ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைக் கண்காணிக்க ரிசர்ச் செல்: ராஜ்நாத் சிங்!
தீவிரவாதம் வளர்வதற்குத் தீவிரவாதிகளுக்குக் கிடைக்கும் நிதி முக்கியக் காரணியாக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் திறப்பு விழா கவுகாத்தியில் இன்று (மார்ச் 1) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு குடியிருப்புகளை திறந்துவைத்து ராஜ்நாத் சிங் பேசுகையில், “தீவிரவாதத்தை ஊக்குவிப்பதில் அவர்களுக்குக் கிடைக்கும் நிதி முக்கியப் பங்கு வகிக்கிறது. என்.ஐ.ஏவின் சிறப்பான செயல்பாடுகளால் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி முந்தைய ஆண்டுகளை விட கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போலி நோட்டுகள் புழக்கமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
என்.ஐ.ஏவினருக்கு கவுகாத்தியில் 9,830 சதுர மீட்டரில் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் அமைக்க ரூ.77 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கவுகாத்தியைப் போல ஹைதராபாத்திலும் என்.ஐ.ஏ. ஊழியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 12,572 சதுர மீட்டரில் ரூ.40 கோடி செலவில் இதன் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. என்.ஐ.ஏவினரின் கண்காணிப்பு மற்றும் ஆய்வை தீவிரப்படுத்த புதிதாக 100 பணியிடங்கள் உருவாக்கப்படும்” என்றார்.
அதுமட்டுமின்றி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைக் கண்காணிக்க ஆராய்ச்சி கூடம் அமைக்க என்.ஐ.ஏ.வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை