வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்கள் 491 பேருக்கு நிரந்தர நியமனம்!

வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றிய 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் என்ற வகையில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அடிப்படையில் 491 பேரை மேலும் தொண்டர் ஆசிரியர்களாக இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் ii ற்கு உள்வாங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 இதன்கீழ் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தும், க.பொ.த உயர்தரத்தை பூர்த்தி செய்தும், மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றி இருப்பின் ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் ii ற்கு நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


 30 வருட யுத்த சூழ்நிலை காரணமாக, இவர்களை உள்வாங்கும்போது வயது எல்லை 50 இற்கு மேற்படாமலும் 3 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றும் பொழுது அதில் நலன்புரி நிலையங்களில் இருந்த காலப்பகுதிகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டுமெனவும் 55 வீத வரவை பூர்த்தி செய்திருக்க வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நிபந்தனைகள் பொருந்தும் பட்சத்தில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 இதற்கு முன் 2011 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் என்ற முறையில் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் 639 தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 491 பேர் உள்வாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பது வட மாகாண அபிவிருத்தியில் இளைஞர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பு வழங்குவதற்கான வாய்ப்பாக அமைகின்றது. மேலும் இவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தரமான ஆசிரியர்களாக மாற்றப்படுவர் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
Powered by Blogger.