மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சோனரட்னவுடன்  விசேட சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.

 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களும் இணைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

 மன்னார் மாவட்டத்தின் சுகாதார நிலைமை இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருப்பதனால் மாவட்ட பொது வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வது மிகவும் அத்தியாவசியமானது என .தன்போது சுகாதார அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் போதிய வசதிகள் இன்மையால் மக்கள் வவுனியா, மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளை நோக்கி செல்ல வேண்டியிருப்பதால் மன்னார் மாவட்ட மக்கள் பலத்த சிரமங்களை எதிர் நோக்கியுள்ளமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


 ஏனைய வைத்தியசாலைகளில் கட்டிட, வைத்திய வசதிகள் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற போதிலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மன்னார் வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சைக் கூடம், நிரந்தர நோயாளர் விடுதிகள், வைத்தியர்களுக்கான நிரந்தர தங்குமிட வசதிகள் போன்றவற்றை அமைப்பது தொடர்பில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 மேலும் கதிரியக்க இயந்திரங்கள், சத்திர சிகிச்சை கூடத்துக்கான உபகரணங்கள், ஆய்வு கூட உபகரணங்கள், கணினிகள் போன்றவற்றை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் திட்ட வரைவு ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கு விசேட முக்கியத்துவம் வழங்கி வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்கு விரைந்து ஆவண செய்வதாக சுகாதார அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டது. -

மேலும் மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற வைத்தியர்கள், தாதியர் பற்றாக்குறைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பிலும் கவனத்தில் கொண்டு உரிய மருத்துவ ஆளணியினரை எதிர் வரும் காலங்களில் நியமிப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. மேலும் மன்னார் வைத்தியசாலை தர முயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் பாராளுமன்ற உறுப்பினரினால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் சாதகமாக பரிசீலிப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.