கால அவகாசம் வழங்குமாறு ஸ்ரீலங்கா கோரிக்கை!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றுதல், உண்மை மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் காணப்படும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு 40 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை இணை அனுசரணை வழங்கி சமர்ப்பித்துள்ள இந்த பிரேரணையில் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அமெரிக்கா பேரவையில் இருந்து விலகியுள்ளமையால், பிரித்தானியாவின் தலைமையில் கனடா, ​ஜேர்மன், மொன்டினிக்ரோ, வடக்கு மெசடோனியா மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் இலங்கை இணை அனுசரணையுடன் இம்முறை பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

இலங்கையில் காணப்படும் ஜனநாயக நிறுவனங்களின் ஊடாக, 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இடம்பெற்ற அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டமை புதிய பிரேரணையின் ஊடாக வரவேற்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை உள்ளிட்ட முக்கிய பல நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களுக்காகவும் மனித உரிமைகள் பேரவையிடம் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதன் முன்னேற்றம் தொடர்பில் 43 ஆவது மற்றும் 46 ஆவது கூட்டத்தொடர்களின் போது ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தலைமையில்  (12) நடைபெற்ற கலந்துரையாடலில், இம்முறை கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் குழு பெயரிடப்பட்டது.

ஜெனிவா குழுவிற்கு மஹிந்த சமரசிங்க தலைமை வகிப்பதாக இதற்கு முன்னர் கூறப்பட்ட போதிலும், அவருக்கு பதிலாக வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இம்முறை குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

கலாநிதி சரத் அமுனுகம, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நெரீன் புள்ளே ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.