிக்க மற்றும் பிற வல்லரசு நாடுகள் எரிச்சலைடைந்தன. சாவேஸுக்கு எதிராக சி.ஐ.ஏ-வின் மறைமுகச் செயல்பாடு, ஆட்சிக் கவிழ்ப்பு, கொலை முயற்சி அனைத்தும் திட்டமிடப்பட்டன. சளைக்காமல் இயங்கிக்கொண்டிருந்தார் சாவேஸ்.

`சாவேஸ், ஒரு சர்வாதிகாரி' என்று அமெரிக்கா பிரசாரம் (இன்று வரை) செய்தது. சாவேஸோ `மனிதகுலத்தின் மாபெரும் எதிரி, அமெரிக்க முதலாளித்துவம்' (சாவேஸ் தன்னை கம்யூனிஸ்ட்டாக அறிவித்ததில்லை) என்றார். 9/11 உட்பட பல சதிச்செயல்களில் புஷ்ஷுக்கு சம்பந்தம் உண்டு என்று வாதங்களை அடுக்கினார். சாவேஸின் இந்தத் தைரியமும் துணிவும்தான் அவரை தொடர்ந்து செயல்படவைத்தன.

ஆனால், இன்று சாவேஸ் கனவு கண்ட வெனிசுலா, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்துகொண்டுள்ளது. அதிகாரவர்க்கங்களின் அரசியல் விளையாட்டில் மக்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். சாவேஸ், பிற நாட்டு மக்கள் மீதுகூட கரிசனப்பட்டார். குறிப்பாக, அமெரிக்க மக்கள். அங்குள்ள ஏழைகளுக்காகக் குரல்கொடுத்தார். ``நான் அமெரிக்க மக்களை எதிர்க்கவில்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத்தான் எதிர்க்கிறேன்'' என்றார். 2013-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி மண்ணுலகைவிட்டுப் பிரிந்தார்.

அப்படிப்பட்ட சாவேஸின் மக்கள், இன்று ஏகாதிபத்தியத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்காகப் போராட சாவேஸ்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். #RememberHugoChavez
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.