விஜயகாந்த்துக்கு ஸ்பீச் தெரபி: பிரேமலதா தகவல்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு ஸ்பீச் தெரபி எனப்படும் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தேமுதிக பொருளாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் தேமுதிக கூட்டணி பற்றி கட்சித் தலைமையகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். அப்போதே அவர் மிகவும் மெதுவாகத்தான் பேசுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அறிவிப்பு நிகழ்ச்சியில் கூட விஜயகாந்த் கலந்துகொண்டாலும், அவர் செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை. தன்னால் பேச இயலவில்லை என்பதை சைகை செய்து காட்டினார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக விஜயகாந்த் சுற்றுப் பயணம் செய்வார் எனவும் ஆனால் அவர் பேசமாட்டார் எனவும் தேமுதிக மாநில செயலாளரும், கள்ளக்குறிச்சி வேட்பாளருமான சுதீஷ் தெரிவித்தார்.
இந்த பின்னணியில்தான் திருச்சியில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டத்தில் நேற்று (மார்ச் 26) கலந்துகொண்ட பிரேமலதா,
“கேப்டனுக்கு இப்போது வீட்டில் இருக்கிற நேரத்தில் ஸ்பீச் தெரப்பி கொடுத்துக்கிட்டிருக்காங்க. அப்ப ஏதாவது ஒரு பாட்டு பாடுங்கனு அவர்கிட்ட கேப்பாங்க. அப்ப கூட அவர் தன்னோட பாட்டு எதையும் கூட பாடாம புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்களைத்தான் அவர் தினந்தோறும் பாடிக்கிட்டிருக்காரு” என்ற பிரேமலதா அதோடு விட்டிருந்தால் தேமுதிக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் திருப்தி அடைந்திருப்பார்கள்.
ஆனால் தொடர்ந்து பேசிய பிரேமலதா, “அப்படி கேப்டன் விரும்பிப் பாடுற பாட்டு ஒளிமயமான எதிர்காலம்...”என்று பாடிக்காட்டினார்.
இது எம்.ஜி.ஆர். பாட்டு இல்லையே சிவாஜி பாட்டாச்சே என்று மேடையில் இருந்தவர்களிடமே சலசலப்பு ஏற்பட்டது

No comments

Powered by Blogger.