எலும்புக்கூடுகள் உண்மை பேசுமா??

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் குடிநீர்க்குழாய் பொருத்துவற்காக தோண்டப்பட்ட குழியில் மனித எலும்புகள் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.  பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி தோண்டப்பட்ட போது    2015 வரை மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 55 ஆக காணப்பட்ட நிலையில் அந்த புதைகுழி தோன்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றுவரை அந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதனிடையே இந்த எலும்புகளோடு Ak  47 துப்பாக்கி ரவையும் மீட்கப்பட்டிருந்தது.

அடுத்ததாக மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த கட்டடம் உடைக்கப்பட்டு 'லங்கா சதொச'வுக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்ற போது அந்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆபரணங்கள்  மனித எச்சங்களுடன் காணப்பட்டாலும் உடைகள் எதுவும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படவில்லை.

 அத்துடன்  அந்த புதைகுழியில்அனைத்து உடல்களும் ஒன்றின் மேல் ஒன்றாக குவித்தே புதைகுழி மூடப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டன என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது.  சில எச்சங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டும் புதைக்கப்பட்டுள்ளது.

 இந்த அகழ்வின் போது பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானை துண்டுகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டன.

 கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில்  இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், தெரிவு செய்யப்பட்ட 6 எலும்பக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டு, புளோரிடாவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளில்  29 கூடுகள் சிறுவர்கள் உடையதாகும்.

 மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1404 முதல் 1450 ஆண்டிற்குற்பட்டவையாக இருப்பதற்கான 95 வீத சாத்தியக்கூறுகள் உள்ளன என புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 1417 முதல் 1440 ஆண்டிற்குபட்டவையாயிருப்பதற்கான 68 வீத வாய்ப்புகள் உள்ளதாகவும் புளோரிடா ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறு இருக்க நம்முள் எழுகின்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை தான்.  விடையும் காணமுடியாதவை.

1)  500 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் அத்திவாரம் வெட்டும் ஆழத்தில் இருக்குமா??

2)திருக்கேதீஸ்வரத்தில் 55 எலும்புகளும் மன்னார் நகரில் 335 எலும்புகளும் மீட்கப்பட்ட நிலையில் வெறும் 6 என்புகள் மட்டும் அனுப்பி ஆய்வு மேற்கொண்டமை சரியா?

3) திருக்கேதீஸ்வரம் புதைகுழியில்   Ak 47 ரவைகளும் மன்னார் நகர புதைகுழியில் 1996 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட  பிஸ்கட் பைக்கட்டும் இருந்துள்ளன. எனின் அவை பற்றி கருத்திலெடுக்காமை ஏன்??

4) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் தொடர்பாக ஏன் ஆய்வு செய்யப்படவில்லை??

6) மன்னார் நகர புதைகுழி எலும்பிலுள்ள உலோகம் கைவிலங்கு போன்றே உள்ளது. அப்படியாயின் 500 வருடங்களுக்கு முன்னரே விலங்கு போடும் நடைமுறை இருந்ததா??

7) மன்னார் நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவில்  ஏற்கனவே சங்கிலிய மன்னனால் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மதமாற்றிகளின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதனால்  ஆய்வுக்காக அனுப்பப்பட்ட எலும்புகள் அந்த எலும்புகளாக ஏன் இருக்க முடியாது??

8) ஆய்வுகளின் முடிவு சரியானது தான். ஆனால் அனுப்பப்பட்ட எலும்புகள் தொடர்பாக உரிய விவரங்கள் வெளியிடாததும் வெளிப்படைத் தன்மை இல்லாமலும் மேற்கொள்ளப்பட்டமை ஏன்??

9)  உலோகம்  கடலினுள்ளோ அல்லது பனிக்கட்டியினுள்ளோ உக்காமல் இருக்கும். ஆனால் மண்ணில் அது எவ்வாறு 500 வருடங்கள் உக்காமல் இருந்திருக்கும்??

10) 2017 கண்டுபிடிக்கப்பட்ட மன்னார் நகர புதைகுழி என்புகள் ஆய்வுக்கு அனுப்பியவர்கள் 2013 கண்டுபிடிக்கப்ப்பட்ட திருக்கேதீஸ்வரம் புதைகுழி தொடர்பாக ஆய்வுக்கு அனுப்பாது இழுத்தடிப்பது ஏன்??

11) 500 வருடங்கள் பழமையான புதைகுழி எனின் தோண்டப்படும் போது தொல்லியல் சான்றுகள் ஒன்று கூட மீட்கப்படவில்லை ஏன்??

12) மண்டை ஓடுகளில் உள்ள பற்கள் 500 வருடங்கள் எவ்வாறு உக்காமல் இருந்திருக்கும்???

13) மண்டை ஓடுகளில் துப்பாக்கி ரவை துளைத்த துளைகளும் உள்ளன.  எனில் 500 வருடத்துக்கு முன்னர் துப்பாக்கி வைத்து கொலை செய்தவர்கள் யார்?

14) இன்னும் தோண்டினால் எலும்புகள் வரும் என்ற நிலையில்  வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்து ஆய்வுசெய்ய ஏன் முடியவில்லை..?

15) அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சரியானது என இலங்கை  நீதித்துறை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொண்டது??

16) 500 வருடங்களுக்கு முன்னரே Ak 47 பாவனையில் இருந்ததா?

17) சிறுவர்கள் கொல்லப்பட்டதாக 500 வருட வரலாற்று குறிப்புகள் எதிலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா??

இந்த கேள்விகளுக்கு விடை இறந்த எலும்புக்கூடுகள் எழுந்து பேசினால் மட்டுமே கிடைக்கும்.

மன்னார் புதைகுழி விடயத்தில் நாம் ஏமாந்திருப்பதையும் சேர்த்தால்  இது வரை பல தடவைகள் ஆட்சியாளர்களிடமும் , சர்வதேசத்திடமும் நம்பி  ஏமாந்து போனவர்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதை மட்டும் தான் உணர முடிகிறது.

தமிழ் அரசியல் தலைமைகள் இலங்கைக்கு எதிரான எந்த விடயமாக இருந்தாலும் அரசின் பக்கம் நின்று அரசைக் காப்பாற்றவே முனைகிறது. இவ்வாறு இருக்கும் போது நீதியான நியாயமான தீர்வுகள் கிடைக்கும் என நாம் எவ்வாறு நம்ப முடியும்.. இவர்கள் தலைவர்களாக இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. மாறாக சிங்கள மக்கள் தான் நன்மைகளை அனுபவிக்கிறார்கள்...

மன்னார் புதைகுழி  500 வருட பழமையானது என கூறிய ஆய்வு முடிவுகள் நாளை அகழப்படப்போகும் புதிய புதைகுழிகள் கிறிஸ்துவிற்கு முற்பட்டது என்று   வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது தான்.

ஏமாற்றமே தொடர்கதையாகி போன ஈழத்தமிழர் வாழ்க்கை மெல்ல மெல்ல சாகத்தான் போகிறது...
எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..

-ப.நிரஞ்சன்-
09.03.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.