ஈழத்து திரைத்துறை கலைஞர்கள் நம்பிக்கையுடன் முயற்சி!!!

இரத்தமும் வேர்வையும் சிந்தி உழைக்கும் ஒருவர்… தனக்கு அதற்கான பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பார்!  அதைப்போல அல்ல ஈழத்து திரைத்துறை. மூத்த ஈழத்து திரைத்துறை கலைஞர்கள் நம்பிக்கையுடன் முயற்சி செய்துள்ளார்கள் ஒரு சிலர் அதில் பலனும் அடைந்துள்ளார்கள் அது அந்தகாலம் என்பதால் சாத்தியமாக இருந்திருக்கலாம்.
.
ஒரு ஊதியம் இல்லாமல் ஒரு நிரந்தர வருமானம் இல்லாமல்  ஈழத்து மக்களின் அதிகளவு ஆதரவும் இல்லாமல் திரைத்துறையில் பயணிக்க முடியாதுள்ளது என  முயற்சியை கைவிட்டுவிட்டு, அவரவர் தங்கள் குடும்பத்தை கவனித்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இன்று அந்த காலத்தில் இருந்த நிலைகூட இல்லை தமிழ்நாட்டு திரைப்படத்துறையை தாண்டி எம் மக்களின் ஆதரவைபெற வேண்டி உள்ளது அது அவ்வளவு சுலபம் இல்லை அது நடக்கிற காரியமும் இல்லை.

மற்றும் ஒரு புறம் உலக திரைப்பட விழாவில் விருதுகள் மூலம் ஒரு இடத்தை எட்டிபிடித்தால் எம் மக்கள் எங்களுக்கான ஆதரவை அதிகளவு கொடுப்பார்கள் என்ற எண்ணத்தில் எங்கள் படைப்புக்களை அதிகளவு எம் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லலாம் என நினைக்கின்றோம். அந்த முயற்சியில் தான் தற்போது பல கலைஞர்கள் ஈடுபடுகின்றார்கள் அதுவும் சாத்தியம் இல்லை என சொல்லலாம்.

உதாரணம் கனடாவில் உருவாக்கப்பட்ட
A gun A ring திரைப்படம் பல திரைப்பட  விழாக்களில்
பல விருது வென்றது. எம் மக்கள் மத்தியில் கொண்டு வரும்போது எதிர்பார்த்த அளவில் எம்மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை.

திடீர் என மண்ணில் இருந்து புயல் போல படபட என திரைத்துறை கலைஞர்கள் உருவெடுத்தார்கள் இன்று அந்த வீச்சு இல்லை அதிலும் சிலர் விட்டுவிட்டு ஒதுங்கி போய்விட்டார்கள்.

நல்லபடம் எடுங்கள் எங்கள் ஆதரவு கிடைக்கும். &
அடிக்கடி மனம் நொந்து போகாதீர்கள்.
விடாமல் செய்யுங்கள் எதிர்காலம் உண்டு.
என இப்படி முகப்புத்தகத்தில் எழுதியும், நேரில் சந்தித்து ஆறுதலும் கருத்தும் கூறும் நபர்களை  எங்கள் படம் திரையிடும்போது திரையரங்கில் காண்பதில்லை.

முழுநேரமும்  அர்ப்பணித்தால் தான் வெற்றிபெற முடியும் முழுநேரமும் இதற்காகவே செலவிடவேண்டும் என்றால் தொடர்ச்சியாக வருமானம் வரவேண்டும்  இல்லை என்றால் நிரந்தரமாக  நின்றுபிடிக்க முடியாது.

ஏன் எம் மக்களுக்கு எங்கள் படைப்புக்களை கொண்டுவரவேண்டும் என சிலர் கேட்பதும் உண்டு  ஒவ்வொரு இனத்திலும் உள்ள படைப்பாளிகளும்  அவரவர் இனத்திற்கு கதைசொல்லியாகத்தான் இருக்கின்றார்கள். முதல் தன் இனத்தில் வெற்றிபெற்றால் காலம்  இன்னொரு இனத்திற்கு கொண்டு செல்லும் அவர்களும் வரவேற்பார்கள்.

கஷ்டம் வரும்போதெல்லாம்
பெற்றோருக்கும், மனைவிக்கும்.
ஒரு சில உத்தரவாதம் கொடுப்போம் அது காலம் கடந்து சென்றுகொண்டு இருக்கும்.  அவ்வப்போது பழைய பஞ்சங்கம் காதில் கேட்கும்.
அவனைப்பார் எப்படி இருக்கின்றான்
இவனைப்பார் எப்படி இருக்கின்றான்
அவரின்  மகனைப்பார் உன்னோடு வெளிநாடு வந்தவன்
அவனைப்பார் நேற்று வந்தவன் என.
இதற்கு ஆறுதல் கூறமுடியாது பதிலும் திருப்பி சொல்லமுடியாது. அவர்களது வலி எங்களால் ஏற்பட்டவையாகும். இதை கவலைப்பட்டு  பகிர்ந்துகொண்டால்.
உனக்கு கிடைக்கும் பேர், புகழ்
அவங்களுக்கு உண்டா, நீ இறந்தபின்னரும் மக்கள் மனதில் வாழ்வாய் என்பார்கள். அப்படி செல்பவர்களே
ஒரு கலைஞனை கலைஞனாக இருக்கும்போதே  மதிப்பதில்லை
இறந்தபின்னர் அவனுடைய ஞாபகம் எப்படி இருக்கும்
அதற்கு உதாரணமாக பல கலைஞர்கள் இருக்கின்றார்கள்.

சில நண்பர்களோ,சொந்தக்காரர்களோ,
பார்வையாளர்களோ. ஒரு கலைஞன் பின்னாடி கதைப்பது அல்லது பேசிக்கொள்வது. உவனுக்கு வேற வேலை இல்லை நாடகம் நாடகம், படம் படம் என்று திரிகிறான் என்பார்கள். அப்படி சொல்லிக்கொள்ளும் நக்கல்,நையாண்டி சொற்கள் காதில் கேட்கும் போது நாங்கள் கலைக்காக இழந்த காலமும் பட்ட கஷ்டமும் யாருக்காக என  மனம் வலிக்கும் .

புலம்பெயர் மண்ணில் விழாக்கள் நடத்துபவர்கள் விஜய் டிவி,சன் டிவி பிரபலங்களுக்கு  கொடுக்கும் இடம்கூட எங்கள் கலைஞர்களுக்கு வழங்கியதில்லை,வழங்குவதில்லை.
அதனால் தான் விஜய் டிவி, சன் டிவி, நிகழ்ச்சியில் பங்குபற்ற ஒடிப்போகிறார்கள் அவங்களும் தங்கள் சந்தா வியாபாரத்திற்காக அவர்களை இணைத்து கொண்டு போட்டியில் கடைசிவரை கொண்டு சொல்வாங்கள் நம்மவர் உடனே திறமை சாலி என்பார்கள் இங்கிருக்கும் போது திறமை தெரிவதில்லை.

சரி அனைத்தையும் கடந்து கடந்து செல்லவேண்டும் என்ற மன வைரக்கியம் இருக்கும். ஆனால் எங்கே செல்கிறோம் என்றால் கேள்விக்கு இடமுண்டு.

நான் சக கலைஞர்கள் உட்பட அனைவரும்
எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலைஞர்கள் ஒன்றுமையில் நாங்கள்  சிறப்பாக நடக்கிறோம்.  ஒரு படம் நடித்து அல்லது இயக்கி இருக்கும் கலைஞர்கள்  தங்களை மேன்மேலும் வளர்ப்பதில் அக்கறைகொள்ளாமல் “படம்”காட்டுவதில், பட்டபேர் வைப்பதில் தான் அதிகம்  அக்கறை கொள்கின்றார்கள். அதனாலும் எமது திரைத்துறை கலை சிறப்பாக வளர்கிறது. எங்க போய் சொல்ல...

நாங்கள் முயற்சி செய்யும் இந்த திரைத்துறை
கலை எங்களுக்காக மட்டுமில்லை எம்மின மக்களுக்கான அடையாளமும்கூட, நாங்கள் இதில் சாம்பாதித்து கோட்டை கட்டபோவதில்லை.

இந்த துறையில் இறங்கியவன் கடலில் நிற்கும் கப்பல் போல கரைசேர்ந்தாலும் தண்ணீரில் தான் கடலில் நின்றாலும் தண்ணீரில் தான்.

உங்கள் மொழிசார்ந்த
உங்கள் கலைஞர்களை
உங்கள் கதைகளை
உங்கள் வலிகளை
பதிவாக்கும் கலைஞர்களை வளர்த்து விடுவது உங்கள் கடமை.

மன்மதன் நன்றி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.