பிரபலமான சமூக பதிவுகளும் தமிழ் சமூகமும் பொள்ளாச்சி சம்பவமும்..!

சிலர் எழுதும் பதிவுகள் மிகவும் நன்றாக இருக்கும்.அல்லது அவர்கள் தெரிவுசெய்யும் படங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும் . அந்த கருத்துக்களை மக்கள் பகிர்ந்தளிக்கின்றார்கள் அல்லது விருப்பம் இடுகின்றார்கள் . பகிரப்படும் அளவின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறித்த கருத்தின் ஆழம் உணரப்படுகின்றது.
இன்னும் சில எழுத்துக்கள் கவிதை வடிவிலானதாக இருக்கும் அவை கவிஞர்கள் என்று சுற்றும் பலரின் கருத்தையும் விருப்புகளையும் உள்வாங்கும்.கவிஞர்கள் என்று இருப்பவர்கள் கவிஞர்களை சுற்றி கருத்திடுவதும் வாழ்த்துவதும் நிகழ்கின்றது. .அரசியல்வாதிகளின் எடுபிடிகள் அரசியல்வாதிகளின் செயற்பாட்டிற்கு முண்டுகொடுத்து நின்றுகொண்டு அவற்றை பகிரும் நிலையும் காணப்படுகின்றது.

ஆனால் சிலரின் பதிவுகள் சீரானதாக சிறப்பானதாக இருக்கும் அவற்றிக்கு விருப்போ கருத்தோ இடப்படுவதில்லை.காரணம் அந்த எழுத்தாளர் வேறு யாருக்கும் விருப்போ கருத்தோ இடுவதில்லை என்பதும் சரியான விடயங்களை நீதியாக கூறுவதும் காரணமாக இருக்கலாம் . அதனை வாசிக்கும் நபர்கள் கூட கருத்துக்களோ விருப்புகளோ கூறுவதில்லை .ஆனால் கவனித்தபடியே இருப்பார்கள்.

இன்றைய காலத்தில் இளம்பெண்கள் சமூக சேவை செய்வதாக கூறி தமது அழகிய படங்களுடன் பதியும் போது அந்த பதிவுகள் மிகவும் அதிகமாக சமூக ஊடக செய்திகளில் பகிரப்படுகின்றது. முகவலையில் தமது படங்களை போட்டுக்கொண்டு சமூக சேவை செய்வதாக சொல்லி செல்லும் இளம் பெண்கள் பல இடங்களில் பல சிக்கலைகளை பாலியல் துன்பங்களுக்குள் உள்ளாகும் சம்பவங்களும் நிகழ்கின்றது. தெரிந்தோ தெரியாமலேயே பாலியல் குழிக்குள் இளம்பெண்கள் விழுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். .அது மட்டுமன்றி  பெண்களின் அரைகுறை படங்களும் செஸ் சம்பந்தமான எழுத்துக்களும் அதிகளவில் பகிரப்படுகின்றது. மக்கள் சனத்தொகையிலும்  இரண்டு மடங்கு அதிகமான முகவலை கணக்குகள் உண்டென கூறப்படுகின்றது.
அப்படியாயின் ஒவ்வொரு நபரும் ஒன்றிற்கு மேற்பட்ட சமூக தளங்களை பாவிக்கின்றார்கள் என்றே எண்ணலாம்.

மனித மனங்கள் ஆசைகளில் சிக்கி இருக்கின்றது.இந்த ஆசைகளால் முதலிடம் பெறும் ஆசை காமம். காமம் சம்பந்தமான படங்கள் எழுத்துக்கள்.சமூக வெளியிடங்களில் கொட்டி கிடக்கின்றது.ஆனால் சமூகத்தின் முன்னிலையில் தம்மை நல்லவர்களாக காட்டும் நபர்கள் பாலியல் படங்களையும் பாலியல் பற்றிய எழுத்துக்களை படிக்கவும் தமது போலி முகவலையை பயன்படுத்திடுவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. அதனாலேயே தான் உலக சனத்தொகையில் இரண்டு மடங்கு அதிகமான சமூகவெளி கணக்குகள் இருக்கிறது.அதுமட்டுமன்றி சமூகத்தின் முன்னால் தம்மை நல்லவர்களாக காட்டும் பலரும் ஏதோ ஒரு நேரத்தில் அல்லது தனிமையில் பாலியல் சம்பந்தமான விடயங்களை தேடி படிப்பதும் வாசிப்பதும் நிகழ்கின்றது.அதனை பலர் தமது போலி முகவலையில் பகிர்வதும் சிலர் வாசித்துவிட்டு எதுவும் அறியாதவர்கள் போல நடப்பதும் உண்டு ...

பாலியல் சம்பந்தமான பதிவுகளை வாசிப்பதும் அதனை அறிவதும் தவறல்ல. ஆனால் அவற்றை போலி முகவலையில் பதிந்து பகிர்ந்தளித்து ஊடகங்களுக்கு வழங்கி அதற்கான செயற்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து பாலியல் பற்றிய தூண்டலை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டு செல்வதும் சிறந்த பாலியல் பற்றிய வீடியோ காட்சிகள் அதிகளவில் பகிரப்படுவதுடன் பணம் சம்பாதிக்கும் விடயமாகவும் மாறிவிட்டது இன்றைய பல தவறுகளுக்கு காரணம் என்பதை நாம் என்றும் உணர்ந்து கொள்வதில்லை. பொள்ளாச்சி காம லீலையின் பின்னணியில் குறித்த சில நபர்களை கைகாட்டும் நாம் திருட்டுதனமாக ஒரு தடவையாவது பாலியல் சம்பந்தமான பதிவுகளை பகிர்ந்தளித்த ஒவ்வொருவரும் காரணம் என்று ஏற்றுக்கொள்ள போவதில்லை.

வளர்ச்சியடைந்த நாடுகளில் பாலியல் சம்பந்தமான படங்களும் அவற்றிக்கான வெளிகளும் பாலியல் பற்றிய அறிவும் வெள்ளைக்கார மக்களிடம் உண்டு . அதனால் ஆசிய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது பாலியல் தவறுகள் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது..புலம்பெயர் நாட்டில் வாழும் எமது ஆசிய மக்களிடம் அதற்கான அறிவு முழுமையாக  இல்லாவிடிலும் மிகவும் குறைந்தளவான அறிவு மட்டுமே உண்டு. அதனால் தான் திருமணமாகாத அல்லது திருமணமான ஆண்கள் பெண்கள் தவறான பாதையில் வேறு ஒரு தொடர்பிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது எனலாம்.
இதேபோன்று ஈழத்திலும் இந்த நிலை காணப்படுகின்றது. எமது போராட்ட சூழலில் தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் குறைவாகவும் சமூக தொடர்புகள் அற்ற நிலையிலும் காணப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.அதுமட்டுமன்றி போராட்டத்தின் கட்டுமான அமைப்பும் அதில் மீதிருந்த பயமும் நம்பிக்கையும் போராட்ட குணமும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருந்தால் பாலியல் பற்றிய நடவடிக்கைகள் பாலியல் பற்றிய சிந்தனைகள் இளையோர் மனதில் மிகவும் குறைந்தளவில் இருந்தது .

ஆனால் போராட்டம் மௌனித்த பின்னர் வாழும் மக்களிடையே
புலம்பெயர் நாட்டில் அல்லது ஈழத்தில் வாழும் திருமணமாகாத ஆண்கள் பெண்களுக்கு பாலியல் பற்றிய தவறான கருத்துக்களே பகிரப்படுகின்றது. அதாவது பாலியல் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவும் எட்டிட முடியாத இன்பத்தின் இரகசியம் என்றும் இளையோரிடத்தில் பாலியல் பற்றிய சிந்தனை விதைக்கப்படுகின்றது. இத்துடன் திருமண வயதெல்லைகள் ஈழத்தில் அதிகரித்து காணப்படுவதும் குடும்ப சுமையை குறைக்கும் சக்தியாக திருமணமாகாத அல்லது திருமணமாகி குறித்த காலத்திற்குள் குடும்பத்தை விட்டு விலகி வாழவேண்டிய தேவையில் இளைஞர் யுவதிகள் இருப்பதால் பாலியல் தேவையை தீர்த்துக்கொள்ள தம்முடன் பணியாற்றும் அல்லது சமூக வலைத்தளத்தில் பயணிக்கும் நபர்களை அணுகும் நிலை காணப்படுகின்றது. இதனாலேயே தான் ஈழத்தில் பாலியல் தவறுகளும் அதனால் பல குற்ற செயல்களும் ஏற்படுகின்றது என்று கூறலாம்.

இன்னும் ஒரு நிகழ்வாக சமூக வலைத்ததளத்தில் அல்லது பொது பணியிடங்களில்  சந்திக்கும் நபர்கள் தமது தவறுகளை நியாயப்படுத்த திருமணமான/திருமணமாகாத ஆண்கள் பெண்கள் சந்திக்கும் நபர்கள் தமக்குள் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொள்கின்றார்கள். எங்கள் இருவருக்கும் பாலியல் தேவை உள்ளது. நாம் சேர்ந்து வாழ்ந்திட போவதில்லை ஆனால் எமது தேவையை பூர்த்திசெய்ய நாம் எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வோம் என்றும் ஒழுக்க பிறழ்வு நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். தமது பாலியல் தேவையை பூர்த்தி செய்ய ஆரம்பித்த உறவுமுறையானது சில நேரத்தில் அவர்கள் பிரிந்து செல்ல முடியாத அளவிற்கான பிணைப்பை ஏற்படுத்தி விடுகின்றது . இதனால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு மனநல பாதிப்புகளும் ஏற்படுகின்றது. மேலும் தமது துணையுடன் சரியான ஒரு வாழ்வினை வாழ்ந்திட முடியாமல் மேலும் மேலும் தவறினை செய்வதற்கும் வேற்று உறவுகளை தேடி செல்வதற்கும் மனச்சிக்கல் காரணமாகின்றது.

திருமணமான பெண்கள் ஆண்கள் எந்த காலத்திலும் பிரிந்து வாழ்வது குடும்ப சுமையை சுமக்க கடல்கடந்து செல்வது என்றும் ஏற்புடையது அல்ல. முன்னர் எம்மவர்கள் சென்று வாழ்ந்தார்கள் தானே இப்போது என்ன இவர்களுக்கு என்று நீங்கள் கூறுவது புரிகின்றது.ஆனால் முன்னர் இதபோலான உலகமும் சமூகமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இப்போது இல்லை.மிகவும் அதிகமான அளவிலான தொழில்நுட்ப வளர்ச்சியே பல தவறுக்கும் குற்றத்திற்கும் காரணம் என்று கூறலாம்.

அதேபோன்று இளமையில் விதவை /தபுதாரன் ஆவதும் புரிதலற்ற பேச்சு,காதல் திருமணங்களும் ஒழுக்க சிதைவிற்கு இன்னுமொரு முக்கிய காரணம் எனலாம்.

ஆகவே எமது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு குற்றத்திற்குமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் புரிதலான உறவுடன் திருமண பந்தத்தில் ஈடுபடுவதும் அவசியம்.

அதிகரித்த பெண்கள் கல்வியறிவும் பெண்களின் ஆளுமையும் பெண்களின்

அறிவுத்திறனை ஏற்றுக்கொள்ள தயங்கும் ஆண்களின் மனநிலை கட்டமைப்பும் கூட ஒழுக்க சிதைவுகளுக்கு காரணம் இவற்றை எல்லாம் எப்போது எமது சமுதாயம் உணர்ந்துகொள்கின்றதோ அன்றே தான் சமூகம் என்பது சரியான பாதையில் பயணிக்கும்.அதுவரை நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடித்தளவான எழுத்துக்களை எழுதிக்கொண்டே இருப்போம்

நன்றி
காவியா
12/03/19
10.42

No comments

Powered by Blogger.