கால அவகாச நீடிப்பு.! கூட்டமைப்பினருக்கே செழிப்பு!

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளதுடன், கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்றும் அதற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பதையும் கேட்கிறார். இந்நிலையில் அதற்கு மாறாக காலஅவகாசம் வழங்கக்கூடாதென கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் சிலவும் வெளியில் உள்ள தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக அறிகிறோம். அதில் உங்கள் வகிபாகம் எப்படி இருக்கும்? அதனால் எவ்வாறான பயன் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? ஏன் கால அவகாசம் வழங்கக் கூடாது ?

பதில்:எமது முறையீட்டின் பிரதி இங்கு உங்கள் பார்வைக்காக இருக்கின்றது. 4 வருடங்களாக ஐ.நா பிரேரணையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வரவில்லை.மாறாக நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று உயர் பதவிகளில் உள்ளோர் கூறியுள்ளார்கள்.

இலங்கை ஏதாவதொரு கடப்பாட்டை நடைமுறைப்படுத்த முன்வந்தால்த்தான் சர்வதேசக் கண்காணிப்பு இடம்பெறும். முன்வராவிட்டால் கால அவகாசம் வழங்குவதால் வரும் இலாபம் என்ன?

கொடூரமான கொலையாளிகளைத் தமது துணிச்சல் மிக்கவீரர்கள் என்று தொடர்ந்துவரும் இலங்கை அரசாங்கங்கள் அடையாளப்படுத்தும் வரை எந்த ஒரு பிரேரணையின் நடைமுறைப்படுத்தலும் நடைபெறாது.

காலஅவகாசம் கொடுத்தாலும் அது நடைபெறாது. சவேந்திர சில்வாவுக்கு அதியுயர் இராணுவ பதவி கொடுத்திருப்பதில் இருந்து இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இரண்டு வருடக் காலக்கெடு 2017ல் கொடுத்தபோது அடுத்த இரு வருடங்களில் எதுவும் நடைபெறாது என்று அமெரிக்க உயர் அதிகாரி நிசா பிஸ்வால் அவர்களுக்கு கூறினேன்.

“இல்லை! பிரேரணையை நடைமுறைப்படுத்தவே காலஅவகாசம் கொடுக்கின்றோம்”என்றார்.

“நீங்கள் அவ்வாறு கூறிவிட்டு,கால அவகாசம் கொடுத்துவிட்டுப் போய் விடுவீர்கள். இலங்கை அரசாங்கத்தை நடைமுறைப்படுத்தவைக்க யார் வருவார்கள்?”என்று கேட்டேன்.

“நாங்கள் உங்களுடன் தான் எப்பொழுதும் இருப்போம்”என்று தமிழர்களின் நலனைத் தாமும் நாடுவதாகக் கூறினார்.

இன்று என்ன நடந்துள்ளது? அமெரிக்கா எங்கே? அவர்கள் பின்னால் இருப்பதாகக் கூறினாலும் முன்னால் வரமுடியாமலேயே அவர்கள் பின்னால் இருக்கின்றார்கள்.

தமிழ் மக்களுக்கேற்பட்ட உயிரழிவை,கொடூரத்தை வரவேற்றவர்கள் இலங்கை அரசாங்கத்தினர். இன்றும் கொலையாளிகளைத் தூக்கி வைத்தே பேசுகின்றார்கள். அத்துடன் அன்றிருந்தவர்களிடையே பசிலை விட கோத்தபாயாவுக்கே ஆதரவு இன்றும் அதிகம். அந்தவிதத்தில் பெரும்பான்மை சிங்களமக்களும் போர்க் குற்றங்கள் அல்ல, அவை எமது போர் வீரர்களின் துணிச்சல் மிக்கவீரமே என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள்.

ஆகவே யார் பிரேரணையை நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள்? காலஅவகாசம் என்னத்தைப் புதிதாக இயற்றித் தரப் போகின்றது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால்,அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அதுவரை நல்லகாலம் என்ற நோக்கில் காலஅவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருப்பன. எம்மால் அதுமுடியாது.

தமிழர்களை இனியும் ஏமாற்றிக்கொண்டிருக்க எம்மால் முடியாமல் இருக்கின்றது. ஜெனிவாவில் ஒருமுகம் இலங்கையில் ஒரு முகம் காட்டுகின்றது இலங்கை அரசாங்கம். அத்துடன் தமக்குள்ளேயே வெவ்வேறு முகங்களையும் காட்டிவருகின்றனர். சுயநலகாரணங்களுக்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகின்றது.

முழுமையான உண்மையான விசாரணை இடம் பெற்று நீதி கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தினூடாகவே எமது மக்களுக்கு நியாயம் கிடைக்கும், நீதிகிடைக்கும். நடந்த கொடூரங்களைக் காலக் கெடுகொடுத்து மறைத்துவிடவா ஐக்கிய நாடுகள் இருக்கின்றது? ஏற்கனவே 10 வருடங்கள் பூர்த்தியாக உள்ளது. கால அவகாசம் எதற்கு?நீங்களேசொல்லுங்கள் என நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதிலளித்தார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.