நியூஸிலாந்தில் இறந்த கேரள பெண்ணின் கண்ணீர் கதை!

நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில், அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு மசூதிகளிலும் நடந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தால்,
கடந்த 15-ம் தேதி 50 பேர் உயிரிழந்தனர். உலகை உலுக்கிய இந்த சம்பவத்தில் இந்தியர்கள் 5 பேர் பலியாகியிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் அன்ஸி அலிபாவா. கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கள்ளூரை சேர்ந்தவர்தான் இந்த அன்ஸி. திருச்சூர் இளநிலை படித்த இவருக்குத் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. திருமணம் முடித்தாலும் அவருக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும் என ஆசையாக இருந்துள்ளது. தன்னுடைய கனவை நிறைவேற்றுவதற்காக ரூ.30 லட்சம் அளவுக்குக் கடன் பெற்றுக்கொண்டு தன் கணவர் அப்துல் நாசர் உடன் கடந்த வருடம் தான் நியூஸிலாந்துக்கு புலம் பெயர்த்துள்ளார்.
அதன்படி நியூஸிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தவர் மூன்று வாரங்களுக்கு முன்பு தான் தன் கனவை நிறைவேற்றியுள்ளார். ஆம், வேளாண் வர்த்தக மேலாண்மையில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றார். இந்த நிலையில்தான் 15-ம் தேதி வழிபாட்டுக்காக அல் நூர் மசூதிக்கு அன்ஸி, நாசர் மற்றும் அவரின் நண்பர் என மூவரும் சென்றுள்ளனர். பல்வேறு கனவுகளுடன் இருந்த அவர்களின் வாழ்க்கையில் வலதுசாரி தீவிரவாதி குண்டு மழையைப் பொழிந்து நாசமாக்கினான். நடந்த சம்பவங்களை விளக்கும் அன்ஸியின் கணவர் நாசர், ``மசூதியினுள் பெண்கள் பகுதியில் அன்ஸியும், ஆண்கள் பகுதியில் நானும் தொழுகை நடத்தி வந்தோம். முக்கிய வழிபாட்டின்போது ஒரு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. முதலில் குழந்தைகள்தான் பலூனை வெடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், சில நிமிடங்களில் பயங்கரமான ஆயுதத்தில் இருந்து பெரிய அளவில் சத்தங்கள் கேட்டன. 
அன்ஸி
300-க்கும் அதிகமான பேர் நாங்கள் தொழுகை செய்யும் இடத்தின் வாசலை நோக்கி ஓடி வந்தனர். நான் கதவின் அருகே இருந்தேன். அப்போது அங்கிருந்த கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டு சிலர் என் மீது விழத் தொடங்கினர். அவர்கள் உடல் முழுவதும் ரத்தக் கறைகள் இருந்தது. உடனே நான் ஓடிச் சென்று அருகில் உள்ள வீட்டில் உள்ள தொலைபேசி மூலம் போலீஸாரை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்துவிட்டு அன்ஸியைப் பார்ப்பதற்காக ஓடி வந்தேன். ஆனால், ஓர் இடத்தில் அவள் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தாள். அவளை அருகில் சென்று பார்க்கவிடாமல் போலீஸ் என்னைத் தடுத்துவிட்டது. இறந்த 50 பேரில் ஒருவராக அன்ஸியும் மாறிவிட்டார் என போலீஸ் தெரிவித்தனர்" எனப் பதற்றம் விலகாமல் பேசும் நாசர், தன் மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் குறைந்த சம்பளத்துக்குப் பணிபுரிந்து வந்துள்ளார். 
அப்துல் நாசர் - அன்ஸி
அங்கு கிடைத்த வருமானத்தின் மூலம் அன்ஸியின் படிப்புச் செலவுக்கு உதவி வந்துள்ளார். அன்ஸி பட்டம் பெற்றுவிட்டதால் அவர் அதிக சம்பளத்துக்கு வேலைக்குச் சென்றுவிடுவார். இனி இருவரும் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என எண்ணியுள்ளனர். ஆனால், இந்தக் கனவுகள் எல்லாம் 15 நிமிட துப்பாக்கிச் சூட்டில் கலைந்து போயுள்ளது. ``அவளுக்கு என நிறைய கனவுகள் இருந்தன. ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என யாரும் நினைக்கவில்லை. இங்கு நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். இனி இதுபோன்ற சம்பவம் எந்தக் குடும்பத்துக்கும் நடைபெறக்கூடாது. என் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதைவிட நான் கிறிஸ்ட் சர்ச் பகுதியிலேயே தொடர்ந்து வசிக்க விரும்புகிறேன். ஏனென்றால் எங்கள் திருமணம் முடிந்த பிறகு நாங்கள் அதிக காலம் ஒன்றாகக் கழித்தது இங்கே தான்" எனக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் நாசர். 
அப்துல் நாசர் - அன்ஸி
அன்ஸி மற்றும் அவரின் கணவர் குறித்து அவர்களுடன் மசூதிக்குச் சென்ற குடும்ப நண்பர் ஒருவர் கூறுகையில், ``அவர்களுக்குக் கல்யாணம் முடிந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் நல்ல புரிதலுடன் வாழ்ந்து வந்தனர். போலீஸ் இறந்தவர்கள் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பு வரை அவள் இறக்கவில்லை. எங்காவது சிகிச்சை பெற்றிருப்பாள் என்றே நினைத்தோம். அவளுக்கு ஏதாவது அதிசயம் நடந்துவிடும் என எண்ணினோம். ஆனால் விதி அவளைக் கொண்டுசென்றுவிட்டது" எனச் சோகமாக கூறியுள்ளார். 
அன்ஸியின் இறுதிச் சடங்கு
இதற்கிடையே சுமார் 10 நாள்களுக்குப் பிறகு அன்ஸியின் உடல் கேரளா கொண்டுவரப்பட்டு இன்று அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் நடந்தது. உறவினர்களின் கண்ணீர்களுக்கு மத்தியில் அவரது உடல் சேரமான் ஜும்மா மஜீத் என்ற மசூதியின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டாலும், நியூஸிலாந்தில் அவர் வாங்கிய கடன் இன்னும் அடைக்கப்படவில்லை. கல்விக்காக வாங்கிய இந்தக் கடனை அடைப்பதற்காக தற்போது அன்ஸியின் குடும்பத்தினர் தனியார் அமைப்புகளிடம் உதவியை எதிர்நோக்கி உள்ளனர். மேலும் வலைதளங்கள் வாயிலாகவும் உதவிகள் கோரி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.