'வக்கிர மனங்களைப் பெண்கள் எவ்வாறு அணுக வேண்டும்?'- உளவியல் ஆலோசனை!!

`அண்ணே அடிக்காதீங்கண்ணே...', `உன்னை  ஃப்ரெண்டுனு நம்பித்தான வந்தேன், இப்படிப் பண்றியே... ப்ளீஸ் விட்டுரு!'

இந்த வார்த்தைகள் கடந்த ஒரு வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிக்கொண்டிருக்கின்றன. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களை அடித்து, மிரட்டி, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, படம் எடுத்து, பணம் பறித்து பெரும் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறது ஒரு கும்பல். நீண்டகாலமாகவே நடந்த இந்தக் கொடுமைகள், ஒரு பெண் புகார் கொடுத்தபிறகு, வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகள் நான்குபேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவதாக ஒரு நபருக்குத் தொடர்பு இருப்பதற்கான காணொலி வெளிவந்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இக்கொடூரச் செயல்களைச் செய்த குற்றவாளிகள்ஜெயமேரி கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை வைத்து வருகின்றனர். மறுபுறம் இந்தச் சம்பவத்தின் முதன்மைக் குற்றவாளியான திருநாவுக்கரசின் தாய் `தன் மகன் குற்றமற்றவன்' என்று நீதிமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

இது ஒருபுறமிருக்க, சமூக வலைதளங்களில், `நாகரிகப் பெண்களே உஷார்' என்பதுபோன்ற தலைப்புகளில் `பெண்கள் வெளியிடங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும், சமூக வலைதளங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்' எனப் பாடம் எடுக்கும்வகையில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. `காலங்காலமாக பெண் பிள்ளைகளுக்குத்தான் பாடம் எடுத்தீர்கள், இனிமேலாவது ஆண் பிள்ளைகளுக்குப் பாடம் எடுங்கள்' என அதற்கு எதிர்ப்புக்குரல்களும் கிளம்பியுள்ளன.

உண்மையில் இது மாதிரியான அவலங்களுக்கு எது காரணமாக இருக்கிறது?

``ஆண் என்பவன் அடக்கி ஆள்பவன், பெண் என்பவள் அடங்கிப் போகவேண்டியவள் என்பதுதான் இன்றுவரை பெரும்பாலான குடும்பங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாக உள்ளது. சமத்துவம் இல்லாத இந்தப் போக்குதான் இதுபோன்ற அவலங்களுக்கு முதன்மைக் காரணம்'' என்கிறார் உளவியல் ஆலோசகர் ஜெயமேரி.

``பிறக்கும்போது யாரும் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை. பெற்றோர் வளர்க்கும் விதமும், சூழலும்தான் ஒருவனைக் குற்றவாளியாக்குகிறது. சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு அடிபணிந்து போகும் அம்மாவைப் பார்த்து வளரும் ஒருவனுக்கு, `ஆண் என்பவன் மேலானவன், பெண் என்பவள் அவனுக்கு அடிபணிந்து போகவேண்டியவள்' என்பது மனதில் நன்றாகப் பதிந்துவிடுகிறது.

உதாரணமாக, ஒரு வீட்டில் அண்ணன்/தங்கை அல்லது அக்கா/தம்பி வளர்ந்தார்கள் என்றால் ஆண் குழந்தைக்குத்தான் பெரும்பாலான வீடுகளில் முன்னுரிமை கொடுப்பார்கள். இதுபற்றி பெண் பிள்ளைகள் கேட்டால், `நீ பொம்பளைப் புள்ள... அவன் ஆம்பளப் பிள்ளை; அவன்கூட ஏன் போட்டி போடுற' என்பதுபோன்ற பதில்கள்தான் வரும். இது ஒருபுறமிருக்க, உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத வீடுகளில் பிறந்த, பெண் பிள்ளைகளுடன் பிறக்காத ஆண் குழந்தைகளுக்கு ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கான அடிப்படை எதுவும் தெரியாது. உடல்ரீதியான வேறுபாடுகள் மட்டுமே அவர்களுக்குள் பதிந்திருக்கும். அதனால், பெண் என்றாலே அவள் உடல்ரீதியாகப் பார்க்கப்பட வேண்டியவள் என்ற புரிதலுக்கு வந்துவிடுவார்கள். அதைத் தடுக்க, `பெண்களும் ஓர் உயிர், அவர்களுக்கும் உரிமைகள், உணர்வுகள் உண்டு' என்பதை வீடுகளில் சொல்லி வளர்க்கவேண்டும்.

படிக்காத பெற்றோர் உள்ள வீடுகளிலும், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர் வீடுகளிலும் அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அரசாங்கம் நினைத்தால் பள்ளிகளில் இதற்கான வகுப்புகளை நடத்தமுடியும். ஓர்  ஆண் பெண்ணிடம் எப்படிப் பேசவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கலாம். ஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் நிபுணர்களை நியமித்து, கவுன்சலிங் கொடுக்கலாம். மனதளவில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் வெளிப்படையாகப் பேசுங்கள் என மாணவர்களுக்குச் சொல்லலாம்.

பெரும்பாலும் ஆணும், பெண்ணும் இணைந்து படிக்கும் பள்ளியில் படிக்கும்போது பெண்களை சக மனுஷியாக அணுகும் பண்பு, ஆண் குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கும். மாறாக, பெண்களைத் தூரத்திலேயே வைத்துப் பார்த்த ஆண் குழந்தைகளுக்கு பெண்கள்மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். அது உடல்ரீதியான மோகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதைச் சரிசெய்ய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் முடியும். இதுபோன்ற செயல்களைச் செய்தாலன்றி பெண்களின்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு விடிவு கிடைக்காது.

சமீப காலமாக பெருகிவரும் இணைய வளர்ச்சியை இதுபோன்ற செயல்களுக்கு சிலர் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பெண்ணும், ஆணும் தோழமையாக, நட்பாக, காதலாகப் பேசுவதில், பழகுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், நாம் பேசும்/பழகும் நபர் சரியானவர்தானா என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. தொடர்ந்து ஒரு ஆண் உடல்ரீதியாக வர்ணனை செய்து பேசிக்கொண்டிருக்கிறான் என்றால் அவனிடம் சிறிது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்காக, ஆணும், பெண்ணும் பேசக்கூடாது, பழகக்கூடாது என்பதுபோன்ற கருத்துகள், இதுபோன்ற குற்றங்களை மேலும் அதிகரிக்கவே செய்யும். அதனால், தங்களுக்கான எல்லைக் கோடுகளை வகுத்துக்கொண்டு பேசுவது, பழகுவது நல்லது.

அதேபோன்று, எவ்வளவு நம்பிக்கையான நபராக இருந்தாலும், தங்களது அந்தரங்கப் புகைப்படங்களை ஒருவரிடம் பகிரக் கூடாது. அதே வேளையில், தனக்குத் தெரியாமல் தன்னுடைய புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, பரப்பப்படுகிறது என்றால் அதற்காகப் பெண்கள் பயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை. தங்களது பெற்றோரிடம் சொல்லிச் சம்பந்தப்பட்டவர்கள்மீது புகார் செய்ய முன்வரவேண்டும்.

அதேபோல, தன் விருப்பம் இல்லாமல், ஓர் ஆண் தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறுகிறான், துன்புறுத்துகிறான், எதையாவது சொல்லி மிரட்டுகிறான் என்றால் தைரியமாக அதைப் பெற்றோரிடம் சொல்ல பெண்கள் முன்வரவேண்டும். தெரிந்தவன், நன்றாகப் பழகியவன், சொந்தக்காரன், தெரியாத யாரோ ஒருவன்... இப்படி யாராக இருந்தாலும் பெற்றோரிடம் சொல்லிவிடவேண்டும். பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் சொல்லுக்கு மதிப்பளித்து, அவர்கள் சொல்வதை நிதானமாகக் கேட்டு அதற்குத் தீர்வு சொல்லவேண்டும்.


ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ தங்களது குழந்தைகளுக்கு என்ன நடந்தாலும், வீட்டில் அதைச் சொல்லுமளவுக்கான சுதந்திரத்தையும், உரையாடல் வெளியையும் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு என்றில்லாமல் சிறுவயதிலிருந்தே அதைத் தொடங்கவேண்டும். அப்போதுதான், இதுபோன்ற பெரும் அவலங்களில் சிக்கிக் கொள்ளாமல் நம் குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்'' என்கிறார் உளவியல் நிபுணர் ஜெயமேரி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.