அன்புள்ள அண்ணா!

உண்டு, இல்லை என்ற இரட்டை வார்த்தைகளுக்கு கடவுளும் நீங்களுமே சொந்தக்காரர்கள்.

காலம் கனதியானது, அது வீறுகொண்டு புதுமைகள் பல புரிய,  என் பிரார்த்தனைகளுடன் இம்மடலை ஆரம்பிக்கின்றேன்.

கடிதம் எழுதும் கலாசாரம் மறைந்தவிட்டதெனினும் என் மனக்கிடக்கைகளை கடிதமாய் கொட்டிவிடவேண்டும் என்ற என் ஆதங்கமே இம்மடல்.

நீங்கள் சிறார்களை எந்த அளவிற்கு நேசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும், எனக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே புரியும், ஆனால் எமது வளரும் தலைமுறை தற்போது எத்தகைய அவலங்களை அனுபவித்துவருகின்றது என்பது வார்த்தையில் சொல்லமுடியாது. திட்டமிடப்பட்டு எமது சந்ததி அழிவிற்குள் தள்ளப்படுகின்றது.

எமது நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது, நிலத்தைக்கேட்டால், அந்தக்குரலை அடக்க  அதை துண்டாக்கி குடியிருப்புகளாக்கி . எங்களுக்கே வழங்குகின்ற ஒரு நடைமுறை யதார்த்தம் பின்பற்றப்படுகின்றது இங்கே.அந்த குடிசை  வாழ்க்கைக்குள் குடியிருக்கும்  துயரங்கள் ஏராளம்.

சிறிய இடப்பரப்பிற்குள் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம். அந்த வாழ்வியல் கொடுக்கின்ற அவலம் மறுபுறம். வேலியற்ற திறந்த வெளியரங்கும், நெரிசல் மிக்க வாழ்விட கலாசாரமும் பல தரப்பட்ட இன்னல்களும்  இங்கு தாராளமாய் கொட்டிக்கிடக்கிறது.


பால்யவயதுதிருமணம்,
கைவிடப்பட்ட இளம்பெண்கள்
தாயும் தந்தையும் வேறுவேறு குடும்பமான பின் பெற்றோரின் பெற்றோருடன் வாழும் சிறார்கள்,
குடும்பவன்முறை,
குடும்பத்தினுள் பால்நிலை சமத்துவமின்மை
கசிப்பு :உற்பத்தி, விநியோகம், விற்பனை,
போதைப்பொருள்  பாவனை, கடத்தல், விற்பனை
வயதுக்கு மீறிய முதிர்ச்சி,
வார்த்தைகளால் வதைபடுகின்ற அவலம்.
கட்டுக்கோப்பான சூழலற்று வாழும் சிறார்கள்


இன்னும் இன்னும் இன்னோரன்ன காரணங்கள், இவையெல்லாம் சிறார்களை மந்த நிலைக்கு இட்டுச் சென்றதுடன் கற்றலின் ஈா்ப்பினை குழிதோண்டிப் புதைத்திருக்கிறது. பிஞ்சுகளின் மனங்கள் இங்கே வெந்து கிடக்கிறது. பிள்ளை நிலாக்கள் ஒவ்வொன்றின் முகமும் ஓராயிரம் சோகக்கதை சொல்கிறது.
எண்ணெய் காணாத தலையும், ஏக்கம் சுமந்த ஈரப்பசையற்ற விழிகளுமாய் நிந்திக்கப்பட்டிருக்கிறது குழந்தைச் சமூகம். காலம் காலமாய் அவலப்  புதைகுழிக்குள் தள்ளிவிடும் அபாயமே இது.
தோப்புகள் பிரிந்து தனிமரங்களானது போல சிக்கல்களுக்குள் சிக்கிப்போய் ரணமாவது ஒரு சந்ததியின் வாழ்க்கையல்ல, மூன்று தலைமுறையின் காலம்.

சொந்த நிலங்களைப் பறித்துவிட்டு சோகத்தையும் கோரத்தையும் பரிசளிக்கின்ற இனவெறியாட்டம் இது. ஒழுக்கமும் ஒழுங்கும் தவறவைக்கப்படுகின்றது இங்கு. பாவம், இந்த குடியிருப்பு வாழ் மக்கள். தமக்குத் தெரியாமலே தாம் புதைகுழிக்குள் அமிழ்கின்ற அவலத்தை அனுபவிக்கின்றனா்.
இவா்களுக்கு எப்போது மீட்சி? என்று தீரும் இந்த அவலம்?

அன்புடன் தங்கை ,
குறுந்தொகை.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo“

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.