தமிழரசுக் கட்சிக்கு எழுதும் கடிதம் இது!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கு அன்பு வணக்கம்.

நீண்ட நெடுநாளாய் உங்களுக்குக் கடிதம் எழுதுவதை தவிர்த்து வந்தோம். காரணம் எழுதுகின்ற கடிதங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை எந்தப் பலனும் இல்லை.

இருந்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கை. விவகாரம் கையாளப்பட்ட விதம் கண்டு அடைந்த வேதனையின் பாற்பட்டு இக்கடிதம் எழுதுகின்றோம்.

இந்தக் கடிதம் ஏதேனும் பயனுடையதாக இருக்குமா என்பதை நாமறியோம். இருந்தும் எழுதுகின்ற இக்கடிதத்தால் நாமும் எம்போன்ற மனநிலையில் இருப்பவர்களும் ஆற்றுப்பட வாய்ப்புண்டு.

இப்போதிருக்கின்ற நிலைமையில் ஆற்றுப்படுத்தல் அவசியமாகின்றது.

அந்தவகையில்தான் இக்கடிதம் எழுதப்படுகிறது. இருந்தும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் இருக்கிறார்களா? என்பது கூடத் தெரியாத அளவில் ஒரு பெரும் கட்சி ஒரு சிலரிடம் மாட்டுப்பட்டு தன்னிலை இழந்து நிற்பது தெரிகிறது.

என்ன செய்வது அடுத்த தேர்தலில் கதிரை தேவை என்றிருந்தால், மெளனம் காப்பது தான் ஒரே வழி என்று நீங்கள் நினைத்திருக்கலாம்.

ஆனாலும் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை இயங்கவிடாமல் தடுப்பதில் ஊன் உறக்கம் மறந்திருந்த தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் இப்போது எதுவும் கதைப்பதாகத் தெரியவில்லை.

என்ன செய்வது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இயங்கவிடக்கூடாது. அவருக்கு எதிராக நீங்கள் சபையில் செயற்பட வேண்டும் என்ற கட்சியின் தலைமையிட்ட கட்டளையை நீங்கள் செய்யாவிட்டால் உங்கள் கதிரைகளும் அவுட்டாகியிருக்கும். ஆகையால் கூலிக்கு மாரடித்தீர்கள். பரவாயில்லை.

இப்போது நீங்கள் ஆதரித்த - நீங்கள் காப்பாற்றிய  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலப்பு நீதிமன்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருக்கிறார்.

நீங்கள் ஆதரித்த பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது பற்றி நீங்கள் பேசாமல் இருந்தால், அதன் பொருள் அவரின் கருத்துக்கு நீங்களும் ஆதரவு என்றாகிவிடும்.

தவிர, தொடர்ந்தும் பிரதமர் ரணிலின் அரசை ஆதரித்தால், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையுயர்த்தினால், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் நிலைப்பாட்டை நீங்கள் ஆதரிப்பதாகவே பொருள்படும்.

ஆகையால் இதுவிடயத்திலேனும் தமிழரசுக் கட்சியினராகிய நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் இக்கடிதம் எழுதுவதன் முக்கிய நோக்கமாகும்.

தவிர, ஜனாதிபதி மைத்திரியோடும் நீங்கள் சமச்சீரான உறவு நிலையைப் பேணியிருந்தால் இன்று அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரும் மாற்றம் தவிர்க்கப்பட்டிருக்கும். அதுவும் உங்களால் முடியவில்லை.

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பிலாவது ஒரு நிறுதிட்டமான முடிவை எடுங்கள்.

நன்றி - வலம்புரி
Powered by Blogger.