ஐபிஎல்: பலத்தை நிரூபித்த கொல்கத்தா அணி!!!

ஐபிஎல்லின் 12ஆவது தொடரில் கொல்கத்தா அணி தொடர்ச்சியாகத் தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (மார்ச் 27) நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட பஞ்சாப் அணியின் வருண் சக்கரவர்த்தி அறிமுக போட்டியில் களமிறங்கினார். டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.
பெரியளவில் இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபடவில்லை என்ற போதும் பின்னர் வந்த ராபின் உத்தப்பாவும், நிதிஷ் ரானாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தனர்.
அதிரடியாக ஆடிய நிதிஷ் ரானா 34 பந்துகளில் 7 சிக்சர், 2 பவுண்டரியுடன் 63 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் ஆடிய ராபின் உத்தப்பாவுடன் ஆண்ட்ரூ ரஸல் இணைந்து அதிரடி காட்டினார். அவர் 17 பந்தில் 5 சிக்ஸரும், 3 பவுண்டரியும் அடித்து 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்களை எடுத்தது. ராபின் உத்தப்பா 67 ரன்களும், தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஹார்டஸ் வில்ஜோன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல்.ராகுலும் களம் இறங்கினர். 5 பந்தை சந்தித்த ராகுல் ஒரு ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மயாங்க் அகர்வால் கெயிலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில் ரஸல் வீசிய ஓவரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெயில் 20 ரன்கள் எடுத்திருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த சர்பிராஸ் கான் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் வீக்கெட்டுகள் சரிந்தாலும் மயாங்க் அகர்வால் அரை சதம் அடித்து அசத்தினார். 58 ரன்கள் எடுத்திருந்தபோது சாவ்லா பந்துவீச்சில் அவரும் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வந்த டேவிட் மில்லரும், மந்தீப் சிங்கும் பொறுப்புடன் ஆடி ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேவிட் மில்லர் 59 ரன்களுடனும் மந்தீப் சிங் 31 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
கொல்கத்தா அணியின் ரஸல் 17 பந்துகளில் 48 ரன்கள் அடித்ததுடன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.