உதிர்ந்து போன காலச் சருகுகளுடன்..!!

பட்ட மரக்கொப்புகளுக்கும் எனக்குமான தொடர்பு ...
தாய் சேய்க்கிடையிலான உரிமம் போல்
 மிகுந்த உரம் வாய்ந்ததாகவே உள்ளது

அவன் உயிராரத்தால் போர்த்தப்பட்டிருந்த
என் புன்னகையின் செழுமையெல்லாம்
விருப்புக்களின் மொழிதலில்
 ஒட்டிக்கொண்ட  பார்வை விலகும் போது
அவனுடன் சேர்ந்தே உதிர்ந்து விட...
நடமாடும் வெற்று மரக்கொப்புக்களைப்
போலானது நின் ஜீவன்

உதிர்ந்து போன காலச் சருகுகளுடன்
காற்றாகிக் கலந்துவிடத் துடிக்கும்
வெற்று மரக்கிளைகளைப் போல்
அவன் மூச்சின் வெப்பத்தை
 தென்றலிடமிருந்து பிரித்தெடுத்து
முகர்ந்துவிடும் ஆசையில்
தோற்றுக்கொண்டிருக்கிறது
என் ஒவ்வொரு நொடியும்

புரியாத பிரியத்தின் உச்சத்தில்
சதைப்பிண்டத்தில் ஒட்டிக்கொண்ட
வெளிறலின் துகள்கள்
தினமொரு விடியலும் ஆட்கொள்ள

சிலர் ரசித்துச் செல்கிறார்கள்
அவனோ கொடுத்துச் செல்கிறான்
நினைவுப் பதர்களை மீண்டுமாய்...

பாலைவன சுடுமணலில்
பட்ட மரத்தின் எடுத்துக்காட்டான
பார்வைப்பொருளாய்  நான்.....

தமிழ் நதி

No comments

Powered by Blogger.