தேசிய மகளிர் ஆணையத்தில் சின்மயி புகார்!

மீ டூ விவகாரத்தில் வைரமுத்து மீது தேசிய மகளிர் ஆணையத்தில் சின்மயி புகாரளித்துள்ளார்.
வைரமுத்து மீதான மீ டூ புகார் விவகாரம் தொடர்பாக ஓரிரு நாட்களுக்கு முன்பு பாடகி சின்மயி மத்திய மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தியிடம் ட்விட்டரில் புகார் அளித்தார். மேனகா காந்தியை டேக் செய்து சின்மயி பதிவுட்டுள்ள ட்வீட்டில், “வைரமுத்து மீது நான் புகாரளித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா துறையிலிருந்து (டப்பிங் யூனியன்) நான் விலக்கப்பட்டுள்ளேன். வழக்குப் பதிவு செய்வதற்கு இன்றைய சட்டம் எனக்கு அனுமதியளிப்பதில்லை. எனக்கு ஒரு தீர்வளியுங்கள்” என்று கோரியிருந்தார்.
சின்மயி ட்வீட்டுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி அளித்த பதில் ட்வீட்டில், “உங்களது புகாரை தேசிய மகளிர் ஆணையத்திடம் எடுத்துச் சென்றுள்ளேன். உங்களது விவரங்களை மெசேஜ் அனுப்பவும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், வைரமுத்து மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில், “வைரமுத்து மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் பதிவு செய்துள்ளேன். தற்போதைய நிலையில் சட்டரீதியாக இந்த முயற்சியை மட்டுமே என்னால் மேற்கொள்ள முடியும். இந்தப் பிரச்சினையில் தீர்வு கிடைப்பதற்கு தேசிய மகளிர் ஆணையமும் மேனகா காந்தியும் எனக்கு உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.