இன்று ம. நடராசன் அவர்கள் நினைவு தினம்.!!

தமிழகத்தில் நாடாளுமன்ற/ சட்டமன்ற தேர்தல்கள் ஒவ்வொரு முறை வரும் போதும் கூடவே இரு பெரும் திராவிடக் கட்சிகள் தவிர்ந்த / தேசிய கட்சிகள் சாராத   மூன்றாவது அணி குறித்த பேச்சுக்களும் வரும்.



ஆனால் அது வெறும் பேச்சாகவே போய் முடியும்.

அதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றும் இருந்தது.

கருணாநிதி/ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகளைத் தாண்டி அந்த வெற்றிக் கூட்டணியை அமைக்க முடியாது என்ற கள யாதார்த்தம்தான் அது.

ஆனால் தற்போது இருவரும் இல்லை.

உண்மையிலேயே மூன்றாவது அணிக்கான சரியான காலம் இதுதான்.

கொள்கை அடிப்படையில் தமிழக நலன்களை மட்டும் ( இதில் தமிழீழமும் வரும்)  முன்னிறுத்திய கட்சிகளுக்கான பொற்காலம் இது.

ஆனால் அவர்களால் ஒரு கூட்டணியை உருவாக்க முடியாமல் போய்விட்டது.

காரணம்,  தேர்தல் அரசியலை புரிந்து கொண்டவர்களால் அதை நகர்த்தும் சாணக்கியத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை.

விளைவு உதிரிகளாகச் சிதறிப் போனார்கள்.

கருணாநிதியையும்/ ஜெயலலிதாவையும் களத்தில் இருந்து அகற்றிய காலம் கூடவே நடராசனையும் சேர்த்தே அகற்றியது.

இதை வரலாற்றின் விசித்திரம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

இன்று அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இரு பெரும் திராவிடக் கட்சிகளைச் சாராத ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி அதை வெற்றிக் கூட்டணியாக்கி தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பார்.

அவரது இழப்பின் கனதியை இந்தப் பின்புலத்தில் வைத்து  இப்போதுதான் இன்னும் அதிகமாக உணர நேர்கிறது.

கீழே உள்ள பதிவு அவர் மரணத்தின் போது எழுதியது.


தமிழ் அரசியல் உலகம் ஒரு சாணக்கியனை இழந்துவிட்டது.

இந்துத்துவ - இந்திய லொபியின் சதுரங்க காய்களை திரைமறைவில் நகர்த்தும் சோ, சுப்ரமணியம் சுவாமி, குருமூர்த்தி வகையறாக்களின் சூழ்ச்சி, தந்திரத்திற்கு எதிர்வினையாக அல்லது அதன் விளைவாக தமிழ் அரசியல் அல்லது  தமிழ் தேசம் சார்ந்து நடராசன் அந்த பாணிகளை தனதாக்கிக் கொண்டார்.

'ஜெயலலிதா கடைசி நேரத்தில் எமக்கு சார்பாக மாறினார்' என்று எழுதுவது வரலாற்று தவறு. அவர் எமக்கு சார்பாக தீர்மானங்களை எடுப்பதற்கு உந்துதலாக நடராசன் தமிழ் வாக்கு வங்கியை முன்வைத்து சாணக்கியமாக   உள்ளக பேரம் பேசுதலை செய்ததன் விளைவே ஜெயலலிதாவின் மாற்றம்.

அதுவே ஜெயலிதாவுக்கு வேட்டாக மட்டுமல்ல நடராசன் குடும்பத்தினருக்கும் வேட்டாக மாறி இன்று அவர் மரணம் வரை வந்திருக்கிறது.

தமிழின அழிப்பிற்கு பிறகு களம், புலம், தமிழகம் மூன்றையும் இணைத்து  நாம் உருவாக்க விரும்பிய தமிழ் வெளியுறவுக் கொள்கை  மற்றும் தமிழ் லொபியின் உருவாக்கத்தில் நடராசன் தவிர்க்க முடியாத ஒரு வகிபாகத்தைக் கொண்டிருந்தார்.

உண்மையிலேயே இது எமக்கு பேரிழப்பு.

ஏனென்றால் நல்லவர்கள் - கெட்டவர்கள் என்பதற்கும் அப்பால் தமிழ் அரசியல் சூழலில் தேசம் சார்ந்து சிந்திக்கக் கூடிய சாணக்கியர்கள் தேவைப்படும் காலம் இது.

அவரை முள்ளிவாய்க்கால் முற்றத்துடன் மட்டும் சுருக்கிப் பார்ப்பது அரசியல் அறிவீனம்.

அன்னாருக்கு அஞ்சலிகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.