விக்கியுடன் கூட்டணியில்லையேல்: முன்னணிக்கு நெருக்கடி!-லண்டன் அமைப்பு!!

தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றாவிட்டால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான வெளிநாட்டு நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்ற கறாரான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, புதிய சூழலை எப்படி எதிர்கொள்வதென கட்சி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தமிழ் அரசியலில் “சுத்தமான சூசைப்பிள்ளைகள்“ நாங்கள் மட்டுமே என்பதை போன்ற நிலைப்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடைப்பிடித்து வருகிறது.

உலகெங்கும் அதிதூய்மைவாதம் ஆபத்துக்களையே ஏற்படுத்தியது என்ற வரலாற்று படிப்பினையையும் மீறி, விடாப்பிடியாக தூய்மைவாத அரசியலை முன்னணி முன்னெடுத்து வருகிறது. சகட்டுமேனிக்கு மற்ற தரப்புக்களை குற்றம்சாட்டுவது, ஏனைய தரப்புக்களின் கூட்டு முயற்சிகளில் பங்கேற்காமலிருப்பது என முன்னணியின் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று அணியொன்று உருவாகுமென கருதப்பட்ட போதும், மாற்று அணியை உருவாக்க முயன்ற கட்சிகள், நபர்களின் பலவீனத்தால் அது பலவீனமான முயற்சியாகவே தொடர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் கூட்டு வைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும், முன்னணியின் நிபந்தனைகளால், அந்த கூட்டணி முயற்சி சாத்தியப்படாமல் உள்ளது.


 இந்தநிலையில், இதுவரை முன்னணிக்கு நிதியளித்து வந்தவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனித்தனியாக அரசியல் செய்வதால் எந்த பயனும் ஏற்படாதென்ற யதார்த்தத்தை குறிப்பிட்டு, கூட்டணி அமைக்கும்படி இரண்டு தரப்பையும் வலியுறுத்தி வருகிறார்கள்.

கூட்டணி அமைக்க விக்னேஸ்வரன் தயாராக இருப்பதால், நிதி வழங்குனர்களின் அழுத்தம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீதே விழுந்துள்ளது. இலண்டனில் இருந்து செயற்படும்- முன்னர் விடுதலைப்புலிகளிளுடன் நெருக்கமாக இருந்த- அமைப்பு தனது முடிவை முன்னணிக்கு வெளிப்படையாக அறிவித்துள்ளது. இந்த அமைப்புத்தான் முன்னணியின் பிரதான நிதி வழங்குனர்.


அதேவேளை, முன்னணிக்கு உதிரிகளாக அதிக நிதி வழங்கிய தரப்பும், இதே முடிவை அறிவித்ததுள்ளது. யாழ் பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் மூலம் சில அரசியல் நகர்வுகளை இங்கு செய்து வந்திருந்தார்கள்.

அந்த மாணவர் பிரதிநிதிகளையும் விக்னேஸ்வரன் அணியுடன் இணைத்துள்ளனர். புதிதாக உருவாகி வரும் இந்த நெருக்கடி நிலைமையையடுத்து, ஐ.நா மனித  உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிற்கு செல்வதற்கு முன்னதாக கட்சிக்குள் ஆராயப்பட்டது. விக்னேஸ்வரனுடன் கூட்டணி வைக்கலாமென்ற ஆலோசனையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.


 எனினும், அதில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரிற்கான பயணத்தின்போது, புலம்பெயர் நிதி வழங்குனர்களுடன் கஜேந்திரகுமார் பேச்சு நடத்திய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.