ஆஸ்திரேலியாவின் 18 மாத கடின உழைப்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளதற்கு அந்த அணியின் 18 மாத கடின உழைப்பே காரணம், என்று துணை கேப்டன் அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.


இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஒருநாள் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி மாற்றம் குறித்து பேசிய அந்த அணியின் துணை கேப்டன் கேரி, கடந்த 12-18 மாதங்களில் தங்கள் அணியினர் செய்த கடின உழைப்பின் காரணமே இந்த வெற்றி, என தெரிவித்துள்ளார். "தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் மிகுந்த நெருக்கடியான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டோம். தற்போது வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியும் வெற்றி பெறமுடியவில்லை. தற்போது வெற்றிக்காக கடினமாக உழைத்து வருகிறோம். இறுதிப்போட்டிக்கு மிகுந்த நம்பிக்கையுடன் செல்கிறோம்" என்று கூறினார்.
தொடர் முடிந்தவுடன் உலகக் கோப்பைப் போட்டியின்போது, மிட்செல் ஸ்டார்க் மற்றும் தடை செய்யப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் திரும்ப விளையாட உள்ளது குறித்து பேசிய கேரி, "அவர்கள் வரவேண்டும். பெரிய வீரர்கள் வருவதும் போட்டி அதிகரிப்பதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம் தான்" என்று கூறினார்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக எதிர்கொண்டு வருவது பற்றி பேசிய கேரி, "இதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். கடந்த 18 மாதங்களாக சுழற்பந்துக்கு எதிராக பயிற்சி எடுத்தோம். சிறப்பான இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுடன் நெட்டில் பயிற்சி எடுத்தோம். நாளைய போட்டி மிக சிறப்பானதாக அமையும் என நம்புகிறோம்" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.