வைத்தியர்களின் அசமந்தம்!! 9 வயது சிறுவன்பரிதாப சாவு!!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த ஜெயக்காந்தன் விதுலஷ்சன் (9 வயது) கடந்த முதலாம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன்போது அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குணமடைந்து வந்த சிறுவன், மீண்டும் நோய்வாய்ப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இதன்போது சிறுவனின் கிட்னி பகுதியில் கசிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17ஆம் சிறுவன் அசைவற்று காணப்பட்டதை அவதானித்த பெற்றோர், வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளனர். இதன்போதே குறித்த சிறுவனுக்கு தவறான முறையில் இரத்தம் ஏற்றப்பட்டதை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரத்தம் மாற்றி ஏற்றியதாலேயே கிட்னி இரண்டும் பாதிக்கப்பட்டதாக வைத்தியர் தம்மிடம் கூறியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்த சிறுவனின் தந்தை, “மகனுக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இல்லாத போதிலும்  அந்த பெண் வைத்தியர் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை எனது மகனுக்கு ஏற்றியுள்ளார். இதனால் எனது மகன் கிட்ணி பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர், இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் எனது மகன் மரணித்துள்ளதாகவும் விபத்தால் மரணிக்கவில்லை என்றும் பொலிஸாரிடம் அறிக்கை வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.

பயிலுனர்களாக வரும் வைத்தியர்களாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே எனது மகனுக்கு நீதிவேண்டும். பிழை செய்தோர் தண்டிக்கப்படவேண்டும்” என அவர் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக மட்டு போதனா வைத்தயசாலை பணிப்பாளர் திருமதி கே. கணேசலிங்கத்துடன் எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்ட போது,

“கடந்த 19ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 9 வயதுடைய விதுலஷ்சனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.

அவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் பிழை இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

No comments

Powered by Blogger.