அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்பவற்றை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தனியார் வைத்தியத் துறையில் பட்டம் பெற்ற பல மாணவிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்ய முடியாமல் நிர்க்கதியான நிலையில் இருக்கின்றனர். சைட்டம் கல்லூரியில் பட்டம் பெற்ற காரணத்தினாலே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவர்களை பதிவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும் ஆதரவளித்து வருகின்றார். இந்த மாணவர்களை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பு வந்த பின்னர் இவர்கள் ஜனாதிபதியை சந்தித்து, இந்த மாணவர்கள் கொத்தலாவள பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற பின்னர் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர். அத்துடன் உயர் தரத்தில் எனது பெறுபேறுகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் சட்டக்கல்லூரியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டு பல்கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். அதனால் எமது பணம் வெளிநாட்டுக்கு சென்றது. ஆனால் இந்த மாணவர்கள் எமது நாட்டிலே படித்து பட்டம் பெற்றுள்ளனர். அதனால் எமது அந்நியச் செலாவணி பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.