இழப்பின் ரணங்களை விழியோரம் ஏந்தி!!

நானும் யாழ் மீட்டினேன் என்
இளமைக காலங்களில்
வசந்த காலத்தை மீட்டு ரசித்தேன்
வான வில்லின் வண்ணமாய் நான்
மேகமவள் தரையிறங்க
என் மேனி கொண்டு ஏணி செய்தே
வண்ண மயில் நானாடினேன்
பருவ மங்கை பளபளக்க
புல்லாங்குழலில் என் இதழ் அழுத்தி
அசை போட்டே ஓர்  மெட்டெடுத்தேன்

பல நாழிகைகளின் பின் ஒப்புவிக்கப்பட்ட
வெறுமையின் அந்தரங்கங்களை
கடந்து செல்ல....

கண்ணீர் துளிகளை
சில  கருவிலே சில கழிவறையிலே என
புதைத்துக் கொண்டேன்
இழப்பின் ரணங்களை
விழியோரம் ஏந்திக்கொண்டேன்
இயற்கையான புன்னகையில்
புரையோடிய கீறல்களை
கால மகளிடம் ஒப்புவித்தேன்
நல விசாரிப்பு வினாடிகளை
அமைதியாக அணுகிக்கொண்டே
பொட்டலமிட்டு பாதுகாக்கிறேன்
வாழ்வின் யதார்த்தம் புரிந்த ஓர்
மேதை போல

தமிழ் நதி
Powered by Blogger.