ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்படும் முதலீடு திட்டம் பிரதமரினால் நேற்று (24) அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் இன்று இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. மிரிஜ்ஜவில எரிபொருள் சுத்திகரிப்பு திட்டம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 44 மாதங்களுக்கு நிர்மாணப்பணிகளை முடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக ஏற்றுமதி வருமானம் 7 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் 64 ஏக்கர் நிலப்பரப்பில் அமைப்பட உள்ள சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் 18 மாதங்களுக்கு நிவர்த்தி செய்யப்பட உள்ளது. இதனூடாக வருடத்திற்கு 3.6 மெட்ரிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓமான் நாட்டின் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் டொக்டர் மொஹமட் ஹமாட் அல்ரூமி ஏற்றுமதி ஊக்குவிப்பின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேவேளை இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்திற்காக முதலீடு செய்வதற்கு இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக வெளியாகியுள்ள செய்தியை ஓமான் மறுப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஓமானின் கனிய எண்ணெய் அமைச்சின் செயலாளர் சலீம் அல் அவுப் இதனைக் தெரிவித்திருந்தார் ஓமான் அரசாங்கத்தின் உதவியுடன் 3.85 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. இதற்கு பதில் வழங்கும் போது ஓமானின் கனிய எண்ணெய் அமைச்சு, இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியை மறுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக பிரமுகர் ஜெகதரட்சகனின் குடும்ப நிறுவனம் இதில் முதலிடுவதாக செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.