கோடிகளை சுருட்டிய தமிழக ஐஏஎஸ் அதிகாரி !!

தனியார் மருத்துவக் கல்லுாரியில் மெடிக்கல் சீட் மற்றும் அரசு வேலை  வாங்கித்தருவதாக கூறி ரூ. 5.5 கோடி மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.


சென்னை, நுங்கம்பாக்கம், பொன்னாங்கிபுரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் நிசார் அகமது (49). தொழிலதிபர். கடந்த 2015-ம் ஆண்டு தனது மகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வேண்டி தனது நண்பர் செல்வகுமார் என்பவரை அணுகினார். செல்வகுமார் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான மோகன்ராஜ் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய நிசார் அகமது கடந்த 2015-ம் ஆண்டு ரூ.50 லட்சத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி மோகன்ராஜிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மோகன்ராஜ் பேசியபடி மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது குறித்து நிசார் அகமது சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவிந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், புஷ்பராஜ் கொண்ட போலீஸ் டீம் விசாரித்தது. விசாரணையில் ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ், பணம் வாங்கி மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜை கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஐ.ஏ.எஸ். அதிகாரியான மோகன்ராஜ், போக்குவரத்து துறை துணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் பணியிலிருந்த சமயத்தில் செல்வக்குமார் அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார். இந்த நட்பின் அடிப்படையில்தான் செல்வகுமார் மூலம் அறிமுகமான நிசார் அகமதுவிடம் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக மோகன்ராஜ் உறுதியளித்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் சீட் வாங்கி கொடுக்கவில்லை.

 மத்திய குற்றப்பிரிவில் மோகன்ராஜ் மீது புகார் கொடுத்ததும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மோகன்ராஜை கைது செய்துள்ளோம். மேலும் நாங்கள் நடத்திய விசாரணையில்
சுமார் 106 நபர்களிடம் உதவி பேராசிரியர், ஆசிரியர், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், ஏ.பி.ஆர்.ஒ, போலீஸ் என அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி திருவண்ணாமலையைச் சேர்ந்த போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் மற்றும் அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து மோகன்ராஜ்  பண மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. வேலைக்கு ஏற்ப  தலா ரூ. ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை மொத்தம் ரூ.5.5 கோடி வரை பெற்று மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.  கடந்த 2017-ம் ஆண்டு  ஜனவரி மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மோகன் கடந்த 2015, -2016ம் ஆண்டுகளில் பணியிலிருந்த போது, நாவப்பனின் மோசடி செயலுக்கு தனது அலுவலகத்தை கொடுத்து மோகன்ராஜ் உடந்தையாக இருந்துள்ளார். செல்வராஜ் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடிவருகிறோம்" என்றனர்

கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மோசடி வழக்கில் ஓய்வு பெற்ற தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் கைதான சம்பவம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.