நோர்வே ஈழத்து கலைஞர்களை உள்வாங்கி நாடகக் கலைக்கு கொடுக்கின்றது முக்கியத்துவம்!

காட்சியூடக தொழில் நுட்பம் இத்தனை துரிதகதியில் பல்கிப்பெருகியுள்ள நிலையிலும் நாடகங்கள் பார்வையாளர் நிறைந்த அரங்குகளைத் தொடர்ச்சியாகக் கண்டுவருகின்றன.
வரலாற்று ரீதியாக நாடக அரங்கியல் துறையில் நோர்வேக்கு தனித்துவம் உண்டு. நோர்வேயின் கலை பண்பாட்டு அமைச்சகத்தால் பெரும் நிதி நாடுதழுவிய ரீதியில் இதற்கென ஒதுக்கப்படுகின்றது.
நாடக - அரங்கியல் கலைப்படைப்புகள் உயிர்ப்போடும் புத்தாக்கப் பரிமாணங்களோடும் தொழில்நுட்ப பிரமாண்டங்களோடும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் இரண்டு நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒன்று சிறுவர் நாடகம். அது 'இசை நாடக' வடிவம். மற்றையது இளையவர்களுக்கானது. அதன் வடிவமும் பேசுபொருளும் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. அது பற்றித் தனிக்குறிப்பொன்றினை எழுதவுள்ளேன்.
இந்த்ச் சிறுவர் 'இசை நாடகம்' நாம் வசிக்கும் Nittedal நகர அரங்கக் கலைச் செயற்பாட்டு மையத்தினால் (Nittedal Theatre) உருவாக்கப்பட்டதாகும். சிறார்கள், இளையோர் , பெரியவர்களுக்கான தனித்தனி அரங்கப் பிரிவுகளும் பயிற்சி வகுப்புகளும் இம்மையத்தினால் நடாத்தப்படுகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு நாடகங்கள் மேடையேற்றப்பட்டும் வருகின்றன.
சிறுவர் நாடகத்தின் நீளம் இரண்டு மணித்தியாலங்கள். 50இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் பங்கேற்றிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் 8 முதல் 10 வயதிற்கு இடைப்பட்டவர்கள். கடந்த ஞாயிறு இரண்டு தடவைகள் மேடையேற்றப்பட்டது. இரண்டு தடவைகளும் 350 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிறைந்திருந்தது.
இதில் எமது மகன் கதிர் பங்கேற்றிருந்தார் என்பதில் மகிழ்ச்சி. கடந்த ஆறு மாதங்களாக நாடக வகுப்புகளுக்குச் சென்று வருகின்றார்.
இதற்குரிய ஒத்திகை, பயிற்சிகள் 6 மாதத்திற்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டன. வாரத்தில் ஒரு நாள் ஒன்றரை மணி நேரம் ஒத்திகைகள் நடைபெற்றன. இறுதி மூன்று வாரங்கள் ஒவ்வொரு நாளும் 5 மணி நேர பயிற்சி ஒத்திகை இடம்பெற்றன.
ஒப்பனை, உடைகள், அரங்கப் பொருட்கள், அரங்க அமைப்பிற்கு பெற்றோர்களைக் கொண்ட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பொறுப்புகள் பகிரப்பட்டன.
தேர்ந்த நாடகக் கலைஞர்களும் நெறியாளர்களும் இணைந்து பிள்ளைகளுக்கான நடிப்புப்பயிற்சி மற்றும் காட்சியமைப்புகளை நெறிப்படுத்தினர்.
இந்த இசை நாடகம் பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. நாடகம் முழுவதும் நகைச்சுவை இழையோடியிருக்கின்றது.
பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறவிடாத அழகியலும், நேர்த்தியான காட்சியமைப்புகளும், விறுவிறுப்பும், இசையும், ஒளியும் இருந்தன.
எல்லாவற்றிற்கும் மேலாக சிறார்களின் இயல்பான நடிப்பாற்றலும் உடல்மொழியும் அலாதியான காட்சியனுபவத்தைத் தந்தது.
கருத்துகள் இல்லை