எல்லா ஆளுமைகளும் ஒரு ஆசிரியனாகவும் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவன் மேஜர் இளநிலவன்!!

பயிற்சித் தளங்களில் பயிற்சி ஆசிரியனாய் மட்டுமல்லாது பயிற்சியாளனாய், ஒரு விளையாட்டு வீரனாய், சமையலாளனாய், கலைஞனாய், தொழில்நுட்ப வல்லுனனாய், போராளிகளின் அறிவுத் தேடலுக்குத் தீனி போடக்கூடிய நூலகமாய்... என எல்லா ஆளுமைகளும் நிறைந்த கவர்ச்சிகரமாக ஒரு ஆசிரியன் அவன்.
அவனது அந்த அற்புதமான பணியாற்றலுக்கு அவனின் அடிப்படை இயல்புகளும் ஒரு காரணமாய் இருந்தது. நிலவனின் குடும்பத்தில் அவன் மூத்தபிள்ளை. ஏனையவர்கள் மூவரும் பெண்கள். இவன் வீட்டிலிருந்த காலங்களிலேயே தங்கைகள் இருவர் போராடப் புறப்பட்டுவிட்டார்கள். இவையெல்லாம் அவனுள் ஒரு ஆழமான பொறுப்புணர்வை ஏற்படுத்தியிருந்ததுடன் கடுமையான பாசவலைக்குள் இருந்த அவனை ஏனையவர்கள் மீதும் பாசம் செலுத்தும் ஒரு மனிதனாகவும் ஆக்கி இருந்தது.
திருகோணமலையிலிருந்து தமிழீழத்தின் பெரும்பாலன இடங்களில் இடம் பெயர்ந்து வாழ்ந்த குடும்பம் அவனுடையது. அயல்நாடான இந்தியாவரை கூட அவர்கள் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்த வாழ்வு மூலமும் அவன் பெற்றிருந்த சமூக அறிவும் விரிந்த பார்வையை அவனுள் வளர்த்திருந்தது. எல்லா இன்னல்களுக்குள்ளும் தம் ஒரே புதல்வனைப் படிப்பித்து ஆளாக்கவேண்டும் என அவனது பெற்றோர்கள் எடுத்த முயற்சியால் அவன் சிறந்த கல்வியறிவைப் பெற்றிருந்தான். அவனது குடும்பத்திற்கென இயல்பாகவே இருந்த சமூக ஈடுபாடும் வாசிப்புப் பழக்கமும் கூட இவனுள் நிறையத் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.அரந்த அரசியல், அறிவியல் அனுபவம் அவனுள் இருந்தது.
நிலவனின் ஆசிரியப்பணி தனியே பயிற்சி முகாம்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு போராளி புதிதாக இணைந்த குறுகிய நாட்களில் இருந்து அவன் போராடும் போர்க்களத்தின் முன்னணி நிலைவரை நிலவன் சுழன்றுகொண்டே இருப்பான். போராளிகள் குறுகிய காலத்துக்குள்ளேயே சடுதி யான சூழல் மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்த களச்சூழல் அவனது இந்தப் பணியை அத்தியாவசியமாக்கியது.
தான் உருவாக்கும் போராளிகளைத் தேடிப் பயிற்சி முகாம்களில் இருந்து வன்னியில் பரந்து விரிந்த போர்க்களங்கள் எங்கும் கால் நடையாகத் திரிவான் அந்த ஆசிரியன். அந்தக் காலத்தில் நாம் பயணிக்கும் பிரதான மான போக்குவரத்துச் சாதனமாக இருப்பது "அண்ணை வரட்டோ" என்பதுதான். வீதியால் போய்வரும் எந்த வாகனத்தையும் மறித்து அப்படிக் கேட்டுக்கேட்டு போய்ச்சேருவதையே போராளிகள் அவ்வாறு பகிடியாக அழைப்பார்கள். ஆனால் வன்னியின் போர்க்களங்களுக்கு 'அந்த வாகனத்தில்' மட்டும் போய்ச்சேர முட யாது. எந்தவொரு வாகனப் போக்குவரத்து மற்ற பலபத்துக் கிலோமீற்றர்களைக் கடப்பது 'நடராசா'வில்தான். அத்தகைய காலங்களிலெல்லாம் ஓய்வற்று இயங்குவான் நிலவன்.
நிலவனுக்கு தான் ஆற்றும் பணியில் ஈடுபாடு அதிகம் இருந்தாலும் மனரீதியாக அடைந்த வேதனைகளும் நெருக்கடிகளும் ஏராளம். அந்தத் துன்பகரமான உணர்வுகளுக்குள் அவன் அடிக்கடி உழல்வதைப் பார்த்திருக்கிறேன். தான் வளர்த்தெடுத்த போராளிகள் மிகக் குறுகிய காலத்திலேயே களங்களில் வீழ்ந்து உயிர்விடும் வேளைகளில் எல்லாம் அவன் துன்பத்தில் துவண்டு போவான். வெறுமனே மரணங்கள் தரும் வேதனைகளுக்கும் அப்பால் ஒவ்வொரு போராளியிலும் அவன் ஆழமாகக் கொண்டிருக்கும் உறவு அதை மேலும் அதிகப்படுத்தும்.
பலபோராளிகள் தமது தனிப்பட்ட சோகங்களை ஒப்புவிக்கும் இடமாக நிலவனின் இதயம் இருக்கும். அவற்றையெல்லாம உள்வாங்கி ஆறுதல்படுத்திவிட்டுத் தனியே இருந்து வதைபடும் அவனை அருகிலிருந்தவர்கள் அறிவார்கள். அப்படியான இதயம் படைத்தவனாக அவன் இருந்ததால்தான் தனது பணிக்கும் மேலதிகமாக இன்னுமொரு பணியையும் அவன் ஆற்றினான். வீரச்சாவடைந்த தனது போராளிகளின் வீடுதேடிச் சென்று அவர்களை ஆறுதல் படுத்துவதுதான் அது. அதற்காக அவனது பயணிக்கும் தூரம் இன்னுமின்னும் அதிகரித்தது.
அவனது வலிய கால்கள் சலிப் பின்றி எங்கும் நடந்து திரிந்தன. மென்மையான இதயம் வலிமையான சோகங்களையெல்லாம் தாங்கியது. துப்பாக்கிகளோடு மட்டும் இயங்கும் மனிதனாக இல்லாது ஏனையவர்களின் துயரங்களைத் தாங்கும் போராளியாகவும் அவன் இருந்தான். தனது மனதில் குடிகொள்ளும் துயரங்களை அகற்றிவிடும் எந்தவொரு 'மந்திரத்தையும்' அவன் வைத்திருந்ததாக நான் அறியவில்லை. எல்லாவற்றையும் அவனது இதயம் தனக்குள் அடக்கி அடக்கிக் கொண்டே இருந்தது. அதனால்தான் எங்காவது சண்டைகள் என்றால் களத்தின் முன்னணிக்குச் சென்று சமரிடும் சந்தர்ப்பத்திற்காகத் தனது பொறுப்பாளருடன் சண்டைபிடிப்பான். அதன்மூலம் அவன் பல சந்தர்ப்பங்களையும் பெற்றான்.
நாடோடியாக எங்கும் அலைந்து திரியும் நிலவன் முகாமுக்கு வந்துவிட்டால் அங்கிருப்பவர்களுக்கெல்லாம் குதூகலம் தான். அவன் அங்கிருந்தால் நல்ல சமையல் இருக்கும். இனிமையான சண்டைகள் இருக்கும். ஆரோக்கியமான பகிர்வுகள் இருக்கும். எல்லாவற்றையும் தரும் 'அட்சய பாத்திரம்' அவன்.
அப்போது நாங்கள் பத்துப்பேர் கற்கைநெறி ஒன்றிற்காக ஒரு முகாமில் தங்கியிருந்தோம். எங்களைப் பொறுத்தவரை நிலவன் ஒரு மூத்த சகோதரன். எல்லோரை விடவும் அவன்தான் வயதில் மூத்தவன். அறிவாலும் அனுபவத்தாலும் கூடவேதான். அப்போதெல்லாம் எமக்கு ஆறுதலாகவும், ஆலோசகனாகவும் இருந்தவன் அவன்தான்.
நெருக்கடியான அந்தக் காலம் உணவுக்கு மிகவும் மோசமான காலம். வாய் கொடுப்பதற்குக் கடினமான கஞ்சியுடன் ஆரம்பமாகும் உணவை மூன்று வேளையும் உண்டு முடிப்பதே பல சமயங்களில் பெரும் பாடாகி விடும். நிலவன்தான் எமக்கு உள்ளூரில் கிடைக்கும் மலிவான பொருட்களுடன் உணவுக்கு மேலதிக சுவையூட்டும் தந்திரங்களைக் கற்றுத்தந்தான். காலைக் கஞ்சிக்கு இலை குழைகளில் சம்பல் அரைத்தும், பனம் பழத்தைப் பிழிந்துவிட்டுச் சுவையூட்டியும் அந்த உணவை வயிற்றுள் இறக்க வழி சொல்லித் தந்தான். வேட்டைக்குப்போய் இறைச்சி கொண்டுவந்து அதை நாம் என்றுமே அனுபவித்திராத சுவைதரும் கறியாக்கித் தருவான். நிலவன் சமையலில் கெட்டிக்காரன் என்று அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.
நிலவனின் வளர்ச்சி ஆறுவருடப் போராட்ட வாழ்வில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அனுபவத்தில் அவன் முதிர்ச்சியானதொரு நிலையை எட்டிக் கொண்டிருந்தான் நூற்றுக்கணக்கான மனித மனங்களை நெருக்கமாகக் கையாண்ட அனுபவம் அவனைப் பாரிய அளவில் வளர்த்துவிட்டிருந்தது. அவனது பொறுப்பாளரின் எதிர்கால நம்பிக்கைகளுள் ஒருவனாய் அவன் இருந்தான். அவனது முதிர்ச்சி நிலைக்கும் காலத் தின் தேவைக்கும் ஏற்ப வேறு ஒரு பணி காத்திருந்தது.
அது 2001ஆம் ஆண்டு காலப் பகுதி. 'ஓயாத அலைகள் - 03' முடிந்து எதிரியின் நடவடிக்கைகள் வட போர்முனையில் தீவிரம் பெற்றிருந்தன. தீச்சுவாலையின் பின்னும் ஆனையிறவு போர்முழக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அரசியல்துறையில் இருந்து போராளிகள் திரட்டப்பட்டுச் சண்டையணியொன்று தயார்படுத்தப்பட்டது. புதிய பணியொன்றைப் பொறுப்பேற்பதற்காக அப்போது தான் அரசியல்துறை பொறுப்பாளரால் அழைக்கப்பட்டிருந்த நிலவன் உடனடியாக அணியொன்றின் தலைவனாக நியமனம் பெற்று களத்திற்குச் சென்றான். எதிரியின் நடவடிக்கை விரைவிலேயே முடிந்துபோக போராளிகளை பணிகளுக்காக மீள எடுப்பதே திட்டமாக இருந்தது.
போர்க்களம் பெரும் எதிர்ச் சமருக்காகத் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. எப்போதும் போலவே ஓய்வின்றி உழைத்தான் நிலவன். 2001.08.16 அன்று அதிகாலை. பெரும் ஆரவாரத்துடன் எறிகணைகள் எமது நிலைகளை நோக்கிச் சரமாரியாகப் பொழியப் பட்டுக்கொண்டிருந்தன. பெரும் எறிகணைச் சமர் ஒன்று எதிரிக்கும் எமக்குமிடையே மூண்டுவிட்டது. எதிரி அணிகளின் வரவை எதிர்பார்த்திருந்தனர் போராளிகள். ஆனால் சிறிது நேரத்தில் அந்த ஆரவாரம் அடங்கிப் போனது. முன்னேறும் தனது திட்டத்தை எதிரி கைவிட்டிருந்தான். எமது எல்லா வீரர்களும் உயிரோடு இருந்தார்கள், நிலவனைத் தவிர. அந்தச் செய்தி எமது முகாமிற்கு வந்தபோது எவரும் இன்றியிருந்த அந்தப் 'பேய் வீட்டில்' ஓயாத அந்த உழைப்பாளிக்காகச் சிறிது நாட்களின் முன்னர்தான் வந்திருந்த துவிச்சக்கரவண்டி மட்டும் அழுதுகொண்டிருந்தது.
Powered by Blogger.