யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளியுங்கள்!

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் இழந்ததை மீளவும் வழங்க முடியாத போதும் அவர்களது கருத்துக்களுக்கேனும் செவிமடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.



நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சமந்தா பவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு நல்லிணக்க செயற்பாடுகளும் இடம்பெற்றன. ஆனாலும், காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் ஒளிப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்திருக்கின்றனர்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது மிகவும் அவசியமாகும். அந்தவகையில் அம்மக்கள் இழந்ததை வழங்க முடியாதபோதும் அவர்களின் கருத்துக்களுக்கேனும் செவிமடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இலங்கை, அமெரிக்கா, ஆகிய இரு நாடுகளுமே ஜனநாயக ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தன. இதன்போது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக மக்களும் சிவில் அமைப்புகளும் இணைந்து போராட்டங்களை நடத்தின. இதில் கட்சி அல்லது மதம், இனம் என தனிப்பட்ட ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. அந்தவகையில் நீதித்துறையும் சுயாதீனமாக இயங்கி ஜனநாயகத்தை நிலைநாட்டியது.

ஆகவே தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயக அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகவே இரு நாடுகளிலுமுள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறமுடியும்” என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.