ஐ.நா..வின் பொறிமுறையை விட்டு வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை!!

ஐ.நா.வின் தற்போதைய பொறிமுறையை விட்டு இலங்கை வெளியில் வந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லாது போய்விடும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நிகழ்வொன்றுக்கு வருகை தந்த நிலையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் இலங்கைக்கு கால நீடிப்பு வழங்குவது தொடர்பான பல்வேறு விதமான கருத்துக்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அது ஒரு கால அவகாசம் இல்லை. இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட அழிவுகள், யுத்த மீறல்கள், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையை நிலைமாறுகால நீதியின் கீழே கண்காணிப்பதற்கான ஒரு காலமாக தான் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை பிழையான வழியில் சில அரசியல்வாதிகளும், ஊடகங்களும் மக்களுக்கு கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருப்பது தான் வேதனையான விடயம். இது காலஅவகாசம் அல்ல. இலங்கையை கண்காணிப்பதற்கான ஒரு பொறிமுறையாகத் தான் இது காணப்படுகின்றது.  உண்மையில், இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை இருப்பதால் தான் மஹிந்த ராஜபக்ஸ அணியினர் இதில் இருந்து வெளியில் வருவதற்கு கடும் பிரயத்தனம் எடுக்கின்றார்கள். இந்த கால நீடிப்பு காலத்தில் இருந்து இலங்கை வெளியில் வந்து விட்டால் போர்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் என்பவற்கு பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நியாயத்தை பெற்றுக் கொள்ள முடியாது போய்விடும் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.